Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!

by Iyappan Krishnan
0 comments
This entry is part 52 of 53 in the series அசுரவதம்

எதைக் கண்டு அனுமன் அச்சத்தில் நின்றான்?

அவன் அந்த வனத்துக்குள் வரும் முன்பு இராவணன் தூக்கம் தொலைத்து மஞ்சத்தில் வீழ்ந்திருந்தான். வானம் இன்னும் இருண்டு, “என்னைத் தொட்டு ஒட்டிக்கொள்” என்று பெண்களுக்குச் சொல்வது போல மையாய்க் கறுத்திருந்தது.

அவன் கண்கள் ஆகாயத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிரும் நட்சத்திரங்களும் கூட அவன் கண்களில் தென்படவில்லை. அவனுக்கு அஞ்சி ஒளிந்துகொண்டனவா அல்லது மதுவின் போதை அவன் கண்களை மங்கச் செய்ததா? தெரியவில்லை.

அந்தக் குரங்கு பட்ட அவஸ்தைகளை எண்ணி, தன் தந்திரங்கள் வெற்றியடைந்ததாக அவன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தான். ‘என்னைப் போன்ற ஒரு பேரரசனுக்கு இத்தகைய தந்திரங்கள் இல்லாவிடில் எப்படி?’ என்று நினைத்து, ஒரு கையால் தரையை ஓங்கித் தட்டியபடியே மதுவை இன்னும் கொஞ்சம் சுவைத்தான்.

அந்த நேரத்தில் ஒற்றர்கள் அவன் முன்னால் வந்து, குரங்கின் தோல்வியைப் பரவசத்துடன் வர்ணித்தார்கள்.

“அரசே, நீங்கள் விரித்த ஒன்பது மாய வலைகளுக்குள் சிக்கி அந்த அற்பக் குரங்கு சின்னாபின்னமாகிவிட்டது!” என்றான் ஒருவன்.

“மீண்டும் சொல்… மீண்டும் சொல்!” என்றான் இராவணன். எப்போதும் உணர்ச்சிகளைக் காட்டாத அவனுடைய வறண்ட குரல் இப்போது மெல்லிய ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. அது மண்டோதரியின் ரகசியத்தை உடைத்துவிட்ட மமதையையும், லங்கிணியையே வீழ்த்திய குரங்கை அலைக்கழித்து விரட்டியடித்ததையும் எண்ணி, மதுபோதையிலும் வெற்றிப் போதையிலும் வசமிழந்து கிடக்கும் ஒரு பேரரசனின் மனநிலை.

“ம்ம்… சொல் என்றேன்!” என்றான் இராவணன். அவன் குரலில் இருந்த கடுமை, செய்தியின் சில கணத் தாமதத்தைக் கூட அவன் விரும்பவில்லை என்பதைக் கட்டியம் கூறியது.

“ஆம் அரசே! உண்மையை அறிய முடியாத விரக்தியிலும், உடல் சோர்விலும் அது லங்காபுரியை விட்டு வெளியேறிவிட்டது.”

“ம்ம்…” என்ற ஒலி மட்டும் வந்தது.

“அரசே, இப்போது திரிகூட மலையின் ஒரு பாறையில், தோல்வியின் அவமானம் தாளாமல், செய்வதறியாது கண்களை மூடிச் செயலற்று அமர்ந்திருக்கிறது.”

அறிவிலிகளின் கண்களுக்குத் தியானம் என்பது செயலற்ற தன்மை. அகம் விழித்தெழுந்து பிரபஞ்சத்தோடு ஒன்றும் அந்த யோக நிலையை, ஒரு முட்டாளின் மூளை ‘தோல்வியின் விரக்தி’ என்று மட்டுமே மொழிபெயர்த்துக்கொள்ளும். ஒற்றர்கள் அதைத்தான் செய்தார்கள்.

இராவணனின் இதழ்களில் ஒரு குரூரமான எக்காளச் சிரிப்பு விரிந்தது. அவனது தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணற்ற சஞ்சலங்கள் இப்போது முற்றிலுமாக அடங்கிவிட்டன. அவன் மெல்ல மெல்ல நிதானத்திற்கு வரத் தொடங்கினான்.

சீதை தன் மகள் அல்ல என்ற உண்மை அவனுக்குத் தந்திருந்த விடுதலையோடு, இப்போது எதிரியின் ஒற்றனும் ஏமாந்து தோற்றுவிட்டான் என்ற செய்தி அவனது அகங்காரத்தை மலையளவு உயர்த்தியது.

“அந்த வானரம் இன்னும் கண்காணிப்பு வளையத்தில் இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள்,” என்றான்.

“அது தேவையற்றது அரசே! இந்நேரத்திற்கு அந்தக் குரங்கு கடலில் பாய்ந்து உயிர் துறந்திருக்கும்!” எனச் சொல்லிச் சிரித்த ஓர் ஒற்றனின் மார்பில் இராவணனின் கூர்வாள் ஆழப் பதிந்தது. குருதி பீறிட்டது. மற்றவர்கள் திகைத்து மண்டியிட்டனர்.

“உ… உத்தரவு அரசே…” என்றபடி நடுங்கி நின்றவர்களை வெளியேறச் சொன்னான்.

ஒரு வீரனுக்குக் களம் என்பது எதிரியை வெல்வது மட்டுமல்ல, அவனது நம்பிக்கைகளை உடைப்பது. ‘எப்படியும் இராமன் வருவான்’ எனக் காத்திருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக வந்த குரங்கு திரும்பிவிட்டது என்ற ஒற்றர்களின் சொல் அவனுடைய புற மனத்திற்கு மகிழ்ச்சியூட்டினாலும், அவன் ஆழ்மனம் இன்னும் எச்சரித்துக் கொண்டே இருந்தது.

அவன் உள்ளுணர்வு, அந்தக் குரங்கு இன்னும் இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தது. தூக்கம் முழுதும் தொலைந்துபோய், அவன் கண்களில் சீதையை மீண்டும் பார்க்கும் ஆவல் உண்டானது.

எண்ணத்தில் தோன்றும் இச்சைகளே மனிதனை இயக்கும் கருவிகள். காமம் கொண்ட ஒருவனின் மனது, பலவித இச்சைகளையும் தூண்டுதல்களையும் உண்டாக்கும் கொடிய பொறி. இராவணன் அந்தப் பொறியின் வலைக்குள் வெகுவாகச் சிக்கியிருந்தான். சீதையைக் காணும் எண்ணத்தைச் செயலாக்க உடனே அசோகவனம் நோக்கி விரைந்தான்.

வெளியே விடியத் தொடங்கியிருந்த அதே வேளையில், மாளிகைகளின் மாயைகளைத் தாண்டி, பட்டாம்பூச்சிகள் காட்டிய வழியில் அவற்றின் மெல்லிய சிறகசைப்பைப் பின்தொடர்ந்து வந்த அனுமன், அசோகவனத்தின் அடர்ந்த இருளுக்குள் நுழைந்தான்.

வானுயர்ந்து நின்ற அந்தப் பிரம்மாண்டமான சிம்சுபா மரத்தின் கிளைகளுக்குள் அவன் தன்னை மறைத்துக் கொண்டு கீழே நோக்கினான்.

அங்கே… உலகத்தின் அத்தனை துயரங்களையும் ஒருங்கே சுமந்துகொண்டு, ஒற்றை ஆடையோடு, தூசி படிந்த உடலோடு ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அனுமனின் உள்ளம் இராமனைக் கண்டபோது உருகியதை விடப் பலமடங்கு அன்பில் குழைந்தது.

அங்கே அந்த அழுக்கும் மரவுரியும் அவளது ஒளியைச் சிறிதும் மறைக்கவில்லை. அவளது முகம் கொழுந்துவிட்டு எரியும் ஒரு தவத்தின் தீபமாக, உருக்கியெடுத்த தூய பொன்னாகப் பிரகாசித்தது.

அழுது வடிந்த கண்களிலிருந்து கொட்டிய நீர் அவளது ஆடையை நனைக்க, உடலின் வெப்பம் அந்த உடையை உடனே காயவைத்தது. அவள் கண்கள் வடதிசை நோக்கி எதையோ, யாருடைய வருகையையோ எதிர்பார்ப்பது போல் சதா பார்த்துக்கொண்டே இருந்தன.

அனுமனின் இதயம், தடையுடைந்த நதியெனப் பெருக்கெடுத்தது. அவனது உள்ளம் பேரானந்தத்திலும், அதே சமயம் அன்னையின் நிலையைக் கண்ட அளப்பரிய துயரத்திலும் விக்கித்து நின்றது. அந்த அதிகாலைப் பொழுதின் முதல் சூரிய ஒளி அவள் இருக்கும் இடத்தை மட்டும் பொன்மயமாக மாற்ற, அங்கே இருப்பவள் தேவதைகளுக்கெல்லாம் மேலானவள் எனப் பறைசாற்றியது.

“இவர்தான் என் அன்னை சீதையாக இருக்க வேண்டும்!” என்று உறுதியாக நினைத்துக் கொண்டான் அனுமன்.

இதுவரை அவன் உடல் ஒரு வைராக்கியத்தில் வஜ்ஜிரம் போல் உறுதியாக நின்றிருந்தாலும், அன்னையைக் கண்டுவிட்டோம் என்ற ஆசுவாசம் இதுநாள் வரை அவன் பட்ட சோர்வுகளை எல்லாம் ஒன்றாகக் கொண்டுவந்து நிறுத்தியது. ‘சற்று இளைப்பாறு’ என்று அவனை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் தடுத்தது. பசி தூக்கமில்லா அவன் கண்கள், ‘அன்னை இங்கேதான் இருக்கிறாள்; கண்டுபிடித்துவிட்டாய்… எனக்குக் கொஞ்சம் ஓய்வு கொடேன்’ என்று கெஞ்சின.

அவனையும் மீறி அவன் கண்கள் சற்றே கனத்துக் கீழிறங்க முற்பட்ட அந்த நொடியில், மௌனத்தைக் கிழித்துக்கொண்டு அங்கே தனியனாக வந்தான் இராவணன். அனுமனின் அகமும் புறமும் முழுமையாக விழித்துக்கொண்டன.

அவனது காலடி ஓசையைக் கேட்டதும் வருவது இன்னாரெனச் சீதைக்குப் புரிந்துவிட்டது. அவனது இருப்பு அவளுக்கு ஒரு புழுவின் இருப்பை விடக் கீழானதாகவே பட்டது.

“சீதா!” என்றான் இராவணன், அதிகாரத்தின் உச்சத்தில் நின்று. “இன்னும் எத்தனை காலம் இந்த மரத்தடியில் உன் பிடிவாதத்தை விதையிட்டு வளர்க்கப் போகிறாய்?”

சீதை தரையில் முன்பு போட்ட துரும்பு இன்னும் அங்கே இருப்பதைக் கண்டாள். அவள் ஒரு சிறு குச்சியைக் கொண்டு அந்தத் துரும்பைச் சீண்டினாள். இராவணன் அவளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டான்.

“அசட்டுப் பேதையே! உனக்கு இனி எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த உலகத்தில் உன்னைக் காக்க எவனும் வரப்போவதில்லை. என் ஆசைக்கு இணங்கு. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் மகுடத்தை உன் காலடியில் வைக்கிறேன்!”

அவனது சொற்கள் சீதையின் காதுகளில் நஞ்சாக இறங்கினாலும், அவளது மனம் துளியும் சலனப்படவில்லை. அவள் இராவணனை நேராகப் பார்க்கவில்லை.

“துரும்பே, காற்றடித்தால் நீ இப்போதே கூட மரத்தின் உச்சிக்குச் சென்றடைந்துவிடலாம். ஆனால் அங்கிருக்கும் கருடனுக்கு நீ இணையாக முடியுமா என்ன?” என்று சொல்லி, ‘ஃபூ’ எனக் காய்ந்த அந்தப் புல்லை ஊதினாள். காற்றின் வேகத்திற்கு அது நகர்ந்து சென்று வேறோர் இடத்தில் வீழ்ந்தது.

“பெருங்காட்டைத் தீ சூழும் போது கருடன் போல் உன்னால் பறக்க முடியாது துரும்பே! உன்னை அக்கினி தீண்ட வேண்டும் என்றில்லை; காடு பற்றி எரியும் அந்த வெப்பத்திலேயே நீ கருகிப் போவாய்!”

“பெண்ணே…” இராவணன் குரலில் இப்போது அதிகாரம் நிரம்பியது.

“கேள் துரும்பே, கேள்! என் நாயகனால் இந்த இலங்கையே பெருங்காடாகத் தீப்பிடித்து எரியும். அப்போது நீ எத்தனை உயரத்தில் பறந்தாலும், அறத்தின் நாக்கு தீயென உன்னைப் பற்றி எரிக்கும்!”

“என்ன அகங்காரம்! என்னை யாரென்று நினைத்துப் பேசுகிறாய்?” அவன் உள்ளம் கொந்தளித்தது. அந்த ஒற்றைப் புல் துரும்பு, மீண்டும் ஒருமுறை அவனது மாபெரும் அகங்காரத்தைச் சுக்குநூறாக உடைத்தது.

“கேள் துரும்பே! என் ஒரு சொல்லால் இந்த ஏழு உலகையும் சுட்டெரிக்கும் வல்லமை எனக்கு உண்டு. ஆம், நான் ஜனகனின் மகள்; இந்திரனுக்கே போரில் உதவிய தசரத சக்கரவர்த்தியின் மருமகள்! எல்லாவற்றிற்கும் மேலாக… என் நாயகன் யார் தெரியுமா துரும்பே? அவன் ஆதி பரம்பொருளுக்கு இணையான அறத்தின் நாயகன்!”

“பெண்ணே… அந்த மானிடன்…” என்று இராவணன் ஆரம்பித்தபோது, அவனைத் தொடர்ந்து பேசவிடாமல் உயர்த்திய குரலில் துரும்பிடம் பேசினாள் சீதை.

“என் நாயகனின் பெருமை உலகறிய வேண்டும் என்பதற்காக இது ஆதிநாயகன், பரம்பொருளின் விளையாட்டு. ஆகவே துரும்பே, என் வாக்கின் தீ இன்னும் உன்னைச் சுட்டெரிக்காமல் இருக்கிறது… போ!” என்று அந்தத் துரும்பைத் தள்ளினாள். அப்போது வீசிய காற்றின் வேகத்தில் துரும்பு பறந்து சென்று காணாமல் போனது.

சீதை சிரித்தாள். அந்தச் சிரிப்பில் நெருப்பிருந்தது; அந்தச் சிரிப்பில் கொலைவாளின் கூர்மை இருந்தது.

அனுமனின் மேனி சில்லிட்டது. அன்னையின் துணிவும், கற்பின் வலிமையும் அவனை மெய்மறக்கச் செய்தன.

தன் கோபத்திற்கும், தன் கெஞ்சலுக்கும், தன் செல்வத்திற்கும் பணியாத அவளது அந்தச் சலனமற்ற நிர்மலமான பதில் இராவணனுக்குப் பெரும் சினத்தை மூட்டியது. எப்போதெல்லாம் ஒருவனின் அகங்காரம் அடிபடுகிறதோ, அப்போதெல்லாம் அது வன்முறையாகவே வெளிப்படும். இராவணனிடமிருந்தும் அது வெளிப்பட்டது.

இராவணனின் கண்கள் கொடூரமாகச் சிவந்தன. அவனது கைகள் இடுப்பிலிருந்த சந்திரகாசம் என்னும் மாபெரும் வாளைச் சீறிக்கொண்டு உருவின.

“இனி உனக்கு அவகாசம் இல்லை! இக்கணமே என் காலடியில் வீழ்; இல்லையேல் இந்த வாளுக்கு உன் உடல் இன்று இரையாகும்!” என்று கர்ஜித்தபடி வாளை ஓங்கினான்.

சீதையின் வாழ்வு இத்தோடு முடிந்தது என அரக்கியர் எல்லோரும் பயந்த அந்தத் தருணத்தில், அரக்கியர் கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு பெண் குறுக்கே பாய்ந்து இராவணனின் வாளைத் தடுத்து நிறுத்தினாள். அவள் திரிசடை!

“அரசே, நில்லுங்கள்!” அவளது குரலில் உறுதி இருந்தது.

“ஆயுதமற்ற, ஆதரவற்ற ஒரு பெண்ணைக் கொல்வது மூவுலகை வென்ற உங்கள் வீரத்திற்கு அழகா? அது உங்கள் மாபெரும் தவத்திற்கும், குலத்திற்கும் தீராத பழியைச் சேர்க்கும்!” என்றாள்.

“யாரென்னைத் தடுப்பது?” என்றான் இராவணன். சீற்றத்தின் வசத்தில் சிக்கித் தன்வசமிழந்த நிலையில், தன்னைத் தடுக்கும் அவ்வளவு தைரியம் யாருக்கு உண்டு என்ற ஆச்சரியம் அவனுக்கு உண்டானது.

“தங்கள் மகள்தான் பெரியப்பா!” என்றாள் திரிசடை.

‘மகள்’ என்ற அந்த ஒற்றைச் சொல் மீண்டும் அவனுக்குச் சஞ்சலத்தை ஊட்டியது. அவன் வாள் கீழிறங்கியது. அவன் சீதையை மறுபடி பார்த்தான். வேதவதியின் கழுத்தின் மச்சமும், அவளின் முகத்தில் காணும் நிரந்தர அமைதியும் சீதைக்கும் இருந்தால், காண்பவர் இருவரும் ஒருவரே என எண்ணக்கூடிய அளவிலான உருவ ஒற்றுமையைக் கண்டான்.

ஒரு கொடியவனின் மனம் எதற்கும் அஞ்சாது, ஆனால் ‘மகள்’ என்ற திரிசடையின் அந்த வார்த்தைகள் இராவணனின் ஆழ்மனதில் இருந்த ஒரு மெல்லிய அச்சத்தைத் தொட்டு எழுப்பின. அவனது ஓங்கிய வாள் தளர்ந்தது; வாளை உறையிலிட்டான்.

“சீதா! உனக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ மனம் மாறாவிட்டால், உன் ரத்தம் என் அரண்மனையின் படிக்கட்டுகளைக் கழுவும்!” என்று வஞ்சத்தோடு சீறிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அசுர வேகத்தில் அங்கிருந்து அகன்றான் இராவணன்.

அரக்கிகளின் கூட்டம் விலகியது. திரிசடை சீதையின் அருகே வந்து, “அன்னையே, கலங்காதீர்கள். அறம் ஒருபோதும் தோற்காது. நான் கண்ட கனவு மெய்யாகும். உங்கள் கணவர் உங்களை மீட்கும் நாள் நெருங்கிவிட்டது; ஒரு தூதும் உங்களுக்கு வரும். என் ஆருடம் பலிக்கும்,” என்று கனிவோடு ஆறுதல் கூறிவிட்டு, அவளது தனிமைக்கு மதிப்பளித்துச் சற்றே தொலைவில் சென்று அமர்ந்தாள்.

ஆனால், சீதையின் மனம் ஒரு மாபெரும் இருண்ட சூறாவளியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இராவணனின் அவமானகரமான சொற்கள் அவளது உடலைச் சுடவில்லை; ஆனால் தனிமையின் வெறுமை அவளைச் சுட்டது.

ஏதுமற்ற நிலையில் ஆதரவற்ற மனம் நூறு கொலையாளிகளுக்குச் சமமானது.

‘ஒருவேளை இராமன் என்னை மறந்துவிட்டாரோ? இல்லை என் நிலை அறியாமல் தவிக்கிறாரா?’ என மனம் குழம்பினாள்.

‘இல்லை இல்லை… இலக்குவனை நான் தீய சொற்களால் திட்டியதை அவர் அறிந்திருப்பார். அதனால்தான் என் மீது கொண்ட கோபத்தில் என்னைத் துறந்திருப்பாரோ?’ என்றும் யோசித்தாள்.

அவள் எண்ணங்கள் சுழலத் தொடங்கின. அவளுக்குள் ஆயிரமாயிரம் அர்த்தமில்லாக் கேள்விகள் உருவாகத் தொடங்கின. அவள் சட்டென்று யாரும் எதிர்பார்க்காத முடிவொன்றை எடுத்தாள்.

கண்களில் வழிந்த நீரைத் துடைக்காமலேயே, மெல்லத் தள்ளாடி எழுந்தாள் சீதை. அங்கே மரத்தின் கீழ் தொங்கிய பூங்கொடிகளைக் கொண்டு ஒரு மாபெரும் கயிறாக முறுக்கினாள். அந்தச் சிம்சுபா மரத்தின் கிளையிலிருந்து தொங்கிய அடர்ந்த கொடியோடு சேர்த்துத் தன் கழுத்தில் மாட்டிக்கொள்ள அவள் தன் கைகளை உயர்த்தினாள்.

மரத்தின் உச்சியில் இருந்த அனுமனின் இதயம் அந்தத் தருணத்தில்தான் முற்றிலுமாக உறைந்துபோனது.

அவன் தன்னை அறியாமலேயே வாய்விட்டு அலறினான்:

“இராமா… இராமா!

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்

Author

You may also like

Leave a Comment