Home இதழ்கள்இதழ் 14ஈற்றடிக்கோர் பாட்டு – 3

ஈற்றடிக்கோர் பாட்டு – 3

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

கன்னல் மொழியாளின் கார்வண்ணக் கண்களை
மின்னல் எனப்பார்த்து மெய்யுறையும் – புன்னகையும்
பொன்னொளிர் மேனிநங்கை பொல்லாத பேரழகோ
அந்நிலவும் அஞ்சும் அழகு

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்:

இப்னு ஹம்துன்

வட்ட வடிவத்தால்; வானின் சுடரெனச்
சுட்டி உரைத்திடச் செய்வதனால் – மட்டுமின்றி
வந்த பருக்கள் வதனத்தில் பள்ளங்கள்
அந்நிலவும் அஞ்சும் அழகு.

சின்னக்கண்ணன்

கலங்கிய நெஞ்சத்தைக் கட்டவிழ்த்து விட்டே
சலங்கை யொலிபோல தாரிணியும் தங்கமாய்
விந்தையாய்த் தோற்றமுடன் வித்தகமாய் மின்னுவது
அந்நிலவும் அஞ்சும் அழகு

கண்மணி பாண்டியன்

முழு நிலவாய் ஒளிரும் வட்ட முகம்
பிறை நிலவாய் புன்னகைக்கும் இதழ்கள்
அமாவாசையாய் கருகரு குறுங்கூந்தல்
தொட்டில் குழந்தையின் அழகானது,
அந்நிலவும் அஞ்சும் அழகு

ஹேமா செந்தில்

மஞ்ஞை வெட்கும் எழிலுடன்
கொஞ்சும் மழலைப் பேச்சுடன்
மஞ்சள் வண்ணப் பூவே
பிஞ்சு மணிப்பாதம் பின்ன
பஞ்சு மெத்தையில் புன்னகைக் கீற்றுடன்
துஞ்சும் உயிரோவியமே -நீ
அந்நிலவும் அஞ்சும் அழகு.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment