Home தொடர்மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு 

மருத்துவர் பக்கம் – 33: அமோனியா வாயு-ஓர் விழிப்புணர்வு 

by Farooq Abdullah
0 comments

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதனிடும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக 7 பேர் மரணமடைந்திருப்பதும், 70+ மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கிப் பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருக்கும் மக்கள் மீண்டு வரப் பிரார்த்தனைகளையும் செய்தவனாக இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.

அமோனியா வாயு என்பது மீன் மற்றும் இறால் பதனிடும் தொழிற்சாலைகளில் குளிரூட்டப் பயன்படுகிறது. மீன்கள் மற்றும் இறால்களைக் குறைவான நேரத்தில் உறை குளிர் நிலைக்குக் கொண்டு செல்ல அமோனியாவானது விலை மலிவான மற்றும் சிறப்பான ஆற்றல் கொண்ட குளிரூட்டியாகப் பயன்படுகிறது.

எப்படி நமது எரிவாயு உருளைகளில் எரிவாயுவானது திரவ நிலையில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறதோ, அது போலப் பதனிடும் ஆலைகளில் அமோனியா வாயுவை அதிக அழுத்தத்தில் திரவமாக்கிக் குழாய்களில் வைத்திருப்பார்கள். இந்தக் குழாய்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுக் கசிவோ அல்லது வால்வுகளில் கோளாறோ ஏற்படும் போது, திரவ நிலையில் இருக்கும் அமோனியா வாயுவாக மாறி அந்த அறை முழுவதும் நிரம்பிவிடும். காற்றோட்டம் இல்லாத அறைக்குள் அமோனியா வாயு அதிகமான செறிவில் சேரும் போது, அதற்குள் பணியாற்றும் மனிதர்களுக்கு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அமோனியாவானது சுவாசப்பாதையில் மற்றும் தோலில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து அமோனியம் ஹைட்ராக்சைடாக உருமாறும். இதன் விளைவாகத் தீக்காயம் ஏற்பட்டது போன்ற விளைவை ஏற்படுத்தும்.

காற்றில் ஒரு நச்சுப்பொருளின் செறிவைக் குறிப்பிட “பிபிஎம்” (PPM) எனும் “PARTS PER MILLION” பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. அமோனியாவைப் பொறுத்தவரை, ஒரு சூழலில் 5 பிபிஎம் என்ற அளவை எட்டினால் அமோனியாவின் நாற்றம் அடிக்கத் துவங்கும். 25-50 பிபிஎம் என்ற அளவில் கண்கள், தொண்டையில் எரிச்சல் உணர்வு தோன்றும். 300 பிபிஎம் (தற்போது நிகழ்ந்த விபத்தில் இந்த நிலையை எட்டியதாகக் கூறப்படுகிறது) உயிருக்கு ஆபத்தான மூச்சுத்திணறல் நிலை ஏற்பட்டு, நிமிடங்களில் சிகிச்சை அளிக்கப்படாவிடில் மரணம் சம்பவிக்கும். 500 பிபிஎம் மற்றும் அதற்கு மேல் என்றால் உடனடியாக மரணம் சம்பவிக்கும்.

ஒரு மனிதர் எவ்வளவு அதிகமான அமோனியா செறிவு நிலையை ஆட்கொண்டார், எவ்வளவு நேரம் இந்த நிலை தொடர்ந்தது என்பதைப் பொறுத்துப் பாதிப்புகளின் தன்மை இருக்கும்.

உடனடி அறிகுறிகள்:

  • கண், மூக்கு, நாசி எரிச்சல்
  • தோல் எரிச்சல்
  • மூச்சுத்திணறல்
  • நெஞ்சுப் பகுதியில் அதீத அழுத்தம்
  • தீவிர மூச்சுத்திணறல் நிலை
  • மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவுகள் மட்டுப்படுவதால் சுயநினைவு மங்கிக் கோமா நிலை ஏற்படும்.

இந்த பாதிப்பின் பின்விளைவுகள் எப்படி இருக்கலாம்: அமோனியாவின் பாதிப்பினால் நாசி தொடங்கி நுரையீரல் எனச் சுவாசப்பாதை முழுவதும் அழற்சி நிலை உருவாகும். எனவே, மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், இருமல், இருமினால் சளி வெளிப்படுவது ஆகியவை தொடரக்கூடும். இதை “நாள்பட்ட எதிர்வினை சார்ந்த சுவாசப்பாதை அடைப்பு நோய்” (CHRONIC OBSTRUCTIVE REACTIVE DISEASE) என்கிறோம்.

இந்த பாதிப்பிற்குப் பிறகு, ஏதேனும் லேசான சுற்றுச்சூழல் மாசுக்கு உட்படும் போது கூடச் சுவாசப்பாதையின் சுவரில் இருக்கும் செல்கள் அதிகமாகச் சளிச்சுரப்புச் செய்யக்கூடும். இதனால் சுவாசப்பாதை சுருங்கி, ஆஸ்துமா பாதிப்பு ஏற்படக்கூடும். இதை “எதிர்வினை சார்ந்த சுவாசப்பாதை கோளாறு” (REACTIVE AIRWAY DYSFUNCTION SYNDROME) என்கிறோம். இதனால் அடிக்கடி வீசிங் தொல்லை மற்றும் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படக்கூடும்.

நுரையீரலுக்குள் அமோனியா செல்வதால், நுரையீரலில் அழற்சி நிலை தோன்றி (CHEMICAL PNEUMONITIS), பிறகு அதில் கிருமித்தொற்றுகள் ஏற்பட்டு நிமோனியா வரலாம். இதன் விளைவாக நுரையீரலில் நிரந்தரமான வடுக்கள் (PULMONARY FIBROSIS) ஏற்பட்டுப் பாதிப்புகள் ஏற்படலாம். இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியாக நுரையீரல் நிபுணரிடம் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கண்களைப் பொறுத்தவரை, கண்களின் விழிப்படலமான கார்னியாவில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி நிரந்தரமான பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். இதற்கு உடனடியாகக் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அமோனியா ஆட்கொள்ளல் காரணமாகக் கண்களில் புரை நோய் (கேடராக்ட்) மற்றும் கண் உயர் அழுத்த நோய் (க்ளாகோமா) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

தோல்களில் அமோனியம் ஹைட்ராக்சைடு பட்ட இடங்களில் தீவிரமான தீக்காயங்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டு நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும். தொற்று ஏற்படாத வண்ணம் முறையான ஆண்டிபயாடிக்குகள் மற்றும் களிம்புகள் கொண்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இவையன்றி, அமோனியாவை அளவுக்கு அதிகமாக நுகரும் போது எப்படிச் சுவாசப்பாதைக்குள் செல்கிறதோ, அதே போல ஜீரண மண்டலத்துக்குள்ளும் செல்லும். வாய்ப்புண், உணவுக்குழாய் புண், உணவுக்குழாய் அடைப்பு, இரைப்பைப் புண், குடலில் துளை விழுதல் போன்ற பல சிக்கல்கள் தோன்றக்கூடும். இந்தப் புண்களை ஆற்றுவதற்கான சிகிச்சையும் நீண்ட நாட்கள் தேவைப்படும்.

நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல், ஆக்சிஜன் குறைபாடு ஆகியவை ஏற்படுவதால், இது மறைமுகமாக இதயத்தின் நலனையும் காலப்போக்கில் பாதிப்புக்குள்ளாக்கலாம். எனவே, இதய நலன் சார்ந்தும் சிகிச்சைகள் தொடர்ச்சியாகப் பெற வேண்டும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நுரையீரல், சருமம், கண்கள், ஜீரண மண்டலம், இதயம் என்று பாதிப்புகள் இருக்கலாம் என்பதால், தொடர் கண்காணிப்பிலும் சிகிச்சையிலும்தான் அவர்கள் மீண்டு வர இயலும்.

இது போன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் தொழிலாளர்கள் பணிசெய்யும் இடத்தில் முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மனித உயிர்கள் மலிவான காரணங்களுக்கு மடியும் போது ஏற்படும் வலி மிகக் கொடியது. வாயு நிலையில் இருக்கும் நச்சு எப்போதுமே உயிருக்கு ஆபத்தை விரைவில் வரவழைக்கும். எனவே, அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. விழிப்புணர்வு பெறுவோம்!

Author

You may also like

Leave a Comment