- உருதுக்கவிதை உலகு – 1
- உருதுக்கவிதை உலகு – 2
- உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப்
- உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’
- உருதுக் கவிதை உலகு – 5 மீர் தாகி மீர்
- உருதுக் கவிதை உலகு – 6 ஹஸ்ரத் மோஹானி
- உருதுக் கவிதை உலகு – 7: கைஃபி ஆஸ்மி
- உருதுக் கவிதை உலகு – 8: அல்லாமா இக்பால்
- உருதுக் கவிதை உலகு – 9: குல்ஸார்
- உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி
- உருதுக் கவிதை உலகு 11 – அதா ஜாஃப்ரி
- உருதுக் கவிதை உலகு: 12 – ஷகீல் பதாயுனி
- உருதுக் கவிதை உலகு: 13 – லாலா மாதவ்ராம் ஜவஹர்
- உருதுக் கவிதை உலகு: 14 – ராஹத் இந்தூரி
- உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்
- உருதுக் கவிதை உலகு: 16 – அஹமத் ஃபராஸ்
// பிணக்குதான்
இருப்பினும் இதயத்தை வருந்தவைக்க வா!
வா
மீண்டும் ஒருமுறை என்னைப் பிரிவதற்கு வா! //
// ரஞ்சிஷ்ஹி சஹி தில் ஹி துக்கானேகேலியே ஆ
ஆ ஃபிர்சே முஜே சோடுகே ஜானேகேலியே ஆ //
இது கஜல் உலகில் நிலைத்த இடத்தைப் பெற்று, பாடகர்களால் தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது. நேற்றைய மெஹ்தி ஹசன் முதல் இன்றைய அலி சேத்தி (கோக் ஸ்டுடியோ) வரை பலரும் ‘ரஞ்சிஷ்ஹி சஹி’யைப் பாடியிருக்கிறார்கள். யூட்யூப் சேனல்களில் பாடப்பட்ட இடங்களிலெல்லாம் இது முப்பத்தைந்து லட்சம், முப்பது லட்சம் எனப் பார்வைகளைத் தொட்டிருக்கிறது.
இந்த கஜலை எழுதிய கவிஞர் அஹமத் ஃபராஸ். சையத் அஹமத் ஷாவின் புனைபெயர் ஃபராஸ்.
உருதுக் கவிதை உலகில் கவிஞருக்குப் புனைபெயரும் இயற்பெயரும் இணைந்து வழங்கப்படும். மீர்ஸா அசதுல்லாஹ் பேக் கான், ‘மீர்ஸா காலிப்’ எனப் புனைபெயருடனும், ஷேக் மொஹம்மத் இபுராகீம் ஸவுக், இபுராகீம் ஸவுக் என அழைக்கப்பட்டதைப் போலவே, சையத் அஹமத் ஷாவின் புனைபெயர் அஹமத் ஃபராஸ் என்றழைக்கப்படும் ‘ஃபராஸ்’.
1931இல் பிறந்த ஃபராஸ், கவிதைக்கெனத் தலைப்புகளைத் தேடுவதாக அல்லாமல் மாணவப் பருவத்திலிருந்தே தன் மனதின் வெளிப்பாடுகளைக் கவிதைகளாக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். தன்னுடைய தந்தை அண்ணனுக்கு உடையும் தனக்கு சால்வையும் பரிசாகத் தந்தபோது, ஃபராஸால் அதை ஏற்க முடியாமல் கவிதை எழுதிய நிகழ்வு சுட்டிக்காட்டப்படுகிறது.
மாணவராக இருக்கையில் கவிதைகளின்பால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னை முற்போக்குச் சிந்தனையாளர்களுடன் இணைத்துக்கொண்டார். தொடக்கத்தில் காதலைப் பாடிய அவர் கவிதைகள் 1970க்குப் பின் முற்போக்குச் சிந்தனை கொண்டவைகளாகவும் தொடர்ந்தன. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட குழுக்களுள் ஒன்றான காக்சார் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர். பாகிஸ்தானிய உருதுக் கவிஞர்களில் அதிகமான வாசகர்களைப் பெற்ற கவிஞர் வரிசையில் அல்லாமா இக்பால், ஃபைஸ் அஹமத் ஃபைஸ், அஹமத் ஃபராஸ் என்பது பலராலும் ஏற்கப்படும் வரிசை.
பாகிஸ்தான் இலக்கியக் கழகம் (அகாடமி அதபியாத் பாகிஸ்தான்) 1976இல் தொடங்கப்பட்டபோது அதன் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அகாடமியின் இயக்குநராக இருந்தபோதும் அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை.
பலுசிஸ்தான் புரட்சியைப் பாகிஸ்தானிய அரசு கொடுங்கோன்மையால் ஒடுக்கியது வரலாறு. 1977இல் புரட்சியை அரசு முற்றிலும் ஒடுக்குவதற்குச் சில நாள்கள் முன்பு வரையில், சுல்ஃபிகர் அலி பூட்டோ பதவியில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தானின் தலைநகரம் இஸ்லாமாபாதில் ஒரு கவியரங்கம் நடந்தது.
// தங்கள் தாடைகளில்
தாங்களே குருதிக்கறை ஏற்றவர்கள்
கொடூரத்தின் உச்சம் காண்கின்றனர்
வங்காளத்தை முடித்துவிட்டு
இப்போது
போலனில் தலைகொய்ய வந்துள்ளனர் //
அஹமத் ஃபராஸ் அந்தக் கவியரங்கத்தில் அரசு பலுசிஸ்தான் புரட்சியை ஒடுக்கியதை எதிர்த்துக் கவிதை வாசித்தார். பங்களாதேஷில் புரட்சியை ஒடுக்கியதுபோல், இப்போது பலுசிஸ்தானிலும் (போலன் கணவாய்) அரசு குருதிக்கறையை ஏற்கிறது எனப் பொருள்படும் கவிதை பல புருவங்களை உயர்த்துகிறது.
ஃபராஸ் தொடர்கிறார்.
// இப்போது கவிஞனும் கடனைத் தீர்க்கவேண்டும்
பேனாக்களை மையால் அல்ல;
குருதியால் நிறைக்கவேண்டும்
உங்கள் முகத்திரை கிழிந்துவிட்டது!
நீங்கள் போற்றத்தக்க படைவீரர்கள் அல்லர்;
வெறும் கொலையாளிகள் //
இந்தக் கவிதையை வாசித்த அன்று இரவு இரண்டு மணியளவில் சீருடையில்லாத காவலர்களால் ஃபராஸ் கைது செய்யப்படுகிறார். கைதுக்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. ஃபராஸின் கைதுக்கு விளக்கம் கேட்டு மக்கள் வீதிக்கு வந்தனர். அதன் பின்னர், அவர் விடுவிக்கப்படுகிறார்.
இந்நிகழ்வுக்குப் பின் ஃபராஸின் கேள்விகள் நிற்கவில்லை; தொடர்ந்தது. பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு பூட்டோ அரசுக்குப் பின் ஜியாவுல் ஹக்கின் இராணுவ ஆட்சி வந்த பின்னும் அவர் அரசைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.
கராச்சியில் ஒரு கவியரங்கத்தில் அவர் கவிதை வாசிக்கும்போது, பொது மேடையில் கவிதை வாசிப்பதை நிறுத்தச் சொல்லி, அவரை அழைத்துச் செல்கிறார்கள். அவர் கராச்சி இருக்கின்ற சிந்து மாநில எல்லைக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
// தனது நகரத்தைச் சுற்றிச் சுவரெழுப்பி மகிழும்
அடக்குமுறையாளருக்கு என் பேனா சேவகம் செய்யாது
அது பிச்சைக்காரனின் திருவோடு அல்ல
அடக்கி ஆள்பவரின் புகழ் பாட //
என அவர் எழுதிய கவிதையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதற்குப் பின்னர் அவராகவே பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார். ஆறு ஆண்டுகள் கனடாவிலும், ஐரோப்பாவிலும், அமீரகத்திலும் வாழ்ந்த பின் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.
// உன்னைப் பிரிந்த பின்னர் உணர்ந்தேன்
நீ, நீ மட்டுமல்ல; ஓர் உலகம் //
// ஹுவாஹை துஜ்சே பிச்சடுனெகே பாத் யே மாலூம்
கி து நஹி தா தேரே சாத் துனியா தி //
இரண்டு அடிகளில் காதலிதான் தன் உலகம் என அவர் பாடிய இந்தக் கவிதை இன்றைய தலைமுறையினராலும் காதலின் பிரிவிற்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
கவிஞர்கள் பெரும்பாலும் தனக்கென முன்னோடிகளைக் கொண்டிருப்பர். ஃபராஸின் முன்னோடி ஃபைஸ் அஹமத் ஃபராஸ் (ஃபைஸ் அஹமத் ஃபைஸ்).
கவிதையில் மட்டுமல்லாமல் முற்போக்குச் சிந்தனையிலும் ஃபைஸ், ஃபராஸின் முன்னோடி என நினைக்கத் தோன்றுகிறது. ஃபைஸ் அஹமத் ஃபைஸ் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். ரஷ்யாவின் ஆதரவுடனும் இடதுசாரிகளின் ஆதரவுடனும் அவர் அன்றைய பாகிஸ்தான் அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் (ராவல்பிண்டி சதிவழக்கு 1951). ஃபைஸும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மேலும், இவரும் பாகிஸ்தானை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர். ரஷ்யாவிலும் லண்டனிலும் வாழ்ந்து அதன் பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியவர்.
ஃபைஸ் அஹமத் ஃபைஸுடன் ஜோஷ் மலிஹாபாதி, அலி சர்தார் ஜாஃப்ரி போன்ற கவிஞர்களையும் தனது முன்னோடிகளாகக் கொண்டிருந்தார்.
அதிகமாக வாசிக்கப்பட்ட உருதுக் கவிஞர்களுள் ஒருவர் என்னும் பெருமையைப் பெற்ற ஃபராஸ், ‘ஹிந்த்கோ’ என்னும் மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் என்பது சுவாரசியமான தகவல். ஃபராஸின் தந்தை பாரசீக மொழிக் கவிஞர். பாரசீகம், ஹிந்த்கோ, உருது என வெவ்வேறு மொழிகளின் அறிமுகத்தை இளம் வயதிலேயே பெற்ற ஃபராஸ், உருதுவிலும் பாரசீக மொழியிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
சில கவிதைகளில் கீற்றாகக் குறும்பும் அவரிடமிருந்து வெளிப்படும்.
// இன்னும் எத்தனை காதல்கள் வேண்டும் ஃபராஸ்
அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு உன் பெயரிடுகிறார்கள் //
// அவுர் ஃபராஸ் சாஹியேன் கித்னே மொஹப்பத்தேன் துஜே
மாவோனே தேரே நாம்பர் பச்சோன்கா நாம் ரக்தியா //
காதலைப் பாடும் கஜலின் கடைசி இரண்டடிகளாக இது இருப்பினும், இந்த இரண்டு அடிகள் மட்டும் பல இடங்களில் தனியாகவும் மேற்கோள் காட்டப்படுகிறது. அப்படித் தனியாக ஒலிக்கையில் இதனைக் காதல் என்று பொதுமைப்படுத்தாமல் மயக்கம், விருப்பம், அன்பு, தேடல் என வெவ்வேறு சொற்களால் குறிப்பிடுதல் சிறப்பு.
இல்லாத நட்பை இருப்பதாக நினைத்து ஏமாற்றப்பட்ட பாடல்களில்,
// பால் போலக் கள்ளும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன பாலா கள்ளா
நீ சொல்லு நந்தலாலா // – கண்ணதாசன்
இப்பாடலுக்கென ஓர் இடம் உள்ளது.
போலவே, ஃபராஸ் எழுதிய கஜல்களில் நட்பின் பிரிவைப் பாடும் கஜல் ஒன்றுக்கு அதற்கென ஓர் இடம் உள்ளது.
// அவையொழுங்கை நட்பென நினைத்தாயா ஃபராஸ்
கைகுலுக்குபவனெல்லாம் நண்பன் அல்லன் //
// தும் தக்கல்லூஃப் கோ பி இக்லாஸ் சம்ஜ்தேஹோ ஃபராஸ்
தோஸ்த் ஹோத்தா நஹீன் ஹர் ஹாத் மிலானே வாலா //
இரண்டு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்று, ரேடியோ பாகிஸ்தானில் கவிதை வாசிக்கத் தொடங்கி, பின்னர் ரேடியோ பாகிஸ்தான் நிகழ்ச்சி தயாரிப்பாளராகி, கவிதை உலகில் உயர்ந்து, முற்போக்குச் சிந்தனையாளராகவும், அடக்குமுறைக்கு எதிராகத் தன் குரலைப் பதிவு செய்பவராகவும் விளங்கி நாட்டை விட்டுப் பிரிந்து பின்னர் நாடு திரும்பிய அவருக்கு அரசு பதவிகளையும் விருதுகளையும் தந்து கெளரவித்தது. பாகிஸ்தான் தேசிய புத்தக அறக்கட்டளைக்குத் தலைமையேற்றார். அவருக்கு சித்தாரே இம்தியாஸ், ஹிலாலே இம்தியாஸ் ஆகிய உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டன.
அடக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுப்பதைத் தான் நிறுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, 2004ஆம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட ‘ஹிலாலே இம்தியாஸ்’ விருதினை, 2006இல் அப்போதைய முஷர்ரஃப் ஆட்சியின் போக்கைக் கண்டித்துத் திருப்பித் தந்தார். 2008இல் அவருடைய மறைவுக்குப் பின் பாகிஸ்தான் அரசு அவருக்கு ‘ஹிலாலே பாகிஸ்தான்’ விருதினை வழங்கியது.
2006இல் புதுடெல்லியில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் நாற்பத்தெட்டு பாகிஸ்தானிய எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பங்கேற்றனர். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர், கவிஞர் அஹமத் ஃபராஸ். இரண்டு நாடுகளுக்கு இடையேயான இலக்கிய உறவில் பதிவாகியிருக்கும் அந்த நிகழ்வு ஃபராஸின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கது.
// கலங்கிய இதயத்தில் இதுவரை நம்பிக்கை இருந்தது
அந்தக் கடைசி தீபத்தையும் அணைத்துவிட நீ வா //
// அப்தக் தில்லே குஷ்ஃபஹம் கோ துஜ்சே ஹை உம்மீதேன்
ஏ ஆக்ரி ஷமே பி புஜானே கேலியே ஆ //
// மீண்டும் ஒருமுறை என்னைப் பிரிவதற்கு வா! // அஹமத் ஃபராஸின் இந்த கஜல் இனியும் வரப்போகும் கஜல் பாடகர்களால் தொடர்ந்து பாடப்படும்.
(தொடரும்)