கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர்.
நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குறுகிய அளவிலான வணிகச் சந்தையைத் தான் ஆட்சி செய்ய முடியும். இதே கடல் சார்ந்த பாதை என்றால் இடைத்தரகர்கள் பெரிதும் இல்லாத நேரடி லாபத்தை அடைய முடியும் என்பதை முதலில் கார்த்தேஜ் அரசர்கள் புரிந்துகொண்டு இருந்தார்கள்.
தற்காலத்தில் பக்கத்து வீட்டில் ஒருவர் ஒன்றைச் செய்துவிட்டு லாபமடைந்துவிட்டால் நாமும் அதே போல் செய்து லாபமடைய வேண்டும் என்கிற மனப்போக்கு அன்றைய அரசர்களிடமும் இருந்தது.
கார்த்தேஜிய ராஜ்ஜியத்தின் திடீர்ச் செல்வச் செழிப்புடன் இருப்பதைப் பார்த்த ரோமப் பேரரசுக்கும் தானும் அதே போன்ற செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஏன் அப்படியான ஆசை வந்தது? என்ற கேள்வி இதனை வாசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்குச் சந்தேகமாக வரும்.
அதற்குக் கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம ராஜ்ஜியத்திற்கும் நடந்த போருக்கு முந்தைய காலகட்டத்தில் ரோம ராஜ்ஜியத்தின் வணிகப் பொருளாதாரம் என்ன மாதிரியான அமைப்பில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போருக்கு முன்னால் ரோமின் பொருளாதாரம் என்பது விவசாயம், மாடு ஆடு வளர்ப்பு, பண்டமாற்று முறை அளவீடுகள் மற்றும் முக்கியமாக வரி வசூலிப்பு ஆகியவற்றில் இருந்துதான்.
அதற்கு முன்பு அதாவது 70 ஆண்டுகளுக்கு முன்புதான் அலெக்ஸாண்டர் பல ராஜ்ஜியங்களோடு போர் புரிந்தார். அந்தப் போர்கள் எல்லாம் ராஜ்ஜிய விரிவாக்கத்திற்காக எனச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் அந்த நிலப்பரப்பின் வணிகப் பாதைகளான ராயல் ரூட் (அரச பாதை) வழியே இருக்கும் ராஜ்ஜியங்களாக இருந்தன. இந்த அரச பாதை என்பது பண்டைய பெர்சியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. அரச வணிகப் பாதை என்பது சீனாவை மையமாகக் கொண்டு இயங்கிய பட்டுப் பாதைக்கு 300 வருடங்களுக்கு முன்பு வழக்கத்தில் இருந்தது. அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பின் அவரது படைத் தளபதிகள் அவர் வென்ற ராஜ்ஜியங்களைச் சிறுசிறு ராஜ்ஜியங்களாகப் பிரித்துக்கொண்டனர்.
இப்படியான நிலையில் ரோம ராஜ்ஜியத்திற்கான வருமானம் குறைந்திருக்கும். இப்படிக் குறைந்த வருமானத்தைக் கொண்டிருந்த காலத்தில் தான் கார்த்தேஜ் ராஜ்ஜியம் அதிக வருமானத்தினால் செல்வச் செழிப்புடன் இருந்தது. இதனைக் கண்ட ரோம ஆட்சியாளர்கள், வணிகர்களுக்குப் பொறாமை வந்ததினால்…
முதல் பியூனிக் போர் கிமு 264-இல் தொடங்கியது.
சிசிலி நிலப்பரப்பைத் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்போர் சிசிலி வழியாக நடக்கும் கடல் சார்ந்த வணிகத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்பதை ரோமானியர்கள் புரிந்துகொண்டதால் தான் பியூனிக் போர்.
ஏன் சிசிலியில் அப்படி என்ன சிறப்பு? அந்த நிலப்பரப்பின் துறைமுகம் இல்லாவிட்டால் வேறொன்று கிடைக்காமல் போய்விடுமா என்று இருக்க முடியாதபடி மத்தியதரைக்கடலின் மையத்தில் இருந்த சிசிலி ஒரு தீவு மட்டுமல்ல; அது நிலப்பரப்பின் வழியாக நடக்கும் கடல் வணிகத்தின் சுங்கச்சாவடி. அந்தச் சுங்கச்சாவடி வழியாகக் கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் ஆயிரக்கணக்கான கப்பல்களின் இயக்கத்தைக் கவனித்து வரி வசூலிக்க முடியும். வரி வசூலிப்பு மட்டும் அதன் மூலம் வணிகம் செய்யப்படும் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதின் மூலம் எதிரி நாட்டின் வணிகத்தை முடக்குவதின் மூலம் பேரரசாக உருப்பெற முடியும்.
ரோம் ராஜ்ஜியம் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தைக் கடற்போரில் சந்திப்பது என முடிவான பின் அவர்களுக்கு முன்பு மலையளவிற்குத் தடை இருந்தது.
அதென்ன அப்படி ஒரு தடை?
கார்த்தேஜ் ராஜ்ஜியம் ஒரு கடற்படை வல்லரசு என்பதால் அவர்களது மாலுமிகள் சிறுவயதிலிருந்தே கடல் பயணங்களுக்கும் கடற்போர்களுக்கும் பழகியவர்கள். மேலும் அவர்களது கப்பல்களும் அதனை இயக்கிய தளபதிகளும் எல்லாம் அதிக திறனுடன் இருந்தனர்.
இப்படியான கார்த்தேஜ் ராஜ்ஜியத்தை எதிர்த்த ரோம் ராஜ்ஜியத்தில் அலெக்ஸாண்டர் வளர்த்துவிட்ட வலிமையான நிலப்படை இருந்தது. அது மட்டுமே இருந்தது எனக்கூடச் சொல்லலாம். அப்படியான நிலையில் தான் இருந்தது அவர்களது கடற்போர் அனுபவம்.
ஆனாலும் அந்தப் போர்களில் ரோம ராஜ்ஜியம் வென்றது. வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கும் பாடம் ஒன்றுதான். பல நேரங்களில் வெற்றி என்பது அதிக அனுபவம் கொண்டவர்கள் இல்லை. மாறாக ஒரு விஷயத்தை எவ்வளவு சீக்கிரமாகக் கற்றுக்கொள்கிறவர்களோ அவர்கள் தான் அதிகம் வென்றிருக்கிறார்கள்.
புயலில் சிக்கிய கார்த்தேஜியக் கப்பல் ஒன்று ரோம கடற்கரைப் பக்கமாக கரைஒதுங்கியபோது, அதனைப் பக்கம்பக்கமாகப் பிரித்து திறன் மிகுந்த போர்க் கப்பல் எப்படி இருக்க வேண்டும் என்பதை முழுமையாகக் கற்றுக்கொண்ட ரோமானியர்கள், அதே மாதிரியான கப்பல்களை நூற்றுக்கணக்கில் மிகக் குறைந்த காலத்தில் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் அதன் பிறகு கப்பல்களைத் தயாரித்தால் மட்டும் போதாது; அதில் பயணித்துப் போர் புரியவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். என்னதான் இருந்தாலும் அனுபவம் என்பது முக்கியம்தானே? தங்களது கடற்போர் அனுபவம் இல்லாததைச் சமாளிக்க ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தார்கள்.
‘கோர்வஸ்’ என்ற மரப்பாலத்தை எதிரிக் கப்பலின் மீது போட்டுவிட்டு அந்த கடற்போரை நிலப்போராக மாற்றிவிட்டார்கள். தெரிந்த நிலப் போர் தந்திரத்தைத் தான் கடைப்பிடித்தார்கள்.
இப்படி மாற்றி யோசிக்கும் ரோம ராஜ்ஜியத்தின் தந்திரத்தின் மூலம் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் பல வருட கடற்படை அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக உடைய ஆரம்பித்தது.
வரலாறு காலம் காலமாக நமக்குச் சொல்லித் தரும் பாடம் ஒன்றுதான்; பெரிய பெரிய வெற்றி என்பது தொடர்ந்து கற்றுக்கொள்வதின் மூலமாக மட்டுமே கிடைக்கக்கூடியது.
வரலாற்றில் வணிகமும் போர்களும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. வணிகம் புதிய புதிய நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கிறது.
நிற்க,
இதே காலகட்டத்தில் ரோம ராஜ்ஜியத்துடன் வணிகம் செய்த தமிழ்நாட்டில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன என்பதைப் பார்த்தோமானால் ஆச்சரியமாக இருக்கிறது.
சமூகத்தை ஒழுங்குபடுத்தும் வேலை நடந்துகொண்டிருந்தது. வணிக வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சியாக அதனை எடுத்துக்கொள்ளலாம்.
அப்படியென்ன முயற்சி?
திருக்குறள். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், அரசன் எப்படி இருக்க வேண்டும், அவனது ஆட்சி சிறப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுத்தது மக்களுக்கு.
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நிலையான வணிக இயக்கத்தைக் கொண்டுவர ஒழுக்கம் மிகுந்த மனிதன் தேவை. அந்தத் தேவையை உருவாக்க திருக்குறள் எழுதப்பட்டிருக்கலாம். இதனை இப்படியாத்தான் நடந்திருக்கும் எனச் சொல்ல வேண்டுமென்றால் திருக்குறள் போன்று பல நூல்கள் கிடைத்தால் சொல்லலாம். அவை இல்லாததால் நாமாக யூகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
திருக்குறள் அக்கால மனிதர்களை வணிகத்திற்குத் தேவையான பண்படுத்தலுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட பண்படுத்தல் எதுவும் இல்லாத ஹனிபால் என்ற கார்த்தேஜிய வீரன் ரோம ராஜ்ஜியத்திற்கு எதிராகப் படையெடுத்துச் சென்று பலரைக் கொன்று, பல யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்றார்.
அது இரண்டாம் பியூனிக் போர் காலம். அந்தக்காலத்தில் நிகழ்ந்த இந்தப் பயணம் பொருளாதார வரலாற்றை மாற்றியதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
தொடரும்…