Home கவிதைஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

by Iyappan Krishnan
0 comments

ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது.

ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு மொழிகளில் பதினேழு அசைகள் என்பது மிக நீண்ட வரிகளை உருவாக்கிவிடும் என்பதால், உலகளாவிய கவிஞர்கள் ஹைக்கூவின் புறவடிவத்தை விட, அதன் ஆன்மாவையே பற்றிக்கொள்ள விரும்பினார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில இலக்கியத்தில் ‘படிமவாதம்’ என்றொரு பெரும் இயக்கம் தோன்றியது. தேவையில்லாத வார்த்தைகளை நீக்கிவிட்டு, மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் மூலம் கவிதையை உருவாக்கும் இந்த இயக்கத்திற்கு, ஜப்பானிய ஹைக்கூக்களே மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தன. எஸ்ரா பவுண்ட் எழுதிய ஒரு புகழ்பெற்ற கவிதை இதற்குச் சிறந்த உதாரணம்:

In a Station of the Metro:
The apparition of these faces in the crowd;
Petals on a wet, black bough.

இதில் 5-7-5 என்ற இலக்கணம் இல்லை. ஆனால், இருவேறு காட்சிப் படிமங்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, ஒரு மாபெரும் இடைவெளியை அவர் உருவாக்கியிருந்தார். இதுதான் மேற்குலகம் மரபான ஹைக்கூவை உடைத்துத் தனதாக்கிக் கொண்ட புள்ளி.

இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் தோன்றிய ‘பீட் தலைமுறை’ கவிஞர்கள் ஹைக்கூவை இன்னும் சுதந்திரமாக அணுகினார்கள். ஜாக் கெரூவாக் அமெரிக்க ஹைக்கூவிற்கு ஒரு புதிய இலக்கணத்தையே வகுத்தார். ஆங்கிலத்தில் பதினேழு அசைகளை வைப்பது தேவையற்ற நீளத்தை உருவாக்கும் என்று வாதிட்ட அவர், குறுகிய வரிகளில் ஒரு முழுமையான சித்திரத்தை நேரடியாகச் சொல்வதாக அது இருக்க வேண்டும் என்றார்.

In my medicine cabinet
the winter fly
has died of old age

இந்தக் கவிதையில் எந்தவிதமான அலங்காரங்களும் இல்லை. ஒரு நவீன மனிதனின் வீட்டு மருந்துப் பெட்டிக்குள் நடக்கும் ஒரு மிகச்சிறிய மரணத்தை, குளிர்காலம் என்ற குறியீட்டோடு இணைத்து ஒரு மாபெரும் வெற்றிடத்தை அவர் உருவாக்கினார். இப்படி ஜப்பானிய செவ்வியல் விதிகளிலிருந்து விடுபட்ட ஹைக்கூ, தத்துவத்தையும் இயற்கையையும் தாண்டிச் சமூகத்தின் பல்வேறு தளங்களுக்குள் நுழையத் தொடங்கியது.

(அடுத்த இதழில் நிறையும்)

Series Navigation<< ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

Author

You may also like

Leave a Comment