Home கட்டுரைமுடிவடையாத புன்னகையின் முடிவு – சலிம்குமாருக்கு அஞ்சலி

முடிவடையாத புன்னகையின் முடிவு – சலிம்குமாருக்கு அஞ்சலி

0 comments

மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்த மாபெரும் கலைஞனான சலிம்குமார், நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில், தனது மிகச் சிறப்பான நடிப்பின் வழியே மனித மனங்களின் சோகத்தையும், வலியையும் நேர்த்தியுடன் கடத்த முடியும் என்று நிரூபித்த மகாகலைஞன்.

கொச்சி ‘கலாபவன்‘ குழுவில் இணைந்த பின்னர் தனது அசாத்தியத் திறமையால் மக்களின் கவனத்தை ஈர்த்த அவர், ஏசியாநெட் தொலைக்காட்சியின் ‘காமிகோலா‘ நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ‘பாரடி‘ என்ற பெயரில் ஏசியாநெட் நிகழ்ச்சிகளையே கலாய்த்துத் தள்ளியவர் அவர்.

இஷ்டமானு நூறுவட்டம்” படத்தின் வழியே மலையாளத் திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது உடல்மொழி, முகபாவனை, தனித்துவமான குரல் மற்றும் ‘டைமிங்’ நகைச்சுவை ஆகியவற்றால் திரையரங்குகளை அதிர வைத்தவர் அவர். 90களில் சிறிய வேடங்களில் கவனம் ஈர்த்தாலும் 2000 ஆண்டிற்குப் பின் நகைச்சுவையால் கதகளி ஆடிய சலீம் குமாரின் வசனங்கள், சமூக ஊடகங்களில் இன்றும் பெரும் கவனத்தை ஈர்ப்பவை.

‘தென்காசிப்பட்டணத்தில்’ முத்துராமன், ‘கல்யாண ராமனில்’ ப்யாரி, ‘புலிவால் கல்யாணத்தில்’ மணவாளன், ‘மாயாவி’ யில் மம்மூட்டியையே அதிர வைத்த குட்டி ஸ்ராங்கு, ‘சதிக்காத்த சந்து’வில் நடன இயக்குநர் ( மைக்கேல் ஜாக்சனாக வரும் காட்சிகளெல்லாம் அதிரடி ) , ‘ஈ பறக்கும் தளிக’யில் கோஷி, ‘மீச மாதவனில்’ முகுந்தன் உண்ணி என்று எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். நகைச்சுவையால் மலையாளிகளைக் கட்டிப் போட்ட இந்தக் கதா பாத்திரங்கள் என்றும் மலையாளிகளின் மனதை விட்டு நீங்காமல் தங்கியிருக்கும்.

ஆனால், சிரிப்பில் மட்டுமே ஒதுங்கி விடாமல் எதிர்நாயகன், நாயகன், கதாசிரியன், இயக்குநர் போன்ற பன்முகத்தன்மைதான் சலீம் குமாரைப் பிற கலைஞர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்துகிறது.

ஆதாமிண்டெ மகன் அபு“வாக வாழ்ந்து காட்டியவர். “அச்சனுறங்காத்த வீட்டில்” தன் நடிப்பின் முத்திரை பதித்தவர். இரண்டு படங்களுக்காகவும் கேரள அரசின் விருதினைப் பெற்றவர். அபுவாக வாழ்ந்ததற்கு நடுவண் அரசின் விருதையும் வென்றவர்.

திரைக்கு வெளியிலும் எளிமையாகவும் இயல்பாகவும் பழகும் மனிதர். மனதில் பட்டதைத் தயங்காமல் பொதுவெளிகளில் சொல்லும் தைரியம் அவருக்கிருந்தது.

தானம் வழங்குவதில் அவருக்கு இணை எவரும் இல்லை. அதைக் குறித்து, “எல்லோரும் தங்கள் சம்பாத்தியத்தில் 10 சதவீதம் அல்லது 20 சதவீதம்தான் தானம் செய்வார்கள். நான் என் சம்பாத்தியத்தின் 100 சதவீதத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து விடுவேன். என் மனைவியும் மக்களும் மகா ஏழைகள்” என்று பொதுவெளியில் சொல்லும் அளவுக்கு நேர்மையான கலைஞன். இந்த வெளிப்படைத்தன்மைதான் ரசிகர்கள் சலிம்குமாரைக் கொண்டாடக் காரணமாகிறது.

மிமிக்ரியில் தொடங்கி, நகைச்சுவை நடிகனாகப் படர்ந்து பந்தலிட்டு வளர்ந்து நடிப்பின் மூலம் அசர வைத்த எளிய மனிதர்களின் அன்றாடத்தில் ஒருவனாகிப் போன சலீம்குமாரின் மரணம் கலையுலகின் தவிர்க்க முடியாத இழப்புதான்.

“நம்மைச் சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும், அழ வைக்கவும் தெரிந்த சலீம், இன்று நம்மை அழமட்டும் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.” என்று தனது அஞ்சலிக் குறிப்பில் மம்மூக்கா குறிப்பிட்டிருப்பது நூறு சதவீதம் உண்மை.

ஆள்பவர்களால் நாடே சிரிப்பாய் சிரிக்கும்போது என் தேவை இனி இல்லை என்று இவ்வளவு சீக்கிரம் விடைபெற்றிருக்க வேண்டாம் சலிம் குமார்.

அஞ்சலி

Author

  • ஆசிஃப் மீரான், வளைகுடா தமிழ்ச் சமூகம் நடத்தும் "பண்புடன்" பத்திரிகையின் ஆசிரியர்.  சமூக யதார்த்தங்கள் கொண்டு புனைவுகள் எழுதுபவர்.  'கானல் அமீரகம்' எனும் அமைப்பின் வழியே தமிழ் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துபவர்.

You may also like

Leave a Comment