அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்து
வழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்து
பேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்து
வஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து…
நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்து
தினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்து
மாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்து
நேர்மையின்றி தன்னலமே பெரிதென வாழ்ந்து…
ஓர் நாள் நரைகூடி நாடி தளர்ந்து
உடன் எவருமில்லாது முதுமைப் பிணியில் துடித்து
காத்திருந்த பெருங்கூற்றுக்கு இரையென மாய்ந்து
பின்னர் தான் உருவத்தில் பேயாய் மாறுவார் என்றில்லை…
கொடுங்குணங்களால் என்றோ சுயம் இழந்தவர் போல்
பேயுண்டோ பாரில் பகர்!
Author
-
கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.