வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும், அவற்றின் அடிப்படை காரணங்கள் பல சமயங்களில் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன.
மனித ஆசைகள், பாதுகாப்புத் தேவைகள், செல்வம் சேர்க்கும் முயற்சிகள் மற்றும் அதிகாரத்தின் மீதான விருப்பங்கள் போன்றவை வரலாற்றின் பல நிகழ்வுகளை வடிவமைத்துள்ளன. இதனால் வரலாறு தன்னை அப்படியே மீண்டும் நிகழ்த்திக்கொள்ளாவிட்டாலும், அதே போன்ற சூழ்நிலைகளையும் அந்த சூழ்நிலைகளால் வரும் விளைவுகளையும் பல காலங்களில் மீண்டும் உருவாக்கிக்கொள்கிறது.
ஆக, கடந்த கால நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது என்பது நிகழ்காலத்தை விளக்குவதற்கும் எதிர்காலத்தைக் கணிப்பதற்கும் முக்கியமான வழிகாட்டியாக அமைகிறது.
கடந்த அத்தியாயத்தில் பல நூற்றாண்டுகளாய் வழக்கத்தில் இருந்த கடல் கடன்கள் ஒரு கட்டத்தில் வழக்கத்தில் இருந்து மறையத் தொடங்கின. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது ஹோர்முஸ் நீரிணை. இன்று போல் அன்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனிடம்தான் உலக வர்த்தகமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஹோர்முஸ் நீரிணை இன்று உலக அரசியலில் மிகவும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகள் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன. இப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு அரசியல் அல்லது இராணுவப் பதற்றமும் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஹோர்முஸ் பகுதியின் முக்கியத்துவம் நவீன காலத்தில் மட்டும் உருவானது இல்லை; அதன் வரலாற்றுப் பின்னணியே இன்றைய உலக அரசியலின் கவனத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள முக்கிய காரணமாகும்.
பண்டைய காலத்திலிருந்தே பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் நுழைவாயிலாக ஹோர்முஸ் இருந்திருக்கிறது. இந்தியா, அரேபியா, பாரசீகம், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கிடையே நடந்த கடல் வணிகத்தில் இந்த பகுதி முக்கிய மையமாக இருந்தது. மசாலா பொருட்கள், பட்டு, முத்துக்கள், குதிரைகள் மற்றும் பல்வேறு ஆடம்பரப் பொருட்கள் ஹோர்முஸ் வழியாகப் பரிமாறப்பட்டன. ஹோர்முஸ் செல்வச் செழிப்பும் வணிக அதிகாரமும் பெற்ற ஒரு நகரமாக வளர்ந்தது.
அக்காலத்தில் ஹோர்முஸ் இராஜ்ஜியம் கடல் வணிகத்தின் மூலம் பெரும் செல்வாக்கான வணிக மையமாக விளங்கியது. இந்தியப் பெருங்கடல் வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்தும் திறன் அதன் அரசியல் வலிமையை உயர்த்தியது. இதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த போர்த்துகீசியர்கள் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹோர்முஸைக் கைப்பற்றித் தங்களின் கடல் பேரரசின் ஒரு பகுதியாக மாற்றினர்.
பின்னர் பாரசீக ஆட்சியாளர்களும் ஐரோப்பிய அதிகார வர்க்கமும் இந்தப் பகுதிக்காகத் தொடர்ந்து போட்டியிட்டனர். இதன் மூலம் ஹோர்முஸ் வெறும் வணிக மையமாக மட்டும் இல்லாமல் உலகப் பேரரசுகளின் அதிகாரப் போட்டிக்கான அரங்கமாகவும் மாறியது.
வரலாற்றில் வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்திய சக்திகள் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்றதைப் போல, இன்று ஆற்றல் வளங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் திறன் உலக அரசியலில் பெரும் செல்வாக்கை வழங்குகிறது. வரலாற்றில் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்திய ஹோர்முஸ், இன்று எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது. எனவே, அதன் புவியியல் அமைப்பும் வரலாற்றுச் சிறப்பும் ஒன்றிணைந்து இன்றைய உலக அரசியலில் அதன் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள இன்றைய அரசியல் பதற்றங்களையும் சர்வதேச கவனத்தையும் புரிந்துகொள்ள அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பல நூற்றாண்டுகளாக உலக வணிகம், கடல் ஆதிக்கம் மற்றும் அரசியல் போட்டிகளின் மையமாக இருந்த ஹோர்முஸ், இன்று கூட அதே வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக உலக அரசியலின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் ஓமனில் இருந்து அரேபிய மாலுமியான முகமது திர்ஹம் என்பவர் தனது ஜாஷு வீரர்களுடன் ஈரான் கடற்கரைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அவரே இந்த புகழ்பெற்ற ஹோர்முஸ் இராஜ்ஜியத்தைத் தோற்றுவித்தார். ஆரம்ப காலங்களில் இந்த அரசும் அது சார்ந்த பொருளாதார மையமும் நிலப்பரப்பில்தான் அமைந்திருந்தது. அதன் அளவில்லாச் செல்வம் மற்ற நாட்டு அரசர்களையும் கொள்ளையர்களையும் ஈர்த்தது.
13ஆம் நூற்றாண்டின் இறுதியில் மங்கோலியர்கள் மற்றும் செல்ஜுக் பேரரசும் ஹோர்முஸ் மீது தொடர் தாக்குதல்களை நடத்தின. இதனால் கி.பி. 1301 ஆம் ஆண்டில் அப்போதைய அரசர் பகா உத்தீன் அயாஸ் தனது மக்களையும் செல்வங்களையும் காப்பாற்றக் கடல் கடந்து பாதுகாப்பான ஜாரூன் என்ற தீவுக்குத் தலைநகரை மாற்றினார். இந்த புதிய இடம்தான் பின்னாளில் உலகை ஆண்ட புதிய ஹோர்முஸ் தீவாக மாறியது.
ஹோர்முஸ் உலகப் புகழ்பெற்ற துறைமுகமாக மாறுவதற்கு முன்பு பாரசீக வளைகுடாவில் இருந்த கீஷ் என்ற தீவுதான் வணிக மையமாக விளங்கியது. கிழக்கத்திய நாடுகளில் இருந்து நறுமணப்பொருள் சரக்குக் கப்பல்கள் எல்லாம் அங்குதான் சென்று வந்தன.
ஹோர்முஸ் தனது வர்த்தகத்தைப் பெருக்க கீஷ் தீவை ஒழிக்க நினைத்தது. இதற்காக ஹோர்முஸ் அரசு உள்ளூர்க் கடற்கொள்ளையர்களைத் தனியார் போர்வீரர்களாகக் களம் இறக்கியது. கீஷ் தீவை நோக்கிச் சென்ற அனைத்து இந்திய மற்றும் சீன வணிகக் கப்பல்களையும் இந்தத் கடற்கொள்ளையர்கள் இரக்கமின்றித் தாக்கினர். கடலில் தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் வணிகர்கள் வேறு வழியின்றித் தங்களின் கப்பல்களை ஹோர்முஸ் துறைமுகம் நோக்கித் திருப்பினர்.
கி.பி. 1229 இல் நடந்த ஒரு பெரும் கடற்போரில் ஹோர்முஸ் கடற்படை கீஷ் தீவின் அரசரைக் கொன்று அதன் வணிக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வர்த்தகப் பாதையைக் கட்டுப்படுத்த ஹோர்முஸ் அரசு கடற்கொள்ளையர்களுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை வைத்திருந்தது. அந்தப் பகுதியில் வாழ்ந்த முரட்டுத்தனமான ஜாஷு இன மாலுமிகளையும் பனு குலா என்ற கடற்கொள்ளைக் கூட்டத்தையும் இந்த அரசு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது.
ஹோர்முஸ் அரசு விதித்த நுழைவு வரியைச் செலுத்திய வணிகக் கப்பல்களுக்கு இந்தக் கொள்ளையர்களிடம் இருந்து அரசு கடற்படை முழுப் பாதுகாப்பு வழங்கியது. ஆனால், வரியை ஏமாற்றிவிட்டு வேறு கடல் வழியில் தப்பிச்செல்ல முயன்ற கப்பல்களைப் பற்றி இந்தக் கடற்கொள்ளையர்களுக்கு ஹோர்முஸ் அதிகாரிகளே ரகசிய ஒற்றர்கள் மூலம் தகவல் கொடுத்தனர். இதனால் வரி செலுத்தாத கப்பல்கள் கடலில் சூறையாடப்பட்டன. இந்த பயம் காரணமாகவே உலக வணிகர்கள் ஹோர்முஸ் துறைமுகத்தில் வரி செலுத்த வரிசையில் நின்றனர்.
ஹோர்முஸ் நகரின் செல்வச் செழிப்பு ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்தது. கி.பி. 1507 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய பேரரசின் மிகச்சிறந்த கடற்படைத் தளபதியான அபோன்சோ டி அல்புகர்கு தனது நவீன பீரங்கிக் கப்பல்களுடன் ஹோர்முஸ் தீவை முற்றுகையிட்டார்.
அப்போது ஹோர்முஸ் அரசை கவாஜா அத்தா என்ற அமைச்சர் வழிநடத்திக்கொண்டு இருந்தார். அவரிடம் ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்கள் இருந்தும் போர்த்துகீசியர்களின் நவீன துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளுக்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அபோன்சோ டி அல்புகர்கு அங்கிருந்த அரண்மனையையும் துறைமுகத்தையும் கைப்பற்றி அங்கு ஒரு பிரம்மாண்டமான கல் கோட்டையைக் கட்டினார். அதற்குப் ‘போர்ட் ஆஃப் அவர் லேடி ஆஃப் தி கன்சப்ஷன்‘ என்று பெயர் வைத்தார். அதன் பிறகு கி.பி. 1515-ல் ஹோர்முஸ் முழுமையாகப் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
போர்த்துகீசியர்கள் ஹோர்முஸ் தீவைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்த பழைய வரி முறையைச் சட்டபூர்வமான கடற்கொள்ளையாக மாற்றினர். அவர்கள் ‘கார்டாஸ்‘ என்ற கட்டாயக் கடல் உரிம முறையைக் கொண்டு வந்தனர்.
இதன்படி இந்தியப் பெருங்கடலிலும் பாரசீக வளைகுடாவிலும் பயணம் செய்யும் எந்தவொரு வணிகக் கப்பலும் போர்த்துகீசியர்களிடம் பணம் கொடுத்து இந்த உரிமத்தைப் பெற வேண்டும். மேலும் அவர்கள் ஹோர்முஸ் துறைமுகத்திற்கு வந்து நறுமணப் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும்.
இந்தக் கார்டாஸ் உரிமம் இல்லாமல் கடலில் செல்லும் எந்தக் கப்பலையும் போர்த்துகீசிய கடற்படையே கடற்கொள்ளையர்களைப் போலத் தாக்கி, அதன் நறுமணப் பொருட்களைப் பறிமுதல் செய்து மாலுமிகளைக் கடலில் தூக்கி எறிந்தது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போர்த்துகீசியர்களின் இந்த அராஜக ஆதிக்கம் கி.பி. 1622-ல் முடிவுக்கு வந்தது. ஈரானின் சஃபாவித் பேரரசின் மாமன்னரான சாஹ் அப்பாஸ், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தின் கடற்படை உதவியோடு ஹோர்முஸ் கோட்டையின் மீது கூட்டுத் தாக்குதலை நடத்தினார்.
பிரிட்டிஷ் கப்பல்களின் பீரங்கித் தாக்குதலால் போர்த்துகீசியர்கள் தோற்கடிக்கப்பட்டு ஹோர்முஸ் தீவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். கடல் வணிகத்தில் இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது பின்னர் 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டில் கடல் வணிகப் பாதையைத் தனது கைவசம் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், கடல் வணிகக் காப்பீட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு போவதற்குக் காரணமானது
(தொடரும்)