Home கவிதைபற்றிக்கொள்ளும் மௌனம்

பற்றிக்கொள்ளும் மௌனம்

0 comments

வலியின் அலறல்களை அனாதையாக்கிவிட்டு
காற்றின் மென்மைமீது
கைகளைத் துடைத்துக் கொள்கிறது
கலாச்சாரப் பெருவெளியின் கரிசனம்
எனக்கினி சம்பந்தமில்லை என்பதுபோல்

பசியால் துடிக்கும் வயிறுகளுக்குப்
பிரார்த்தனையைப் பரிமாறுவது போல்
ரத்தக் கறைகளுடன் முத்தமிடுபவனிடம்
வேண்டுதல்களை வைக்கிறோம்
தூது செல்லும் காற்றிடம்
வேதனைகளை ஒப்படைத்துவிட்டு
வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாய்
கடவுளை நியமிக்கிறோம்
வலியை உருவாக்கியவனின் லாபக் கணக்குகளில்
நம் கண்ணீர்த் துளிகளை முதலீடாக்கிவிட்டு
துயரக்கூச்சல்களைக் கடனாய்ப்பெறுகிறோம்

இனி
காற்றுக்கும் கடவுளுக்கும் வேலையில்லை
புலம்பல்களின் விலாசங்கள் மாறுகின்றன
பிரார்த்தனைகளின் வண்ணங்கள் வெளுக்கின்றன
அறுவடை செய்துகொள்ளும் களங்களில்
வேதனையை விதைத்தவர்களிடமே
அவற்றை ஒப்படைத்து மீளும்போது
தீப்பற்றிக் கொள்கிறது
மௌனத்தின் எரிமலை.

Author

You may also like

Leave a Comment