பூனை அறிவிப்பதில்லை
வீட்டுக்குள் வந்துவிட்டதாக.
வந்துவிடுகிறது
வீடே
அதற்காகக் காத்திருந்தது போல்
தனக்குப் பிடித்த இடத்தில் அமர்கிறது—
வெயில் விழும் ஒரு மூலை
சுவரின் ஓரம்
உயரமான அலமாரி அல்லது
நீங்கள் படிக்கவிருந்த செய்தித்தாள்.
அதன் தேர்வுகளை
ஊகிக்க முடிவதில்லை
ஒன்றுமில்லாததைப் பார்த்தபடி
ஒரு முழுப் பிற்பகலையும்
செலவிடுகிறது.
ஒருவேளை
உண்மையில் முக்கியமானதை
பார்க்கும்
ஒரே உயிரினமும்
அதுவாகவே இருக்கலாம்
அது துரத்துவதில்லை
அசையும் ஒவ்வொன்றையும்.
எந்த வருத்தமுமின்றி
பல வாய்ப்புகளை விட்டுவிடுகிறது.
பின்னர் பாய்கிறது—
தன் உள்ளுணர்வு ஏற்கும்
ஒரே ஒரு இலக்கின் மீது
அன்பை ஏற்றுக்கொள்கிறது
தன்னை இழந்துவிடாமல்.
விலகிச் செல்கிறது
மன்னிப்புக் கோராமல்.
விழும்போது
சமநிலையை மீட்டெடுக்கிறது
பிறரின் கவனத்தை ஈர்க்காமல்.
காயப்படும்போது
தேடுகிறது—
ஆறுதலையன்றி
அமைதியான ஒரு இடத்தை
இரவு வரும்போது
அதன் கண்கள் கண்டறிகின்றன—
பகலின் வெளிச்சம்
காட்டாத பாதைகளை
சன்னலருகே அமர்ந்து
தோட்டத்தின் மீது
கருக்கல் நுழைவதை
பார்த்தபடி இருக்கிறது
பின்னர் ஓசையின்றி எழுந்து
வெகு அலட்சியமாக
இருளுக்குள் நடக்கிறது—
இரவு முழுவதையும்
எடுத்துக்கொண்டு
*
கவிதை மற்றும் ஒளிப்படம்: ராமலக்ஷ்மி