Home தொடர்மருத்துவர் பக்கம் – 31: வென்டிலேட்டர் சிகிச்சை

மருத்துவர் பக்கம் – 31: வென்டிலேட்டர் சிகிச்சை

by Farooq Abdullah
0 comments

வென்டிலேட்டர் சிகிச்சை ஏமாற்று வேலையா?

நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று – வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை, வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற சிகிச்சை என்றும், இன்னும் சில திரைப்படங்களில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இறந்தவர்களை வைத்தே போலியாக நாடகமாடுவது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டமையால் அந்த சிகிச்சை குறித்துப் பல அவநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. அவற்றைக் களைவதே இன்றைய கட்டுரையின் பணியாகும்.

வென்டிலேட்டர் எப்படி செயல்படுகிறது?

பொதுவாக ஒரு அறைக்குள் புதிய காற்று உள்ளே வந்து, பழைய காற்று வெளியே செல்வதை “வென்டிலேசன்” (காற்று சுழற்சி) என்று கூறக் கேட்டிருப்போம். இதைப் போன்றே நமது உடலிலும் ஆக்சிஜன் நிரம்பிய புதிய காற்று உள்ளே வந்து, கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய பழைய காற்று வெளியே செல்வது நம் உயிர் வாழ்வுக்குத் தேவையான முக்கியமான காற்று சுழற்சியாகும்.

நமது உடலில் காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றுவதும், ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும் என ஒரு ஓய்வறியா சலவைக்காரரின் பணியைச் செய்பவை நமது நுரையீரல்கள். இந்த நுரையீரல்கள் செவ்வனே அதன் பணியைச் செய்வதற்கு இரண்டு விஷயங்கள் தேவை.

  • முதல் விஷயம்: காற்று உள்சென்று வெளியேறத் தேவையான தங்குதடையற்ற சுவாசப்பாதை.
  • இரண்டாவது விஷயம்: நுரையீரல் காற்றை உள்ளே இழுக்கவும் வெளிவிடவும், உதரவிதானம் மற்றும் நெஞ்சாங்கூட்டுத் தசைகளின் இயக்கம் இன்றியமையாத தேவையாகிறது.

பல நேரங்களில், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா போன்ற கொடுந்தொற்றுகளின் காரணமாக, அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ரத்தத்தில் ஆக்சிஜன் ஏற்றப்படுவது முறையாக நடக்காமல் போகும்.

நுரையீரலில் நீர் தேங்குதல், தீவிர ஆஸ்துமா நிலை, மஸ்குலார் டிஸ்ட்ரோபி போன்ற தசைகளின் செயலிழப்பை ஏற்படுத்தும் நோய்கள், இதய செயல் முடக்கம், சுவாச செயல் முடக்கம், அறுவை சிகிச்சைகள், சுவாசப்பாதையில் ஏதேனும் பொருள் சிக்கிக் கொள்ளுதல், நினைவு மங்கி மூர்ச்சை நிலைக்குச் செல்வது என்று பல காரணங்களினால் சுவாசித்தல் என்பது இயற்கையாக நிகழாமல் போகின்றது.

இந்நிலையில் உடனடியாக சி.பி.ஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) எனும் இதய சுவாச செயல் மீட்பு முதலுதவியைச் செய்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடனடியாக அவரது உயிரைக் காக்கும் உன்னத சிகிச்சையாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுகின்றன.

வென்டிலேட்டர் என்பது உதரவிதானமும் நெஞ்சாங்கூட்டுத் தசைகளும் செய்த வேலையான காற்று உள்ளிழுத்து வெளிவிடும் காற்று சுழற்சிக்குச் செயற்கையான முறையில் உதவுகின்றது. வென்டிலேட்டரில் போட்டு விட்டாலே கதை முடிந்தது என்று பரப்பப்படும் கட்டுக்கதைகளை நம்ப வேண்டியதில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செயற்கை சுவாசக் கருவிகளில் பொருத்தப்படும் பயனாளிகளில் பெரும்பான்மையினர் விரைவில் நலம் பெற்றுத் தங்களது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்புகின்றனர் என்பதே உண்மை. நுரையீரல் இயற்கையாக சுவாசிக்கும் திறனைப் பெறும் மட்டும், தற்காலிகமாக அதன் இயக்கு தசைகளுக்கு ஓய்வு வழங்கும் பணியை மட்டுமே வென்டிலேட்டர் செய்கிறது.

எனவே, இறந்த ஒரு நபரை வென்டிலேட்டரில் போலியாகப் பொருத்தி வைப்பது என்பது இயலாத காரியமாகும். வென்டிலேட்டரால் இதயத்தைத் துடிக்கச் செய்யவோ, நுரையீரல் மூலம் நிகழும் ஆக்சிஜன்-கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றத்தையோ செய்ய இயலாது.

எனவே, உயிருடன் இருக்கும் நபர்களுக்கு, அதிலும் வென்டிலேட்டர் உதவியுடன் மீண்டு வருவார் என்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இறந்த ஒரு உடல் அடுத்த சில மணி நேரங்களில் ரைகர் மார்டிஸ் என்ற விரைத்துக் கொள்ளும் நிலையை அடையும். இந்தச் சூழ்நிலையில், இறந்த உடலுக்கு வென்டிலேட்டர் பொருத்துவது இயலாத காரியம். எனவே, திரைப்படங்களில் காட்சியின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு எடுக்கப்படும் காட்சிகளை நம்பி உயிர்காக்கும் வென்டிலேட்டர் சிகிச்சையை மறுத்துவிடக்கூடாது.

வென்டிலேட்டரைச் சுற்றியுள்ள அடுத்த மூடநம்பிக்கை – வென்டிலேட்டரில் போடப்பட்ட நபர் அதிலிருந்து வெளியே வருவது கடினம் என்பதாகும்.

உண்மையில், மயக்க மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது, ஒருவரை வென்டிலேட்டரில் பொருத்தும் போதே அவர்களைத் தொடர்ந்து துல்லியமாகக் கண்காணித்து எத்தனை விரைவாகவும் விவேகமாகவும் வென்டிலேட்டரில் இருந்து மறக்கடிப்பது என்பது குறித்தே சிந்திப்பார்கள்.

காற்று உட்புகும் அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப, பயனாளியின் தேக முன்னேற்றத்தைப் பொறுத்துப் படிப்படியாகக் குறைத்து வென்டிலேட்டரை நீக்குவார்கள். இதற்குப் பெயர் “வீனிங் (weaning)” மறக்கடித்தல்” என்பதாகும். எனவே, தேவையில்லாமல் வென்டிலேட்டரில் பயனாளியை வைத்திருப்பார்கள் என்ற வதந்தியில் மெய்த்துளிக்கூட இல்லை.

அவசிய தேவையின்றி வென்டிலேட்டரில் பயனாளியை வைத்திருக்கும் போது, வென்டிலேட்டர் பொருத்தியமையால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதைச் சிகிச்சை அளிக்கும் குழு உணர்ந்தே செயலாற்றுகின்றது.

நுரையீரலில் இருந்து நெஞ்சாங்கூட்டுக்குக் காற்றுக் கசிவு ஏற்படுதல் (நிமோதொராக்ஸ்), நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள், நீண்ட காலம் படுத்தே இருப்பதால் ஏற்படும் முதுகுப்பகுதி அழுத்தக் காயங்கள், கால்களின் ஆழ்சிரைகளில் ஏற்படும் ரத்த நாளக்கட்டிகள் ஆகியவற்றில் இருந்து பயனாளியைப் பாதுகாக்கும் பொருட்டு, உயிர்காக்கும் தேவைக்கு மீறி நீண்ட நாட்கள் வென்டிலேட்டர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.

நவீன கால வென்டிலேட்டர்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நுரையீரலுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படாத வண்ணம் சரியான அளவில் காற்றின் அளவு மற்றும் அழுத்தம் நிர்வகிக்கப்படுகிறது. தொடர்ந்து வென்டிலேட்டரின் செயல்முறை கண்காணிக்கப்பட்டுப் பயனாளியின் தேவைக்கு ஏற்ப அதன் இயக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் பயனாளிக்குத் தேவையான குறைந்தபட்ச அழுத்தம் மற்றும் அளவில் காற்று சுழற்சி நடந்து நுரையீரலின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

வென்டிலேட்டர் – உயிர்காக்கும் நவீன கண்டுபிடிப்பு

போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்காக “இரும்பு நுரையீரல்” எனும் பெயரில் 1930களில் இருந்து பயன்பாட்டுக்கு வந்த வென்டிலேட்டர்கள், தற்போது கணினிகள் துணைகொண்டு இயங்கும் தானியங்கி முறையில் நவீனமடைந்துள்ளன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவற்றின் உயிர்காக்கும் தன்மையைக் கண்கூடக் கண்டோம்.

கோவிட் வைரஸால் ஏற்பட்ட நிமோனியா குணமடையும் வரை பலரின் உயிர்களை உடல்களோடு ஒட்டி வைத்த பெரும் காரியத்தைச் செய்தவை வென்டிலேட்டர்கள். வென்டிலேட்டர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு உயிர்காக்கும் உன்னத சிகிச்சையை வழங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றிய அவதூறுகளை நம்பி, முக்கியமான நேரத்தைத் தாழ்த்தாமல், செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை குறித்துச் சரியான முடிவெடுப்போம்.

Author

You may also like

Leave a Comment