கார்த்திண்ணா

நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என எனக்கு கேள்விகள் வராத, அறிஞர் அண்ணாவை தவிர வேறு அறிஞரை அறியாத காலக்கட்டம் அது. கேட்ட இரண்டாவது நொடி என் அப்பாவிடமிருந்து “நீங்க க்ரிஸ்டீனா சார்?” என்ற கேள்வி வந்தது. மூன்றாவது நொடியில் “உங்களுக்கு எய்ட்ஸா” எனக் கேட்டது போல “அய்யிய்யோ, இல்ல சார், அது கம்முனிஸ்ட் நேமுங்க. நாங்க சைவப்பிள்ளமார். கவுச்சில்லாம் இல்லைங்க எங்கூட்ல” எனப் பதறிய செல்லப்பா எங்கள் புது ஹவுஸ் ஒனர்.

செல்லப்பாக்கு தோராயமாக 55 வயசு சொல்லலாம். ஐம்பதுகளின் பென்சில் மீசை, அறுபதுகளின் நீள/கட்டை கிருதா, எழுபதுகளின் பெல்பாட்டம். எண்பதுகளின் பாலுமகேந்திரா கேப் (வழுக்கையை மறைக்க) என நான்கு தசாப்தங்களை தனது 5 அடி 2 அங்குலத்தில் குறுகத் தரித்திருந்தார். மிடில் ஸ்கூலில் சயின்ஸ் வாத்தியார் என அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிராவிடினும் நாமே சொல்லிவிடலாம் என்பது போன்ற தோற்றம்.

நிற்க, இது செல்லப்பாவின் கதை அல்ல. கார்த்தியின் கதை. எனக்கு கார்த்திண்ணா. இந்த சம்பாஷணை நேரத்தில் கார்த்திண்ணா ஒரு ஹைஹிப் பேண்ட்டும், விஜய் “ஊர்மிளா” பாட்டில் அணிந்திருப்பது போன்ற டிராகன் போட்ட டிசைன் சட்டையும், என் அப்பா “அதுல்லாம் உழைக்காது” என மறுத்த பாலியஸ்டர் இழை வெள்ளை பெல்ட்டும், நீலமும் சிவப்புமாய் ஒரு ஃபீனிக்ஸ் ஷூவுடன் என் ஆதர்ச உடையில் நின்று கொண்டிருந்தது. வைகாசி பொறந்தாச்சு பிரஷாந்த் கணக்காய் நடுவகிடு எடுத்து ஸ்டைலாக இருந்தது. கண்ணில் ததும்பும் ஒரு குறும்பும் கூடவே.

பார்த்த நொடியில் கார்த்திண்ணாவை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மீசை வந்தும் வராமலும், பருக்கள் சிறிதும் பெரிதுமாய், புதுக்கோட்டை வாழைமரத்து ஜவுளிக்கடையில் 1.60 அளவு கட்பீசில் எடுத்த குதிகால் தெரியும் கால் சராயுடன் என் நிலையைக்கண்டு கூச்சமும், அப்பா மேல் ஏனோ இனம்புரியா கோபமும் வந்தது.

“கார்த்தி பொன்னமராவதில ITI முடிச்சிருக்கு. இப்ப டீவியெஸ்ல அப்ரண்டிசா மெட்ராஸ்ல இருக்கு”. வடிவேலு அப்பரசண்டி என அப்பதத்தை கேலி வழக்காக கொண்டு வராத காலம். கட்டினா இந்த புள்ளைய கட்டுவேன் என்று சபதம் எடுப்பது போல், அந்நொடியில் பெரியவனாகி சென்னையில் அப்ரண்டிஸ் ஆவேன் என சபதம் எடுத்தேன்.

“தம்பி பேரு என்ன” என்னை நினைவுக்கு கொண்டு வந்தார் செல்லப்பா. “ஸ்ரீராம் சார். பிரகதாம்பால இங்க்லீஷ் மீடியத்துல டென்த்து போட்டுருக்கேன்” அப்பா. “சிர்ராமா..நல்ல பேரு..நல்லா படிக்கோணும், கார்த்திட்ட கேட்டு நடந்துக்க”ன்னார் செல்லப்பா. இதை எதுக்கு சொன்னார் என இன்று வரை தெரியவில்லை. ஆனால் எதென்றாலும் கார்த்தியை கேட்டு நடக்கவேண்டும் என இரண்டாம் சபதம் எடுத்துக்கொண்டேன்.

“ஹாய் சிர்ராம்” என்று வாயை திறந்து முதன்முதலாய் இந்த சம்பாஷணையில் நுழைந்தது கார்த்திண்ணா. நம்பினால் நம்புங்கள். அந்த நாள் வரை என்னிடம் யாரும் “ஹாய்” சொன்னதில்லை. ஹல்லோ ஒண்ணு ரெண்டு உண்டு, “வணக்கம் பாஸு” “வாங்க ஆளு” உண்டு. ஆனால் ஹாய் இல்லை. பம்மிப்பதறி “ஹ ஹாய்ண்ணா என் வரலாற்றில் முதல் ஹாயை பதிவு செய்தேன். செல்லப்பாவும், எங்கப்பாவும் பிறகு அட்வான்சை பற்றி கதைக்க துவங்க கார்த்திண்ணா உள்ளே போய்விட்டது.

இந்த இடத்தில் வீட்டை பற்றி சொல்லவேண்டும். ஒரு பழைய காலத்து ரேழி, கொல்லை வைத்த வீட்டை, முன்பக்கத்தை மட்டும் கிளிப்பச்சை கலரில் மச்சுவீடு போல் எழுப்பி, உச்சியில் விகாரமான ஃபாண்ட்டில் “வீனஸ் இல்லம் என்று எழுதி (செல்லப்பா ஒரு ஜோசியப்பிரியர் என்பது பிறகு தெரிந்தது), மொசைக் தரை, நான்கு ட்யூப்லைட்,ஃபேன் போட்டு எங்களிடம் ஆயிரம் ரூவா வாடகைக்கு விட்டிருந்தார். பின்பக்க ஓட்டு வீட்டு போர்ஷனில் செல்லப்பாவும், அவரின் டீச்சர் மனைவியும், கார்த்திண்ணாவும், ‘ஈஸு’ என்கிற ஈஸ்வரியும் குடியிருந்தனர்.

அப்பாவுக்கு அரை ஃபர்லாங் நெய்கொட்டான் மரம் பஸ்ஸாப்பில் இடதுபுறம் திரும்பி கீழராஜவீதியில் நடந்தால் காங்கிரஸ் ஆபிஸ் அதன் எதிரே வேலை பார்க்கும் வங்கி என்பதை தவிர பெரிய சவுகரியம் இல்லாத ஒரு வீடு.

இருந்தும் எனக்கு வீடு பிடித்துவிட்டது. காரணம், எனக்கே எனக்கேயென்று மாடியில் எட்டுக்கு பத்தில் ஒரு ரூம். அப்பா “புள்ளை படிக்கனும் சார்.. 10த் எக்சாம்” என பேசி மாடியில் இருந்த ரெண்டு அறைகளில் ஒன்றை எனக்கு துண்டு போட்டு பிடித்திருந்தார். ஒரு இரும்பு கதவு போட்டுத்தடுத்த பக்கத்து ரூம் ஒனருக்கு.

வீட்டுக்கு குடிவந்த முதல் 3 மாசம் கார்த்திண்ணா ஊரில் இல்லை. திடீரென்று ஒருநாள் தொட்டியில் இறங்கி நல்லதண்ணி பிடித்துக்கொண்டிருந்த அதிகாலையில் ரெக்சின் பேக்,சூட்கேசோடு வந்திறங்கி, அரை இருட்டிலும் 2 செகண்டு என்னை பார்த்து “நல்லாருக்கியா ஜெயராமு” எனப் புன்னகைத்தது. “நான் ஸ்ரீர்ரா..” என சொல்லி முடிவதற்குள் உள்ளே போய்விட்டது. மதியம் ஸ்கூல் விட்டு வந்து சாப்பாடு பரிமாறுகையில் அம்மா “கார்த்திக்கு கெரகம் சரியில்லையாம். தூரத்துல கஷ்டப்படவேணாம்ன்னு டீச்சரு இங்க வரசொல்லிட்டாங்களாம், இனிமே இங்கயே இருக்குமாம்” என சொன்னதை கேட்டு ஏனோ ஒரு சின்ன சந்தோஷம்.

கார்த்திண்ணாவுக்கு நண்பர்கள் அதிகம். பால்கார ராஜகோபாலு முதல் எதிர்த்த வீட்டு கண்டக்டர் மாமா வரை எல்லோரும் சினேகிதம்.யாருடனோ, எதுக்கோ கையத்தட்டி வாசலில் சத்தமாய் சிரிக்கும். கக்குவான் இருமல் டாக்டர் மகள் விஜிக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் போக மாலை 6 மணிக்கு வீட்டை கடக்கையில் மட்டும் அமைதியாகி விடும். தன் சில்வர் ப்ளசை சைடு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி அதில் சாய்ந்து நின்று தினத்தந்தியை புரட்டும். கார்த்திண்ணா விஜிக்காவை நோக்க, விஜிக்கா கார்த்திண்ணாவை நோக்க, நான் சயின்ஸ் புத்தகத்தை நோக்காமல் இவர்களிருவரை நோக்குவேன். மத்தநேரம் முச்சூடும் கார்த்திண்ணா மாடி ரூமிலேயே கிடக்கும்.

எப்பவும் டேப்ரிக்கார்டரில் பாட்டு. அதென்னவோ “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்”,”வெள்ளி கொலுசுமணி” ரெண்டும் ரொம்ப இஷ்டம். பாடகர் அருண்மொழி ஹிட்ஸ் என வாங்கி தொடர்ச்சியாய் கேட்கும். எத்தேச்சையாக இருவரும் ரூமை விட்டு ஒரே நேரத்தில் வெளியே வரும்போது சினேகமாய் சிரித்து, கொஞ்சம் என் படிப்பைப் பற்றி கேட்கும்.

கார்த்திண்ணா வேலைக்கெல்லாம் போனதாய் தெரியவில்லை. செல்லப்பா வாத்தியார் எங்கப்பாவிடம் ‘பேன்க்குல பியூன் போஸ்ட்டிங்காச்சும் கிடைக்குமா’ என கேட்டது ஞாபகம் இருக்கிறது. உழைப்பாளி முதல்நாள் ரசிகர் மன்ற டிக்கட் செல்லையா டீஸ்டாலில் கிடைக்கும் என்றறிந்து அங்கு போக, வெளியே கார்த்திண்ணா சிகரட் பிடித்துக்கொண்டிருந்தது. முதல் தடவை பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும், பிடிப்பதிலும் ஒரு ஸ்டைல் இருந்தது. “செல்லா, நம்மூட்டு பையன், என் அக்கவுண்ட்ல எழுதிக்க” என எங்கூட வந்த அஞ்சு பேருக்கும் சேர்த்து டீ சொன்னது. வீட்டுக்கு எதிரில் முள்ளுக்காடாய் இருந்த அய்யங்குளத்தை தெருப்பசங்களை விட்டு வெட்டச்செய்து கிரிக்கெட்டு விளையாட வைத்தது. “டெந்துல இது தேவையாண்ணேன்” என்ற அப்பாவின் உறுமலையும் மீறி அய்யங்குளத்துக்கு அவ்வபோது ஓடுவேன்.

மிகச்சுமாராய் விளையாடும் நான், ஒரு நாள் கார்த்திண்ணா பவுலிங் என்றதும் எதையோ நிரூபிக்க வீறு கொண்டு அய்யங்குளம் கரையில் வெட்டப்படாத முள்ளுச்செடி அவுட் ஆஃப் தி ஸ்டேடியமில் சிக்ஸ் அடித்து, அண்ணா “பரவால்லியே, நல்லா விள்ளாடறியே” என சொன்னதும் அவ்வளவு பெருமிதம்.

“இனிமேட்டு வியாளக்கிளமை பிருந்தாவனம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு போவோமுடா. சாமி கும்பிடுறோம், அந்த வாரத்துக்கு படிக்க டைம்டேபிள் போடுறோம்” என திடீரென்று என் உயிர் நண்பன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தான். ஒரு சிறிய ஆஞ்சநேயர் சன்னிதியும், பின்னாடி பிருந்தாவனம் என்ற பெயரில் நந்தியாவட்டை, செம்பருத்தி செடியுமாய் ஒரு சிறு தோட்டமும் நிறைந்த கோயில். ஒரு வியாழனன்று பிரகாரத்தை சுற்றுகையில் கார்த்திண்ணாவை விஜிக்காவோடு பார்த்தேன். நல்லவேளை இருட்டில் என்னை பார்க்கவில்லை, அல்லது நான் அப்படி நினைத்தேன்.

நார்த்தாமலை பூச்சொரிதலை முன்னிட்டு சூப்பர்பாய்ஸ் நடனக்குழுவுக்காக காத்திருக்கும் ஒரு பின்னிரவில், கார்த்திண்ணாக்கும் விஜிக்காக்கும் எப்படி லவ்வு என கார்த்திண்ணாவின் பங்காளிப்பய ஜோதி விவரித்ததை கிளுகிளுப்பாக கேட்டோம்.

திடீரென்று ஒரு நாள் விஜிக்காக்கு அறந்தாங்கியில் மாமன் உறவில் அவசரம் அவசரமாய் கட்டிக்கொடுக்கப்பட்டு சென்றுவிட்டதாய் அறிந்தேன். அன்று கக்குவான் டாக்டர் வீட்டிலிருந்து வந்தாலும் பரவாயில்லை, ஏன் செல்லப்பா வீட்டில் இருந்து எங்களுக்கு பாயாசம் வந்தது என அப்போது புரியவில்லை.

சயின்ஸ் ட்யூஷனில் கூட படிக்கும் ராணிஸ்கூல் கோமதி எங்களுக்கு அடுத்த தெரு எனத்தெரிந்த பிறகு வேண்டுமென்றே குறுக்கும் நெடுக்கும் அத்தெருவில் சைக்கிளில் போக ஆரம்பித்தோம். அப்படி ஒரு நாள் அந்த தெருவில் இருக்கும் டாஸ்மாக் வராத காலக்கட்டத்தின் மூவேந்தர் ஒயின்ஸின் உள்ளே கார்த்திண்ணாவை பார்த்தேன். பக்கென்று இருந்தது. நான் கவனிக்கும் முன் அது என்னை கவனிக்கக்கூடாதேயென்று என சைக்கிளை ஏறி மிதித்தேன். தர்மரின் தேர்ச்சக்கரம் டக்கென்று தரையில் விழுந்ததுபோல், கார்த்திண்ணாவின் மேல் இருந்த ஆதர்ச பிம்பம் உடைய ஆரம்பித்தது அன்றே. அதன்பிறகு, இரவு மட்டும் கார்த்திண்ணா ரூமில் இருந்து வரும் தம் மற்றும் பழ வாசனை காரணத்தை யூகிக்க முடிந்தது.

அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா எட்டரை மணி செய்திகள் பார்த்துவிட்டு சாப்பிடலாமாவென உட்கார்ந்த நேரம். எங்கள் பின்வாசல் கதவில் நங்கென்று ஒரு பாத்திரம் இடித்து விழும் சத்தம். அப்பாவுக்கு முன்பே விஷயம் தெரியுமோ என்னவோ, கதவை திறக்கவில்லை. ஆனால் ஒரு ஒட்டுக்கேக்கும் தோரணையில் கதவின் அருகில் சென்று நின்றார். அவர் பின்னே நாங்கள். சீரிய இடைவெளியில் நின்றோம். என் கடைசித்தங்கை பயத்தில் உள்ளே ஓடிவிட்டாள். இன்னும் சில பாத்திரங்கள் கதவருகில் வந்து விழுந்தன. செல்லப்பா வாத்தியார் “கார்த்தி, டேய்..கேசியர் வூட்ல இருக்காருடா.. வேண்டாம்டா” என கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென்று உரத்தகுரலில் கார்த்திண்ணாவின் ஓலம்.

“மெட்ராஸ்லயே இருக்கேன்னு சொன்னேன் கேட்டியா..இந்த வரப்பட்டிக்காட்டுல ஒரு வேலையும் கிடைக்கல. நான் பாட்டுக்கு செவனேன்னு அங்கன கிடந்தேன்” என்று ஒரு விசும்பலான குரல். கார்த்திண்ணாவின் புலம்பல் சற்றே தகாதமுறையில் எல்லை மீற, அப்பா “மாடிக்கு போய் படிங்க சொல்றேன்” என எங்களை விரட்டிவிட்டார். அடுத்த நாள் காலை செல்லப்பா வாத்தியார், அப்பாவிடம் சன்னமான குரலில் “சாரி சார், லவ்ஃபெய்லியர்ல இப்படி பண்றான்” என மன்னிப்பு கேட்க, அப்பா “அதெல்லாம் சரி சார், ஃபேமிலி இருக்குற இடமா இல்லியா”என மையமாய் தன் எதிர்ப்பை நிறுவியதெல்லாம் நடந்தது.

பகலில் கார்த்திண்ணா அவ்வளவு பாங்காய் போகும், வரும். என் அப்பா, அம்மாவை கூச்சத்தில் ஏறெடுத்தும் பார்க்காது. ஆனால் ராத்திரியில் வேறு முகம் காட்டும். இரவு ஒன்னுக்கிருக்கலாம் என ரூமை விட்டு வெளியே வந்த ஒரு நாள் என்னை பிடித்துக்கொண்டது. அன்றைய கோலம் பார்க்க அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.”சிர்ராமு, உனக்கு புடிச்சதை படி, புடிச்ச வேலைக்கு போ, அப்பா,அம்மா யார் பேச்சையும் கேட்டுறாதே” என்றது. பயத்தில் ஒன்னுக்கிருக்காமல் ரூமுக்குள் திரும்பி போய்விட்டேன்.”கிளாஸ் பொண்ணு இருக்கா, லவ் பண்ணிராத” என கேட்டது மட்டும் பிடித்திருந்தது.

ஒரு வேலை வெட்டி செய்தால் தெளிந்துவிடும் என ரெண்டு மாட்டை வாங்கி பின்னாடி கட்டிப்போட்டு, பால்கார ராஜகோபாலுடன் பார்ட்னராக இரு என்றார்கள்.அது கார்த்திண்ணாக்கும் வலித்தது, எனக்கும் வலித்தது. பலூன் பேகி பேண்ட் முடியை ஃபன்க் விட்டு, ஸ்போர்ட் ஷூ போட்டு சுற்றும் என் கார்த்திண்ணா இப்போது கொல்லைப்புற மாட்டுச்சந்து வழியாக மடித்துக்கட்டிய லுங்கியோடு மாட்டை தள்ளிக்கொண்டு வருவது காணச்சகிக்கவில்லை. பின்னிரவில் “இப்படி மாட்ட மேய்க்க விட்டுட்டீங்களேடா” என மதுவருந்தி விட்டு அழும்.

சமூக அறிவியல் கடைசி பப்ளிக் பரிட்சைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு புதன்கிழமை கார்த்திண்ணாவை திருச்சி காஜாமலையின் ஒரு போதை மறுவாழ்வு இல்லத்திற்கு கூட்டிக்கொண்டு போனார்கள். “அங்கன டீயடிக்சன் ட்ரீட்மெண்ட்டு 3 மாசம்” என ஒனரம்மா சொன்னதாக என் அம்மா தகவல்.

அப்பாவுக்கு அடுத்தபடியாக திருச்சிக்கு மாற்றல், நான் வேறு ஸ்கூல், காலேஜ் என நகர்ந்து அதன் பிறகு கார்த்திண்ணாவை காண வாய்க்கவேயில்லை. போன வருடம் லீவுக்கு ஊருக்கும் போகும் வரை.

திருமயம் அருகில் குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் புதுக்கோட்டை ராதா கபேயில் டிபனுக்கு நின்றோம். நாங்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த தெரு அந்த உணவகம். “சாப்பிட்டுட்டே இரும்மா, தோ வர்றேன்” என நாங்கள் குடியிருந்தா வீட்டுப்பக்கம் ஓட்டம் போன்ற நடையில் நடந்தேன். வீட்டு வாசல் தெரியும்போதே வாசலில் சற்று கனத்த உருவமாய் ஒருவர், அது கார்த்திண்ணா என பார்த்தவுடன் யூகிக்க முடிந்தது. என்னை பார்த்தவுடன் லுங்கியை இறக்கிவிட்டு “யாரு சிர்ராமு தானே” என்று கண்கள் சிரிக்க சொன்னது. உள்ளே வா வா என்றது. ‘இல்லண்ணா இருக்கட்டும், வீட்டை பார்க்க ஆசையா இருந்துச்சு’ என்றேன். முடி பரவலாய் கொட்டியிருந்தாலும், உடல் கனத்திருந்தாலும், கண்களில் அந்த குறும்பு அப்படியே. கூட்டுறவு பேன்க்கில் பியூனாக இருப்பதாகவும், தனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் என்றும், செல்லப்பா வாத்தியார் சொந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார். தங்கச்சி ஈசுக்கு கல்யாணம் ஆனது பலவும் சொன்னது.

“நேரமாச்சுண்ணா, கெளம்புறேன்” என்றேன். சரி என்றது கார்த்திண்ணா. வாசல் தெருவுக்கு வந்தபிறகு கார்த்திண்ணாவின் “ஒரு நிமிசம்” என்ற குரல். என்ன என்பது போல திரும்பிப் பார்த்தேன்.

“இப்ப எல்லாத்தையும் விட்டாச்சு சிர்ராமு” கார்த்திண்ணா முகத்தில் எதையோ நிரூபித்த திருப்தி. “சரிண்ணா” எனப் புன்னகைத்தேன். அதன் பிறகு வார்த்தை வராமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். உண்மையில் மனம் சற்று நிம்மதியாக உணர்ந்தது.

டிபனை முடித்து, சாந்தாரம்மன் கோயிலில் பூசை சாமான் வாங்கிட்டு போவோம் என வண்டியை திருப்பினோம். மூவேந்தர் ஒயின்ஸ் இருந்த இடத்தில் இப்போது கரும்பச்சை நிற போர்டில் டாஸ்மாக். அதனருகே சந்தில் கர்ட்டன் திரை போட்டு Bar என எழுதியிருந்தது.

கர்ட்டன் திறந்த ஒரு நொடியில் உள்ளே கார்த்திண்ணா போல ஒரு உருவம் ஒரு ப்ளாஸ்டிக் கிளாஸில் இருந்த திரவத்தை வேகமாய் அருந்தியது.

சட்டென பார்வையை திருப்பினேன். அது கார்த்திண்ணாவாக இல்லாமலே போகட்டும். சிலசமயம் நமக்கு பிடித்தவர்களை, பிடிக்காத கோலத்தில் பார்க்க மனசுக்கு பிடிப்பதில்லை.

Author

Related posts

வெற்றிடம்..

இல்லாத எல்லாமும்

வாயு புத்திரர்கள்