Home தொடர்உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி

0 comments
This entry is part 7 of 7 in the series உருதுக்கவிதை உலகு

இலக்கிய ஆளுமைகளின் பெயரிலும் அவர்களுடைய படைப்புகளின் பெயரிலும் இந்திய இரயில்வே சில தொடர்வண்டிகளுக்குப் பெயரிட்டுள்ளது.

கீதாஞ்சலி விரைவுவண்டி, குருதேவ் விரைவுவண்டி (இரவீந்திரநாத் தாகூர்),
காந்தாரி விரைவுவண்டி, அக்னிபினா விரைவுவண்டி (காஸி நஸ்ருல் இஸ்லாம்),
கோதான் விரைவுவண்டி (முன்ஷி பிரேம்சந்த்),
கானதேவ்தா விரைவுவண்டி (தாராஷங்கர் பந்தோபாத்யாய),
காமாயினி விரைவுவண்டி (ஜெய்ஷங்கர் பிரசாத்),
ஹத்தே பாஸாரே விரைவுவண்டி (பலாய்சந்த் முகோபாத்யாய)

இந்த வரிசையில் பொதுவுடைமைவாதி, கதாசிரியர், இந்தித் திரைப்பட வசனங்களில் மொழிச்செழுமையைக் கொண்டுவந்தவர்களுள் ஒருவர் எனப் புகழ்பெற்ற கவிஞர் கைஃபி ஆஸ்மியைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் ஒரு விரைவுவண்டி இயக்கப்படுகிறது. அது, கைஃபியின் சொந்த ஊரான ஆஸம்கரிலிருந்து பழைய தில்லி வரை சென்று திரும்பும் ‘கைஃபியாத் எக்ஸ்பிரஸ்’ (12225/12226) ஆகும்.

“தோன்றின் புகழோடு தோன்றுக” என்னும் வள்ளுவம் கைஃபிக்கும் பொருந்தும். வீட்டிலும் கவிஞர்கள் சூழ வளர்ந்த அவருக்குக் கவிதை இயல்பாக வந்தது. தன்னுடைய பதினொன்றாவது வயதில் ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. கைஃபி ஓரிரு வரிகள் கவிதை வாசிக்காமல், ஒரு முழு கஜலையே வாசித்து முடித்தார். தன்னுடைய அண்ணனின் கவிதையைத்தான் அவர் வாசிக்கிறாரோ எனத் தந்தையே சந்தேகப்படும் அளவுக்கு அக்கவிதை மிகச் சிறப்பாக இருந்தது. பிறகு, அது தன்னுடைய கவிதை அல்ல என்று அண்ணன் சொன்னதும், கைஃபியின் திறனைச் சோதித்து உறுதிப்படுத்த அவருக்கு ஓர் அளவடியைத் தந்து, புதிய கஜல் ஒன்றை எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.

உருதுவில் கஜல் யாப்பு எளிமையானது போலத் தோன்றினாலும், மொழிவளமும் புலமையும் இல்லாமல் கஜல் எழுத முடியாது. அதன் இலக்கணம் பின்வருமாறு:

அ. அளவடிகள்
ஆ. இரண்டிரண்டு அடிகள்
இ. இயைபுத்தொடை
ஈ. ஒவ்வோர் இரண்டடியும் தனித்தனியாக நின்றாலும் பொருள் தர வேண்டும்
உ. கஜலில் இடம்பெறும் அடிகள் முற்பின் அடிகளுடன் பொருள் ஒன்ற வேண்டும்
எ. தொடக்க இரண்டடிகள் சூழலையும் கருவையும் முடிவு செய்யும்
ஏ. கடைசி அடி முடிவுரையாக நிற்க வேண்டும்

தந்தையார் தந்த அளவடியைக் கொண்டு அவர் கஜலைத் தொடர்ந்து எழுதி முடித்தார். அந்தக் கஜல் பின்னாளில் ‘கஜல்களின் அரசி’ என்னும் பட்டம் பெற்ற பேகம் அக்தரால் பாடப்பட்டு அழியாப் புகழ் பெற்றது என்பது வரலாறு. அந்நாளில் ஒரு மாணவன் எழுதிய முதல் கஜல், உருது உலகின் கஜல் அரசியால் பாடப்படுகிறது என்றால், அது அந்தக் கவிதைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

// சுடுகின்ற விழிநீர் பருகி நான் நகைப்பது போல்
யாரேனும் நகைத்தால் இதயம் வெளிவந்து வீழும்
//

// ஜிஸ்தராஹ் ஹன்ஸ்ரஹாஹூன் மைன் பீபீக்கே கரம் அஷ்க்
யூன் தூஸ்ரா ஹசே தோ கலேஜா நிகல் படே
//

// ஆண்டுகள் கடந்த பின் விழியால் அங்கீகரித்தாள்
மனம் குளிர்ந்தாலும் விழிநீர் பெருகி வீழ்ந்தது
//

// முத்தத் கே பாத் உஸ்னே ஜோ கி லுத்ஃப் கி நிகாஹ்
ஜீ குஷ்தோ ஹோகயா மகர் ஆன்சூ நிகல் படே
//

கைஃபியின் காலத்தில் சோஷலிசச் சித்தாந்தம் பல ஆளுமைகளை ஈர்த்தது. இந்தியாவும் சோஷலிச இந்தியாவாக மாறும் என்பதில் கைஃபியும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “நான் அடிமை இந்தியாவில் பிறந்தேன், சுதந்திர இந்தியாவில் வளர்ந்தேன், சோஷலிச இந்தியாவில் இறப்பேன்” என்பன அவருடைய புகழ்பெற்ற வரிகள்.

தன்னை ஒரு மார்க்சிஸ்டாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினராக இருந்தவர் அவர். அதனாலேயே பாகிஸ்தானில் அவருக்கு விசா மறுக்கப்பட்டது ஒரு வரலாறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கத்தினராகப் பொதுவுடைமையின்பால் ஈர்ப்புக்கொண்டவராக ஒருபக்கமும், இன்னொரு பக்கம் தன்னுடைய காதலி ஷௌக்கத்தின் மீது முரட்டுத்தனமான காதல்கொண்டவராகவும் அவர் விளங்கினார். தன்னுடைய கைகளைக் கீறி, ஷௌகத்துக்குத் தன் குருதியால் காதல் கடிதம் எழுதும் முரட்டுக் காதலனாகவும் வாழ்ந்திருக்கிறார். இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷனில் (IPTA) கைஃபிக்கும் ஷௌக்கத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.

தேசபக்தியும் போர்முனையும் இணைந்து வெளிப்படும் பாடல்களுக்கு இந்தியத் திரையுலகில் தனி இடம் இருக்கிறது. ‘ஹகீகத்‘ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கைஃபியின் போர்முனைப் பாடல், இந்தோ-சீனப் போரின் பின்னணியில் எழுதப்பட்டது என்றாலும், படம் வெளியான பிறகு உருவான இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இந்தியர்களின் நாட்டுப்பற்றின் வெளிப்பாடாக அமைந்தது.

// விடைபெறுவோம் நாம்!
உயிரையும் உடலையும் தோழர்களே – இனி
நாட்டின் கரங்களில் ஒப்படைத்தோம்
! //

// கர் சலே ஹம் ஃபிதா
ஜான்-ஓ-தன் சாத்தியோன்
அப் துமாரே ஹவாலே வதன் சாத்தியோன்
//

கைஃபியின் திரைப்பாடல்களில் அழகியலும் காதலும் மிகுந்த பாடல்களும் உண்டு.

தமிழில் பாலுகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘மறுபடியும்’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற,

// நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் //

என்னும் பாடல் இளையராஜா – வாலி – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – பாலுமகேந்திரா – ரேவதி – அரவிந்தசாமி கூட்டணியில் பெரும் வெற்றி பெற்ற பாடலாகும். சொல்லாத காதலின் வலியைச் சொல்கின்ற அந்தப் பாடலின் மூல இந்தி வடிவம் கைஃபி ஆஸ்மியால் எழுதப்பட்டதாகும் (ஆர்த் – Arth திரைப்படத்தில்).

// நீ இத்தனை புன்னகைக்கிறாய்
எத்தனை வலியை மறைக்கிறாயோ அத்தனை
விழிகளில் ஈரமும் உதட்டில் புன்னகையும்
நலம்தானா? நலமாகக் காட்டிக்கொள்கிறாயா?
//

// தும் இத்னாஜோ முஸ்குராரஹேஹோ
கியா கம்ஹை ஜிஸ்கோ சுப்பாரஹேஹோ
ஆங்கோன்மேன் நமீ ஹசீன் லபோன்பர்
கியா ஹால் ஹை? கியா திகாரஹேஹோ
//

பாக்கீஸா‘ என்னும் திரைப்படத்தில் நாட்டியப்பெண்ணொருத்தி தன்னை ஏற்பவனுடன் பயணத்தைத் தொடரும் கதைப் பின்னணியில் கைஃபி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ‘சல்தே சல்தே’ (நடந்து நடந்து) என்னும் வார்த்தைகளில் தொடங்கும் அப்பாடலின் இயைபைப் போலவே ‘டல்தே’, ‘ஜல்தே’ என அமைத்து எழுதியிருப்பார். இந்த இயைபுடன் கதைச்சுருக்கத்தையும் கைஃபி இணைத்தது, கதையை ஆழமாக உள்வாங்கிய ஒரு கவிஞனின் மொழித்திறனுக்குச் சான்றாகும்.

கதையின் நாயகியான அந்த நாட்டியப் பெண், அந்தப் பாடலுக்குப் பின் வாழ்வின் இக்கட்டான சூழல்களைக் கடக்கிறாள். கடைசியில் அவளை மரணம் தழுவிக்கொள்கிறது. இதனை,

// இந்தத் தீபமும் அணைகிறது
என்னுடன் எரிந்து எரிந்து
//

// ஏ சிராக் புஜ்ரஹே ஹைன்
மேரே சாத் ஜல்த்தே ஜல்த்தே
//

இரவில் ஏற்றப்படும் விளக்கு அணைவதைக் குறிப்பிடும் அவளது வரிகள், தன் வாழ்க்கையும் அந்த விளக்கைப்போலவே இக்கட்டான சூழலை (முடிவை) நோக்கி நகர்வதைத் தன்னையறியாமல் கூறுவதாக அமைகின்றன. அது ரசிகர்களுக்குக் கதைச்சுருக்கத்தை முன்கூட்டியே உணர்த்துவதாகவும் அமைந்தது இதன் சிறப்பாகும்.

விளக்கும் விட்டில்பூச்சியும் காதலின் உவமைகளாக உருதுக் கவிதைகளில் நிறைவதைப் போல, வாழ்வின் நிலையாமையைப் பேசும் உருதுக் கவிதைகளில் ‘கஃபன்‘ (சவத்துணி), ‘தோ கஸ் ஜமீன்‘ (ஆறடி நிலம் / இரண்டு கஜம் நிலம்) ஆகிய இரண்டும் முதன்மையாக அமையும். புகழ் பெற்ற ‘ஆறடி நிலம்’ கவிதையை எழுதியவர் பகதூர் ஷா ஜாபர் என்பதை முந்தைய தொடரில் கண்டோம். கைஃபி எழுதிய ‘ஆறடி நிலம்’ கவிதை:

// மானுடனின் ஆசைக்கு முடிவில்லை
இரண்டு கஜம் துணிக்குப் பின்னும்,
ஆறடி நிலமும் அவசியப்படுகிறது
//

// இன்சான்கி க்வாஹிஷோன்கி கோயி இன்திஹா நஹீன்
தோ கஸ் ஜமீன்பி சாஹியே தோ கஸ் கஃபன் கே பாத்
//

இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின் போக்கு கைஃபியின் பார்வையில் நிறைவானதாக இல்லை. விடுதலைப் போராட்டத்தின் போது மக்களிடம் இருந்த புரட்சி மனப்பான்மை அடகு வைக்கப்பட்டிருப்பதாக அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

// யாரேனும் வட்டி கட்டுவீர்
யாரேனும் பொறுப்பேற்பீர்
இன்றுவரை புரட்சி கடனில் மூழ்கியிருக்கிறது
//

// கோயி சூட் சுகாயே கோயி ஸிம்மா லேன்
ஜிஸ் இன்குலாப்கா ஜோ ஆஜ் தக் உதார் சா ஹை
//

இந்து – முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளின் போது அவர் எழுதிய ‘மனிதனைத் தேடுகிறேன்‘ என்னும் கவிதை அனைவரையும் நோக்கி ஒரு கேள்வியாய் எழுந்தது:

// ஊரில் இந்துக்களும் முஸ்லிம்களும் நிறைந்துவிட்டனர்
அவர்களுள் மனிதர்களின் முகத்தைக் காண விழைகிறேன்
//

// பஸ்தி மேன் அப்னீ ஹிந்து முஸல்மான் ஜோ பஸ் கயே
இன்சான் கி ஷக்ல் தேக்னேகோ ஹம் தரஸ் கயே
//

கைஃபியின் சகோதரர்கள் கவிஞர்கள்; அவர் வாழ்ந்த சூழல் கவிதைகளால் நிறைந்தது. அவருடைய மனைவி ஷௌகத் கைஃபியும் ‘இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷனில்’ நடிகையாக இருந்தார்; திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது மகனும் மருமகளும்கூட திரைத்துறையைச் சேர்ந்தவர்களே. கைஃபியின் மகள் ஷபானா ஆஸ்மியைப் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் வைரமுத்து, “கைஃபி ஆஸ்மி எழுதிய கவிதைகளிலேயே மிகவும் அழகான கவிதை ஷபானா ஆஸ்மிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முகமது ரஃபியின் குரலில் ஒலிக்கும் ஒரு பாடலில் கைஃபி ஆஸ்மி தன் சொந்தக் குரலையும் பதிவு செய்துள்ளார்.

// இந்த உலகம்
இந்த அவை
எனக்கானது அல்ல
//

// ஏ துனியா
ஏ மெஹ்ஃபில்
மேரே காம் கி நஹீன்
//

ஹீர் ராஞ்சா‘ திரைப்படத்தில், ரஃபியின் உருக்கமான குரலில் இந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம்—kதன்னைப் புரட்சியாளனாக முன்னிறுத்தி, சோஷலிச இந்தியா மலரும் எனத் தீவிரமாக நம்பி, பின் தன் ஏமாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் கவிதைகளிலும் கதைகளிலும் மறுவடிவமாக வார்த்துக்கொண்ட மாபெரும் கவிஞர் கைஃபி ஆஸ்மியின் நினைவே நம் நெஞ்சில் நிழலாடும்!

(தொடரும்)

Series Navigation<< உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி

Author

You may also like

Leave a Comment