Home இதழ்கள்இதழ் 16ஈற்றடிக்கோர் பாட்டு – 12

ஈற்றடிக்கோர் பாட்டு – 12

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

ஆச்சர்யம் ஆனந்தம் யாவுமே தந்திட்டாய்
பூச்சொரியும் புன்னகைக் கொண்டதோர் -பேச்சில்
கருணையும் காதலும் சேர்ந்ததில் நானும்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

சின்னக்கண்ணன்
ஓசையெலாம் அங்கே உளத்தினில் பல்கொண்டு
ஆசைக்கு நெய்வார்த்தேன் அன்புடன் – மாசை
கரும்பென எண்ணினேன் கற்றனன் பாடம்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

மாலா மாதவன்
அருளே உருவே அருள்வாய் திருவே
உருமுன் ஒடுங்கிட ஓங்கும் – பெருத்த
திருவடி கண்டேன் திருமுகம் கண்டேன்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

ருக்மணி வெங்கடராமன்
விழிகளில் நீ வந்தாய்
விடியலைத் தந்தாய்
நம்பிக்கையை விதைத்திட்டாய்
நட்சத்திரத்தின் ஒளியாய்
எதற்கென்றே தெரியாமல்
என் மனம் உனை நாட,
எதிர்பார்ப்பைத் தாண்டியே
என்னையே உனக்குத் தந்தேன்
உன் அன்பின் ஆழத்தில்
உணர்வுகள் கரைந்திட,
உலகமே மறந்துபோய்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்!

நளினி சுந்தர்ராஜன்
திசைகள் எட்டும் தேடித் திரிந்து
விழிநீர் வழியக் காத்திருந்தேன்
விசைகள் யாவும் உன்னிடம் சேர்க்க
கனவில் ஏங்கிய நாளும் வந்ததே!
நிழலாய்ப் பின்தொடர்ந்த நெஞ்சம்
பனியாய் உறைந்து கரைகையில்
பூத்த நின் முறுவலில் மயங்கி
அகிலம் நின்றிடத் தோன்றிடுதே!
இருண்ட காலம் செய்த காயமெல்லாம்
தொட்டுத் தழுவும் கணத்தினில் ஆறிட
இதமாய்த் தோள் சாய்ந்து கண்மூடி
இதயம் சற்று நிம்மதி கொள்கிறதே!
ஆராத் துயரம் தீர்ந்த நன்னாளில்
ஆனந்தக்கண்ணீர் வழிகின்ற பொழுதினில்
என்றும் மாறாக் காதலால் அணைத்து
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்!

உஷா கண்ணன்
விழியிலே கலந்து உதட்டிலே கிறங்கி
சிரம் தாழ்ந்து வாங்கிய தாலி
கழுத்திலே உரச கைப்பற்றிய நேரம்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

கண்மணி பாண்டியன்
என் வெற்றிக்கு நீ களித்தது
என் வலிக்கு நீ அழுதது
என் நிழலாய் என்னை பிரியாதிருந்தது
மௌனத்திலேயே என் மனத்தை படித்தது
இவையெல்லாம் கண்டு
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்.

பவளமணி பிரகாசம்
தேனுண்ணும் வண்டாய் பறந்து திரிந்தேன்
பிள்ளைகள் ருசியறிந்து பசியாற்றி களித்தேன்
நரை வந்த பின்னே களைத்தேன்
மனமே விருப்புடன் விழுந்தேனுன் உள்

ஹேமா செந்தில்
குறும்பானப் புன்முறுவல் கொஞ்சும் எழிலில்
துறுதுறுப் பார்வையில் பொங்கும் கனிவில்
கரும்பாய் இனிக்கும் மொழியில் கிறங்கி
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்.

ப்ரசாத் ஜெயவேலு
கார் வசிக்கும் குழல் கொண்ட
தேர் அமர்ந்த இடையாளை – விழி
அரும்பு அம்பு என அறியாது
விருப்புடன் வீழ்ந்தேன் உள்

சுந்தர் லக்ஷ்மணன்
பருப்புடன் தேங்காயும் பூரணம் கொள்ளாம்
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

ராமலக்ஷ்மி ராஜன்
நதி தன் தொலைதூரக் கரையை
மறந்து விட்டிருந்தது
மூடுபனி மெதுமெதுவாகப் படர்ந்து
பரிச்சயமான ஒவ்வொன்றையும்
அழித்துக் கொண்டே வந்தது
மரங்களை, தூரத்து மலைகளை
கடந்து வந்த பாதையைக்கூட
நிச்சயமற்ற இந்தக் காலைக்குள்
என் படகு அவசரமின்றி நகர்ந்தது
மரப்பலகைகளில் தண்ணீர் உரசும்
மெல்லிய ஓசையைச் சுமந்தபடி
சூழ்ந்திருந்த மௌனத்திற்கு
எந்த வரைபடமும் இல்லை
நதி எங்கே திரும்பும் என்றறிய
எவ்வித அடையாளமும் இல்லை
இருப்பினும் துடுப்பு மூழ்குகிறது
மேலெழுகிறது, மீண்டும் மூழ்குகிறது
சில பயணங்கள் நம்மை எங்கே
அழைத்துச் செல்கின்றன என்பதை
வெளிப்படுத்த விழையாதிருக்கலாம்
விழிகளால் காண முடியாததை
என் இதயம் உணர்ந்திருக்கலாம்—
மெல்லத் துடுப்பை வலித்தபடி
உனைத் தொடர்கிறேன் எனதன்பு நதியே
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்.

Author

You may also like

Leave a Comment