Home கவிதைஈற்றடிக்கோர் பாட்டு – 6

ஈற்றடிக்கோர் பாட்டு – 6

by Iyappan Krishnan
1 comment

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

காய்ந்த நிலங்கண்டு கண்ணீர் வழிந்தோட
சாய்ந்த பயிர்கண்டு நெஞ்சம் மறுகினாரும்
தேன்மழை வேண்டுமெனத் தேடினார்க்(கு) இன்றேனும்
வான்திறந்து பெய்யாதோ விண்.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்:

இப்னு ஹம்துன்
வாய்மை மிகக்கொண்டு வற்றா நலம்விழையும்
தாய்மையென நல்லுள்ளம் தக்கபடி – நோய்மையிலா
மேன்மனம் நோக்கில் மனத்திட்பம் கொண்டுவிடின்
வான்திறந்து பெய்யாதோ விண்

மாலா மாதவன்
தண்ணீர் மதகெல்லாம் தன்போக்கில் நின்றிருக்க
கண்ணீர் மதகில் கரையில்லை – மண்வாழ
தேன்சொட்டாய் தெள்ளமுதாய் தேடுபவர் கைப்பொருளாய்
வான்திறந்து பெய்யாதோ விண்

சின்னக்கண்ணன்
தண்ணீரைக் காணாத் தரிசுநிலம் கட்டவிழ்ந்து
கண்ணீரும் காய்ந்திருக்கும் காட்சிதனைக் கண்டபின்பு
மான்போலத் துள்ளி மழைமேகம் கொண்டுவந்து
வான்திறந்து பெய்யாதோ விண்

ஜெயந்தி நாராயணன்
ராசாவின் பாட்டும் ருசியான தேநீரும்
ஊசாத போண்டாவும் உன்முன்னே காத்திருக்க
ஏன்என்று கேளா(து) உனக்காக இன்றொருநாள்
வான்திறந்து பெய்யாதோ விண்

மது ஸ்ரீதரன்
குவிக்குமுன் கையிடைக் கொண்டிட்ட சோறு
தவிக்கின்ற வாயாறத் தண்ணீர் – புவித்தலத்தில்
தான்திறந்த உள்ளத்தால் தர்மம் புரிவோரால்
வான்திறந்து பெய்யாதோ விண்

ஹேமா செந்தில்
ஊண் மறந்து உழுத பூமி
கண் துஞ்சாமல் காத்த பூமி
பொன் விளைந்த பூமி-இன்று
தண்ணீரின்றித் தரிசாய்க் கிடக்குது
மண் மணக்க மனம் மகிழ
புண்ணியம் புரிந்தோர் பொருட்டு
வான்திறந்து பெய்யாதோ விண்.

பவளமணி பிரகாசம்
பாளம் பாளமாய் பூமி வெடித்திருக்கு
காலம் காலமாய் அது காத்திருக்குது
கரு கருவென மேகம் திரண்டிருக்கு
வான் திறந்து பெய்யாதோ விண்

கண்மணி பாண்டியன்
கல்வித் தாகம் தீர்க்கும்
பள்ளிகள்
அன்புத் தாகம் தீர்க்கும்
அன்னையர்
அறிவுத் தாகம் தீர்க்கும்
ஆராய்ச்சி கூடங்கள்
மண்ணின் தாகம் தீர்க்கும்
மாமழை
தாகம் தீர்க்க மேகம் கூடி
வான் திறந்து பெய்யாதோ விண்

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

1 comment

இப்னு ஹம்துன் August 4, 2026 - 7:29 am

//கண்ணீர் மதகில் கரையில்லை//

Reply

Leave a Comment