காலை அஞ்சரை மணி. கனவில் நான் ஒரு அழகான தீவில் ஐஸ்வர்யா ராயுடன் இளநீர் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு சுனாமி வந்து ஐஸ்வர்யாவை இழுத்துச் சென்றது. கண் விழித்துப் பார்த்தால், சுனாமி இல்லை—என் செல்போன் ‘வைப்ரேஷன்’ மோடையும் தாண்டி அலறிக்கொண்டிருந்தது. அரை தூக்கத்தையும் அறைந்து விரட்டிவிட்டு, கண்களைக் கசக்கி, தொடுதிரையைத் தொடாமலேயே பார்த்தேன்.
டிஸ்ப்ளேயில் ‘அக்கா’. இந்த நேரத்தில் அக்கா கூப்பிடுகிறாள் என்றால், இன்றைக்கு ‘சின்ன மாமனார் மேட்டர் ஓவர்’ என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
“தம்பி… சின்ன மாமனாரு நம்மள விட்டுப் போயிட்டாருடா. இருந்த வேலைய பூரா அப்படியே போட்டுட்டு சீக்கிரம் கெளம்பி வாடா இங்கன,” சொல்லி போனை கட் செய்தாள். அக்கா குரலில் ஒரு மெல்லிய நிம்மதி இழையோடியது எனக்குப் புரிந்தது.
நேற்றுதான் அத்தானை (அக்கா கணவரை) மதுரை சிம்மக்கல் ‘நூறு பல் ஆஸ்பத்திரி’க்கு அழைத்து வந்தேன். (அட, ஆஸ்பத்திரி பெயரே நூறுதான்! இங்கே பல் மருத்துவத்துக்கு ரொம்ப பேமஸ்.) அங்கு காலையில் போய் மாலை வரை காத்திருந்து, மதியத்திற்குப் பக்கத்திலேயே இருக்கும் கோனாரு கடையில் நல்லி எலும்பையும் கடித்துவிட்டு, அவருக்குக் கடவாய் பல்லுக்கு நட்டு, போல்ட் மாற்றிவிட்டு திரும்ப ஊருக்குக் காரில் ஏறியபோது அத்தானுக்கு டாடா காட்டினேன்.
அவரோ, “டேய் அருளு, ஸ்டியரிங்கைப் பிடிச்சா கை நடுங்குது, பல்லு துடிக்குது” என்று சீன் போட்டதால், நானே டிரைவராக அவதாரம் எடுத்து, இருந்த வேலையையெல்லாம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ராமநாடு ஆஸ்பத்திரிக்கு வண்டியை ஓட்டினேன். அங்கேதான் அக்காவின் சின்ன மாமனார் கொஞ்ச நாளாக ‘லிவிங்’.
அங்கே சின்ன மாமனாரைப் பார்த்தபோது, அவர் ஒரு மனிதராகத் தெரியவில்லை. ஏதோ லேபரட்டரியில் ரிப்பேருக்கு வந்த பழைய மெஷின் போலத் தெரிந்தார். ஆள் பாதியாக வற்றிப் போயிருந்தார். கண் மேலே சொருகிக் கிடந்தது. அவர் வயிறு மட்டும் ‘வாட்டர் டேங்க்’ போல உப்பிக் கிடந்தது. கை, கால், மூக்கு என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் டியூப்கள். பட்ஜெட் கிடைக்காத ஆங்கிலப் படத்தில் அரைகுறையான கிராஃபிக்ஸில் வரும் ஏலியன் மாதிரி இருந்தார்.
போன் மீண்டும் வைப்ரேஷன் மோடில் அலறி என் நினைவைக் கலைத்தது. நேற்று ஆஸ்பத்திரியில் பார்த்த அந்த ஏலியன் காட்சி அப்படியே பின்னுக்குப் போக, மீண்டும் அக்காவின் குரலில் இன்றைக்கு வந்து நின்றேன்.
“மூணு வருஷமா மாசத்துல இருபத்தஞ்சு நாள் ஆஸ்பத்திரிதான். அத்தையும் அத்தானும் அடகு வைக்காத நகையும் இல்லை, வாங்காத கடனும் இல்லை. அந்தப் பகவானுக்குக் கண்ணு இருக்குடா… மனுஷனை ரிலீஸ் பண்ணிட்டார்,” என்றவள், கூடவே வரும்போது என்னவெல்லாம் கொண்டுவர வேண்டும் என்ற லிஸ்டையும் வாசித்து முடித்தாள்.
பகவான் அவரை ரிலீஸ் பண்ணிவிட்டார், ஆனால் என்னை ‘லாக்’ பண்ணிவிட்டார்! சம்பந்தக்கார முறை செய்யப் போகும்போது வெறும் கையோடு போக முடியாது. பர்ஸில் இருக்கும் மொத்த காந்தி தாத்தாவும் இன்று எனக்குப் பிரியாவிடை கொடுக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியானது.
ராமநாதபுரம்—ஒரு விசித்திரமான ஊர். ஊரின் மொத்த நீளமே காலையில் தினமும் ‘வாக்கிங்’ போகும் தூரம்தான் இருக்கும். முக்கியமான இடம் என்றால் ஒரு பெரிய அரண்மனை; இப்போது அதுவும் அரை மனையாகத்தான் இருக்கிறது. அதைவிட்டால் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இந்த ஊரை ஆண்ட சேதுபதி மன்னர்கள் குடியும் குடித்தனமுமாய் வாழ்ந்ததற்குச் சாட்சியாய், இப்போதும் சேதுபதி வகையாக்கள் எல்லா தெருவிலும் குறைந்தது ரெண்டு மூணு குடும்பமாவது வாழ்கிறார்கள்.
“தம்பி… நாலு மணிக்கெல்லாம் தூக்கிருவாங்க. பாடி ரொம்ப வீக்கா இருக்கு, வெதவெதன்னு ஆகிறதுக்குள்ள காரியத்தை முடிக்கணும்னு அத்தை சொல்றா. சீக்கிரம் வா!” அக்கா மறுபடியும் போனில் பிரஷர் கொடுத்தாள்.
ஊர்ப் பெருமை பேச இது நேரமில்லை. ஆபீஸில் பெண்டிங் கிடந்த ‘காப்பி-பேஸ்ட்’ வேலைகளை அவசர அவசரமாக முடித்து, வீட்டிலிருந்து கிளம்பி மாட்டுத்தாவணி வந்து ஒன்-டு-ஒன் பஸ்ஸைப் பிடித்துவிட்டேன்.
நம்ம அவசரம் இந்தச் சமூகத்திற்கு எப்படித் தெரியும்? நான்கு வழிச்சாலை வேலை நடப்பதால், பஸ் ஆமை வேகத்தில் நகர்ந்தது. இருந்தாலும் அந்த இடைநில்லா பேருந்து நேரே இராமநாதபுரத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்தது.
இறங்கிச் சுற்றிப்பார்த்தால் ஒரே ஹாஸ்பிட்டல் போர்டுகளாகவே தெரிகிறது. இந்த இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஊரில் இப்போது நாற்பது, ஐம்பது மருத்துவமனைகள் முளைத்திருக்கின்றன—ஒவ்வொரு தெருவிலும் ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் உட்பட!
இந்த ஊரில் ஐம்பது வயதைத் தாண்டிய ஆண்களைப் பார்ப்பதே ஒரு சாதனைதான். அப்படி ஒருவரைப் பார்த்தால், உடனே அவரிடம் ஆட்டோகிராப் வாங்கலாம். ஏனென்றால், அத்தனை பேரும் ஐம்பதுக்குள்ளேயே ‘கிட்னி காலி’, ‘லிவர் அவுட்’ என்று விக்கெட்டைப் பறக்க விட்டுவிடுகிறார்கள்.
‘மாப்பிள்ளை வந்திருக்கேன்’ என்று அடையாளம் காட்ட ஆளுயர ரோஜா மாலை ஒன்றை வாங்கிக்கொண்டு, ராஜசிங்கமங்கலம் பஸ்ஸில் ஏறியபோது மணி மூணேகால்.
தனியார் பேருந்து. உள்ளே இளையராஜாவின் “ஜனனி ஜனனி…” பாடல் பக்திப் பரவசமாக ஓடிக்கொண்டிருக்க, உள்ளே சூழலோ ‘ஸ்பிரிட்’ அடித்துக் கொண்டிருந்தது. வண்டியில் கூட்டம் பிதுங்கியது. எனக்குக் கிடைத்ததோ ஒரு முக்காலி சைஸ் சீட்டின் நடு இருக்கை. இடது பக்கம் ஒரு ‘குடி’மகன், வலது பக்கம் ஒரு ‘குடி’மகன்.
வலது பக்கத்தில் இருந்தவன், பஸ்ஸைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதாக நினைத்து என் தோளிலேயே சாய்ந்துவிட்டான். அவனிடமிருந்து வந்த மணம்… மணம் அல்ல, அது அக்மார்க் ரசாயனத் தாக்குதல்! அவன் வாயைத் திறந்து ஒரு கொட்டாவி விட்டால் போதும், அருகில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தாலே ஒட்டுமொத்தப் பேருந்தும் சேர்ந்து வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது.
“சார்… கொஞ்சம் தள்ளி உட்காருங்க,” என்றேன் பவ்யமாக.
அவன் மெல்லக் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தான். அவன் கண்கள், வெல்டிங் வைக்கும்போது வரும் சிவப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரிந்தன.
“ஏலே தம்பி… என்ன ரொம்ப எகிறுற? மாலையோட வந்தா ஒனக்கு ஆலாத்தி எடுத்து மரியாதி குடுக்கணுமோ? நெஞ்சுல என்ன பெரிய தொரனு நெனப்பா ஒனக்கு?” என்று சத்தமாகப் பேசினான்.
கண்டக்டர் ஓடி வந்தார். “என்ன சார் பிரச்சினை?”
“இல்லீங்க… இவரு என் மேல சாயுறாரு… நாத்தம் தாங்க முடியல…”
கண்டக்டர் என்னை ஏலியனைப் பார்ப்பது போலப் பார்த்தார். “சார்… என்ன இந்த ஊருக்கு புதுசா வர்றீங்க போல? இங்க இதெல்லாம் ஒரு விசயமா சார்? அவன் கெடந்துட்டுப் போறான் பாவம்… ஏதோ ‘பாகா’ டயட்ல இருக்கான். நீங்க விவரம் தெரிஞ்ச ஆளுதானே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க சார்,” என்றார்.
அருகில் இருந்த மற்றொருவன், “ஏண்டா தம்பி… என்ன ஓவரா குதிக்கிற? கையில மாலையோட வந்தா ஒனக்கு ஆலாத்தி சுத்தி மருவாதி செய்யணுமாக்கும்? பெரிய சீமத்தொரனு நெனப்போ?” என்று சிரிக்க, அருகில் இருந்த மற்ற பயணிகளும், “ஆமாடா… இவரு பெரிய லண்டன் ரிட்டனு! எங்கியும் அட்ஜஸ்ட் பண்ணத் தெரியாத ஜென்மம்… ஒங்கையில இருக்கிற மாலைய ஒங்கழுத்துலயே போட்டு, இப்படியே அடக்கம் பண்ணிருவோம்டா… பாத்துக்க!” என்று ஆவேசமாய் முழங்கினர்.
எனக்குத் தர்மசங்கடமாய் இருந்தது. ஒரு கட்டத்தில் எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது—இந்த ஊரில் போதையில் இல்லாமல் இருப்பதுதான் சட்டப்படி குற்றமோ?
கண்டக்டர் என் மேல் பரிதாபப்பட்டு, ஓட்டுநருக்குப் பின்னால் இருந்த ஒரு இருக்கையில் என்னை அமர வைத்தார். அங்கே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.
“விடுங்க தம்பி… அதுவும் மருந்து மாத்திரை மாதிரிதான். அது இல்லாட்டா இந்த அக்னி வெயிலையும், பாட்டையும் (பாடுபடுவதை) சனங்க எப்பிடித் தாங்கும்? நீங்க விவரம் தெரிஞ்ச புள்ள… அவுக மேல ஏன் போயி எகிறுறீங்க?” என்று எனக்கு ‘அறிவுரை’ வழங்க ஆரம்பித்தார். அவரும் லேசான ‘நிதானத்தில்’தான் இருந்தார் என்பது அவர் கண்கள் சொல்லியது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே ‘டாஸ்மாக்’ என்ற ஒற்றை அச்சாணியில்தான் சுழன்றுகொண்டிருக்கிறது என்பது அந்த நிமிடம் எனக்குப் பளிச்சென்று உறைத்தது. இங்கே விவசாயம் பொய்த்துப் போகலாம், கடல் கூட வற்றிப் போகலாம், ஆனால் மதுக்கடைகளின் கல்லா மட்டும் எப்போதும் வற்றுவதே இல்லை. நிலத்தடி நீர் மட்டத்தை விட, இந்த ஜனங்களின் ரத்தத்தில் ஆல்கஹாலின் மட்டம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது.
கல்லீரல் கெட்டுப்போவது பற்றியோ, ஆயுள் ரேகை சுருங்குவது பற்றியோ இங்கே யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை; நாளைக்குக் கஞ்சிக்கே வழியில்லை என்றாலும், இன்றைக்குக் குவாட்டருக்கு வழி இருந்தால் போதும் என்ற மனநிலை.
எல்லாவற்றையும் விட விசித்திரம் ஒன்று உண்டு. விடியற்காலையிலேயே எழுந்து குளித்து, கஞ்சி போட்டு அயர்ன் செய்த வெள்ளையும் சொல்லையுமான வேட்டி-சட்டையை உடுத்திக்கொண்டு, ஏதோ கோவிலுக்குப் போவது போலக் கிளம்புகிறார்கள். ஒயின்ஷாப்பை திறப்பதற்கு முன்னரே, தவமிருக்கும் முனிவர்களைப் போலக் கியூவில் முண்டியடித்துக்கொண்டு நிற்பதை அவர்கள் அவமானமாகக் கருதுவதே இல்லை. கையில் பாட்டிலை வாங்கியவுடன், ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரனைப் போல நெஞ்சை நிமிர்த்தி, அதை ஒரு பெரிய கௌரவ அடையாளமாகவே பாவித்துத் திரிகிறார்கள். எவ்வளவு பெரிய சாபம் இது!
ஒருவழியாக ராஜசிங்கமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வந்தது. பஸ்ஸை விட்டு இறங்கியபோது, ஏதோ சிறையிலிருந்து விடுதலையான கைதி போல உணர்ந்தேன். இளையராஜாவின் ‘ஏப்ரல் மேயில பசுமையே இல்லை’ என்ற இனிமையான குரல் கூட என் காதுகளுக்கு ரகளையாகத்தான் கேட்டது.
பஸ்ஸை விட்டு இறங்கி, சின்ன மாமனார் வீட்டுத் தெருவுக்குள் நுழைந்தேன். வாசலில் போடப்பட்டிருந்த ஓலைப்பந்தலில் ஊர்க்காரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருந்தார்கள். உள்ளே அத்தை அழுதுகொண்டிருந்தாள். அழுகையில்கூட ஒரு சோர்வு தெரிந்தது. நான் அரும்பாடுபட்டுப் பஸ்ஸில் பாதுகாத்துக் கொண்டுவந்த அந்த ஆளுயர ரோஜா மாலையைச் சின்ன மாமனார் மீது போட்டேன். வெளிறிக் கிடந்த அந்த உடம்பில் இந்தச் சிவப்பு மாலை விழுந்தபோது, வறண்ட மொட்டைப் பாறையின் மேல் திடீரெனச் செவ்வரளிச் செடி முளைத்தது போலிருந்தது.
அங்கே சாவுக்கு வந்திருந்த உறவினர்கள் சும்மா இருக்கவில்லை. ஆளாளுக்கு ஒரு முறை, சடங்கு என்று ஏதேதோ சொல்லி, அங்கிருந்த எல்லோரையும் ஆழமாகக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். “தெற்கால தலை வையி”, “இல்ல இல்ல… வடக்காலதான் திருப்பணும்”, “மாலையை அப்படிப் போடாதீங்க, இப்படிப் போடுங்க” என ஆளுக்கொரு சாஸ்திரமும், சொந்தக் கதையும் பேசிக் கொண்டிருக்க, ஒருவழியாகக் குழப்பங்களுக்கு நடுவே காரியங்கள் முடிந்தன. கடைசியாக, அந்த ‘வாய்க்கரிசி’ படலமும் முடிந்தது. ‘இனிமேல் இவருக்குச் சோறும் வேண்டாம், தண்ணியும் வேண்டாம்’ என்பதற்கான இறுதித் தீர்ப்பு அது.
“ரைட்… நேரமாகுது, தூக்குங்கப்பா!” என்று யாரோ ஒரு புண்ணியவான் கத்த, பாடையைத் தூக்கினார்கள். முன்னால் நால்வர், பின்னால் நால்வர் என மொத்தம் எட்டுப் பேர் தோள் கொடுத்தார்கள். ஆனால், அந்த எட்டுப் பேருமே ஏற்கனவே ‘ஃபுல்’ போதையில் ஏறி நின்றவர்கள்!
அவர்கள் பாடையைத் தூக்கிய அடுத்த நொடி, மரண ஊர்வலம் ஒரு ‘நடனத் திருவிழா’ போல மாறியது. முன்னால் இருக்கும் நால்வர் இடப்பக்கம் தள்ளாடினால், பின்னால் இருக்கும் நால்வர் வலப்பக்கம் இழுத்தார்கள். பாடை நேராகப் போகாமல், சாலையில் கொம்பேறி மூக்கன் பாம்பு நெளிந்து போவது போல ‘ஜிக்-ஜாக்’ முறையில் சென்றது.
ஒருவன் கால் தள்ளாடி விழப் போக, பாடை ஒரு பக்கமாகச் சாய்ந்தது. எனக்கு நெஞ்சு அப்படியே தொண்டைக்குழிக்கு வந்துவிட்டது. சின்ன மாமனாருக்கு ஏற்கனவே வயிறு ‘வாட்டர் டேங்க்’ போல ஊதிப் போயிருந்தது. ‘இவனுங்க ஆடுற ஆட்டத்துல பாடை கீழே விழுந்து, அந்த ஊதின வயிறு மட்டும் எங்கேனும் வெடிச்சிடக் கூடாது சாமி’ என்று என் குலதெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு, உச்சக்கட்ட பதற்றத்தோடு பாடைக்குப் பின்னாலேயே ஓடினேன்.
ஒருவழியாகத் தள்ளாடித் தள்ளாடி சுடுகாட்டை அடைந்தோம். சின்ன மாமனாரைச் சிதையில் தூக்கிச் சார்த்தினார்கள். சுற்றிலும் விறகுக் கட்டைகளையும் வரட்டிகளையும் அடுக்கினார்கள். பொதுவாக உடம்பை எரிக்க மணிக்கணக்காகும். விறகும் மூட்டை மூட்டையாகத் தேவைப்படும்; நெய்யும் எண்ணெயும் குடம் குடமாக ஊற்ற வேண்டும். ஆனால், இந்த ராமநாதபுரம் மண்ணில் அன்றைக்கு நடந்தது ஒரு அக்மார்க் ‘மேஜிக்’.
கொள்ளிக்குடத்தை உடைத்துவிட்டு, அத்தான் கையில் தீப்பந்தத்தை ஏந்திச் சிதைக்கு நெருப்பு வைத்த அடுத்த வினாடி… ‘புஸ்ஸ்ஸ்’ என்ற பயங்கரமான சத்தத்துடன் உடல் மளமளவெனத் தீப்பற்றிக் கொண்டது. வழக்கமாக எரியாத கட்டைகளுக்கு இடையில் நெய் ஊற்றிப் பற்ற வைப்பார்கள், இங்கே நெய்க்கான தேவையே இருக்கவில்லை. பல தசாப்தங்களாக அவர் குடித்த ‘சரக்கு’ அவரது எலும்பு, தசை, ரத்த நாளங்கள் என உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊறிப் போயிருந்தது. அவர் ஒரு மனித உடலாக எரியவில்லை; நூறு வாட்ஸ் எத்தனால் எரியும் ‘மனித மெழுகுவர்த்தியாக’ உருகிக் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் விட உச்சக்கட்டம், அந்தச் சிதையில் இருந்து கிளம்பிய புகைதான். பொதுவாக பிணம் எரியும்போது ஒருவிதமான கருகல் நாற்றம் அடிக்கும், சுடுகாடே மூக்கைப் பொத்திக் கொள்ளும். ஆனால், இங்கே சின்ன மாமனார் எரியும்போது கிளம்பிய மணமோ… ஏதோ பிராண்டட் ஸ்காட்ச் தயாரிக்கும் பிரம்மாண்டமான சாராய ஆலைக்குள் நுழைந்தது போல கமகமவென்று அடித்தது.
சுடுகாட்டில் கூடியிருந்த அந்தப் போதைக்கூட்டம் ஓடிவந்து சிதையைச் சுற்றிலும் நின்றது. கிளம்பிய புகையை ஆழமாக, பிராணாயாமம் செய்வது போல மூச்சை இழுத்துச் சுவாசித்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கண்களை மூடி அந்தப் புகையை உள்வாங்கிவிட்டு,
“ஆகா… மாமா ஒரு மகராசன்! வாழுகுற காலத்துலயும் நமக்கெல்லாம் அள்ளி அள்ளித் தந்தாரு… இப்ப செத்தப்பொறவும் நம்ம சனங்களுக்கு ஒரு கிக்கக் கொடுக்குறாரே” என்று நெகிழ்ந்து போய் சிலாகித்துக் கொண்டார். சுற்றிலும் இருந்தவர்களும் “ஆமாப்பா… சாமி மாதிரி மனுஷன்” என்று போதைக் கண்களோடு தலையசைத்து ஆமோதித்தார்கள். விறகுக் கட்டைகள் கூட இன்னும் முழுதாகக் கருகவில்லை, அதற்குள் சின்ன மாமனாரின் உடல் அக்னிப் பிரவேசம் முடிந்து அஸ்தியாகிக் கிடந்தது!
சுடுகாட்டுச் சாம்பலை உதிர்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது நான் யோசித்தேன். யோகா, தியானம் என்று உடம்பை வளர்க்கும் வித்தைகள் எதுவும் இந்த மண்ணுக்குத் தேவையில்லை போல. ரத்தத்தில் ‘எரிபொருள்’ மட்டும் நிரம்பி வழிந்தால் போதும்… இந்த மனித மெழுகுவர்த்திகளின் வாழ்க்கையும் ‘பிரகாசமாக..!’ எரிகிறது, ஆயுளும் ‘வேகமாக..!’ முடிகிறது.