Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

0 comments

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

கபடப் புறா

நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டு
ஒரு குறும்புக்காரப் புறா
“கோவில் மசூதி சர்ச்” மேல்
ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.
ஒருவேளை
“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?!

“ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப் புறா
பசித்துத் துடிப்பதுபோல் முகபாவனை காட்டும் அந்தப் புறா
வெள்ளை இறக்கைகளைக் காட்டி
தானியங்களை எல்லாம் பொறுக்கிக்கொண்டு
அடுத்தகணமே கண்ணுதப்பி மறைந்துவிடும் அந்தப் புறா

இலைகளுக்குக் கிளைகளோடு
கிளைகளுக்குக் காய்களோடும்
பகைமூட்டிப் பிரித்துவிட்டு
பசும் மரத்தைக் கொஞ்சம் சுயநலத்தால் தீக்கிரையாக்கி
“குளிர் காய்வதின்” சுவையில் மூழ்கிப்போனது அந்தப் புறா

அதோ
ஐயா “சொல்லுங்க ஐயா” என்று மற்றுமொரு முறை வருகின்றது
அண்டை தேசத்துப் புறாக்களையும் கூடவே கூட்டி வருகின்றது
தானியத்திற்காக உன்னையும் என்னையும் பிரித்து வைக்கின்றது
பசும் வனத்தில் தீமூட்டப் பார்க்கின்றது

தூக்கக் கலக்கத்தை விடுத்துவிட்டுப் பார்
புறா அல்ல அது “முதிர்ந்த உடும்பு”
நம் மங்கலான கண்களைத் துடைத்துவிட்டுப் பார்
அது “மீன் குளத்துக்குக் காவலிருக்கும் கொக்கு”!!

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment