Home கவிதைஈற்றடிக்கோர் பாட்டு – 20

ஈற்றடிக்கோர் பாட்டு – 20

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கல்லை விழுங்கும் கடல்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

சொல்லால் திருந்தார் சுயமெதும் கொண்டிடார்
வெல்லுதல் ஆகுமோ வீம்பினை – அல்லாது
கல்லாதப் புல்லர் கனவுண்ணும் காலம்போல்
கல்லை விழுங்கும் கடல்

இனி தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்..

சுபாஷிணி ரமணன்
ஆழிசூழ் பூமியில் ஆட்டங்கள் போட்டாலும்
வாழிநீ என்றுமே வாழ்த்துகள் பெற்றாலும்
நில்லா உலகில் நிலையில்லா வாழ்க்கையாம்
கல்லை விழுங்கும் கடல்

ஜாய் சத்தியா
தூரத்தே யானைபோல் தோன்றும் மலையடி
வாரத்தில் நான்கண்டேன் வார்கடலை ஆராய்ந்து
சொல்லப் புகுவேனத் தோற்றம் பெரும்பாறாங்
கல்லை விழுங்கும் கடல்

மது ஸ்ரீதரன்
குரங்கின் பெரும்படை கீழேகற் பாலம்
அரங்கன் அருளலால் வேறென்? – பெருங்கடலின்
எல்லை வரையில் எளிதாய்ச் சுமந்ததே
கல்லை விழுங்கும் கடல்

இப்னு ஹம்துன்
கோட்டையும் கொத்தளமும் கொண்டிங்கு வாழுதற்கே
நாட்டத்தைக் கொள்கின்றோம் நாமெல்லாம் – ஆட்டமெல்லாம்
வெல்வதற்காம் ஆனாலும் வேந்தர்க்கும் காலமென்ப
கல்லை விழுங்கும் கடல்

சுந்தர ராசன்
வானில் மிகப்பெரிய மாணிக்கக் கல்பந்து
தானிந்தத் தாரணியைச் சுற்றிவிட்டு – மோனமுற
அல்விரையும் போதாம்நல் அந்தி சரிகையிலக்
கல்லை விழுங்கும் கடல்

ஹேமா செந்தில்
கற்கும் வயதில் கல்லாது
அற்றைய தினம் ஆடியது
மணம் முடித்து புகுந்தவீட்டில்
கணப்பொழுதும் நிம்மதி இன்றி
கணவனும் மாமியும் மாற்றிமாற்றிப்
பாடுபடுத்தப் பிழைக்கும் வழியறியாது
படிப்பறிவில்லாக் காரணத்தால்
துடிப்புடன் செயலாற்ற இயலாது
துடிக்கும் நிலை அந்தோ பரிதாபம்
கல்லை விழுங்கும் கடல்.

உஷா கண்ணன்
கோபத்தில் நீ தெறித்த சொல்
ஆழ் மனதில் சுட்டாலும் – உன்மீது
கொண்ட காதலினால் தணிந்த நான்
கல்லை விழுங்கும் கடல்..

விஜி சம்பத்
இதுவும் கடந்து போகுமென
எதையும் தாங்கும் இதயம் போல
பூவுலகின் பார(வ)ங்களையெல்லாம்
தன்னுள் புதைத்து அமைதி காக்கிறது
கல்லை விழுங்கும் கடல்!

நளினி சுந்தர்ராஜன்
பேசாது போகும் நாட்களெல்லாம்
கூரான முட்களாய்க் குத்தும்
சொல்லாமல் விடும் சொற்களெல்லாம்
சொப்பனத்தில் ஒலிகளாய் வதைக்கும்!
எண்ணத்தில் கோபம் தற்காலிகமென்றாலும்
தீரும் வரை தவிப்பு கொல்லும்
பிணக்குகள் பல வந்து தீர்ந்தாலும்
ஒவ்வொன்றும் பிரிவச்சம் கூட்டும்!
மனத்தாங்கலிலும் ஓயாத நினைவு
பந்தத்தின் ஆழம் தனை மெய்ப்பிக்கும்
ஊடலென்பது உறவில் கல்லானால் காதல்
கல்லை விழுங்கும் கடல்!

பவளமணி பிரகாசம்
மெல்ல சிவக்குது அந்தி வானம்
செல்லமாய் சூரியன் தொட்டுச் சென்றதில்
வெல்லமாய் இனிக்கும் காதல் அனுபவம்
கல்லை விழுங்கும் கடல் பகாசுரனாய்

பிரபா ஸ்ரீதர்
மௌன முகமூடியினுள்
இறுகி இறுமாந்திருந்த
பாறைப் பொழுதுகளில்
அன்பெனும் நீர் சுமந்து
தொட்டுத் தொட்டு சல்லாபித்து
தொடர்ந்து வந்தே முத்தமிட்டு;
காதலின் கதகதப்பில்
அசந்திருந்த அரைநொடி.
ஆர்ப்பரித்தெழுந்து
வேகமெற்றிக் களியூட்டி
தலையேறி கூத்தாடி
மெல்லப் புலம்-பெயர்த்து;
தன்னிலை மறந்து தள்ளாடி
வியர்த்து விதிர்விதிர்த்த
கல்லை விழுங்கும் கடல்.

கண்மணி பாண்டியன்
அதிசயச் சுரங்கமாம் கடல்
உள்ளே எண்ணிலடங்கா கயல்
நன்னீர் நதிகளின் புகல்
அந்நீரை உறிஞ்சும் முகில்
அலைகள் மீண்டும் மீண்டும் தழுவும் மணல்
அதுவே ஆக்ரோஷமானால் புயல்
பண்பட்டோர் தன்னுள் அடக்கும் சினம் போல்
கல்லை விழுங்கும் கடல்.

ருக்மணி வெங்கட்ராமன்
கனவிலேயே மூழ்கி எந்நேரமும் இருப்பர்
கனமும் அறிவாக சிந்திக்க இயலார்
பிறரது கருத்துகளை மதிக்க தெரியாதவர்
பின்னாளில் வருந்தி என்ன பயன்?
காலத்தின் அருமையை சிந்திக்க மறந்தவர்
கல்லை விழுங்கும் கடல்

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment