பாமாலை – இந்தவார ஈற்றடி கவிதைகள்

அம்பிகைக்கு விண்ணப்பம் – அந்தாதி – ருக்மணி வெங்கட்ராமன்
சென்னை

அன்னையே! அருள் தருவாய் நீயே!
அம்பிகையே! கருணையின் வடிவமே தாயே!
வீரத்தின் வடிவமே தைரியத்தை தருவாய்!.

தருவாய் மன அமைதியை நீயே
தெய்வத்தின் அருள் வேண்டும் என்றும்
வணங்குவேன் நாளும் அருள் வேண்டி!

வேண்டி நின்றேன் தாயே உமையே!
செல்வம் தருவாய் உன் அருளுடன்
பொருள் தருவாய் சிறப்புடன் வாழ.

வாழ வழி காட்டும் கல்வியைத்
தரும் சரஸ்வதி தேவியும் நீயே!
அருள் வேண்டும் வாழ்க்கை வாழ

தருவாய் அனைத்தும் அம்பிகையே நீயே..!
நீயே வாழ்க்கையின் முதல் ஒளி
நீ இன்றி எதுவும் இல்லை
செல்வமும் வீரமும் தருவாய் அன்னையே!.

ஹேமா செந்தில் 

உலகே வணங்கும் சிவனின் உமையாளே
நலமும் வளமும் விளங்க-மலர்கள்
கொண்டு உளமார அர்ச்சித்து நாயேன்
தொண்டு புரிவேன் நாளும்.


நாளும் மனதில் உனையே நினைத்து
தாள்பற்றித் தாயே வணங்கிட -மாளாத்
துயரும் மடிந்தே ஒழிய துளிரும்
நயமாய் அடியேன் வாழ்வு.


வாழ்வு மலர அருள்வாய் கலைமகளே
தாழ்ந்து பணிந்திட தாயே- அழியாத
கல்வியும் பண்பும் பணிவும் பெருமையும்
நல்கிடப் போற்றும் (இவ்)உலகு.

எனது கானம் – இசைக்குட்பட்டது

ராகம் : ஆனந்தபைரவி
தாளம் : திஸ்ர ஜதி
-பாலசாண்டில்யன்


துர்கையும் நீயே பார்வதியும் நீயே
துக்கங்கள் போக்கிடும் மீனாட்சி நீயே
துரிதமாய் காத்திடும் காமாட்சி நீயே
துஷ்டரை அழித்திடும் திரிசூலி நீயே (துர்கை)


நற்பவியும் நீயே நாராயணி நீயே
நற்கதி தருகின்ற நாகேஸ்வரி நீயே
நல்லவை செய்கின்ற பரமேஸ்வரி நீயே
நானிலம் ஆளுகின்ற மாகாளி நீயே (துர்கை)
சாரதா நீயே சரஸ்வதியும் நீயே

சகலமும் அருள்கின்ற ராஜேஸ்வரி நீயே
சங்கடம் போக்குகிற லலிதாம் பிகையே
சக்தியெனும் மாயே நீ சர்வேஸ்வரி தாயே (துர்கை)


அன்பின் வடிவமே அகிலாண் டேஸ்வரியே
அடைக்கலம் ஆனவர்க்கு அபிராமி நீயே
ஆதார ஸ்ருதி நீயே நாதமும் நீயே
அகில சராசரமும் உனதாட்சி தாயே (துர்கை)

முப்பெரும் தேவியர். நவராத்திரி பாடல் - விஜி சம்பத்


மலைமகள்:
அங்கயற்கண்ணி மீனாட்சி
மங்கள மதுரையில் உன்னாட்சி…!
அண்டங்கள் ஆளும் விசாலாட்சி
அளித்தாய் காசியில் உன் காட்சி …!

காட்சி தந்தாய் காஞ்சியில் தவக் கோலத்திலே..!
காமாட்சி என்னும் திருநாமத்திலே..!

திருநாமம் கொண்டாய் திருக்கடையூர் அபிராமியாய்..!
அமர்ந்தாய் அமிர்தகடேஸ்வர நாயகியாய்..!
பட்டரை அந்தாதி பாட்டுவிக்க தோன்றினாய் அம்பிகைத்
திருக்கோலமாய்..!”


அலைமகள்:
திருக்கோலமது பாற்கடலில்
மகாலக்ஷ்மியாய்..!
பாடி உனைத் தொழுதிடுவோம் ஆதிலக்ஷ்மியாய்.!
யானையிருபுறமிருக்கும்
கஜலக்ஷ்மியாய்..!
நாரணன் வலமார்புறையும் ஸ்ரீலக்ஷ்மியாய்!

ஸ்ரீலக்ஷ்மி நீயே தனதான்ய லக்ஷ்மி-பிள்ளைச்
செல்வத்தையும் தந்தாயே சந்தான லக்ஷ்மி
செங்கோல் தாங்கிய ராஜவடிவே விஜயலக்ஷ்மி
செரு வெல்லும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி


கலைமகள்:
லக்ஷ்மீகரத்தோடு
சத்யலோகம் ஆளுகின்ற
முத்தமிழ் வித்தகியே..!
நித்தமுன் புகழ் பாட அருள்வாய்
வித்யாவாணியே!
மூடனுக்கும் அறிவுக்கண்
திறந்திடும் உன்னருளாலே..!
தேடி வந்துனைத் தொழுதிடும் ஆயகலைகளுமே!

ஆயகலைகளுக்கும் நாயகி நீயே!
ஏய உணர்விப்பாயவற்றை பூரணியே…!
நாயகன் நாவிலுறையும் மோகனமே..!
தூய மறை நான்கும் துதிக்கும் கலைமகளே!

பவளமணி பிரகாசம் – நவராத்திரி அந்தாதி


தேவி கருமாரி திரிசூல நாயகி
வளமான வாழ்வு தரும் மாரி
கருணை மழை பொழியும் தாய்


தாய் பரிபாலிக்க அமர்ந்திருக்கிறாள் பாற்கடலில்
திருமால் காலடியில் செல்வம் வழங்கியபடி
மங்கலம் மாட்சி நிறைந்திருக்கும் மனை


மனம் நிரம்பும் கலைகளால் அறிவொளியால்
வீணை ஏந்தியவள் கடைக்கண் பார்வையால்
கல்வியால் உயர வைக்கும் தேவி

ஹேமா செந்தில்


வாழ்வில் மங்கலம் பெருகிடவே
வாசமுள்ள மலர்களைச் சூட்டிடவே
வாசம் செய்ய வருவாயே மாரியம்மா..


மாரியம்மா வேண்டுபவர் மடி நிறைப்பாயே
மாசற்ற வாழ்வை மனதார அருள்வாயே
மாதம் மும்மாரி பொழியட்டும் தாயே


தாயே தரணி ஆளும் தாரகையே
தாவென எது கேட்பினும் தந்தருள்வாயே
தாழாத வாழ்வுதனை அருள்வாயே வாழ்வில்.

ஹேமா செந்தில்


நல்வழி காட்டும் நாயகியே
நாளும் துணைவரும் தாயே
நானிலம் சிறக்க வருவாயே.


வருவாயே எங்க குல நாயகியே
தருவாயே வேண்டும் வரந்தனை
குருவாய் எனை ஆட்கொண்டு


ஆட்கொண்டு அருளும் அகிலாண்டேசுவரியே
ஆற்றல் கொடு தாயே
முன்னேறக் காட்டிடு நல்வழி.


செல்வம்
ஓடியோடிச் சேர்க்கும்
நிதியும் நிலமும் மட்டுமன்று
குரல்கள் கூடும் உணவு மேசை
வீட்டை இல்லமாக்கும்
அன்பான குடும்பம்

குடும்பம்
புயல் வருகையில்
காக்கும் கூரை.
விழுகையில்
தாங்கும் கைகள்.
வாசலைத் தாண்டி
வட்டத்தை விரித்து
வழிப்பயணத்தில்
அண்டை அயலாரையும்,
கவலையை சிரிப்பைப் பகிர்ந்திட
நல்ல நண்பர்களையும்
பெற்றுத் தரும்.
நட்பின் அருகாமையையும்
உறவின் அன்பையும்
அனுபவிக்கத் தேவையான
மற்றோர் செல்வம் ஆரோக்கியம்

ஆரோக்கியம் இருக்கையில்
எளிய நாட்களும்
நிறைவானதாகும்.
உடல்நலம் விலகுகையில்
இருக்கும் பலவும்
ஒளியை இழக்கும்.
நலமான உடலே
நடக்கும், அமரும்
புன்னகைக்கும்.
தெளிந்த மனதை
உடன் அழைத்துச் செல்லும்.
மனம் அலைபாயுமாயின்
வலிமையான உடலும் தடுமாறும்.
அது இளைப்பாற
தேடும் இடம் அமைதி

அமைதி
அனைத்து மகிழ்ச்சியும்
வேரூன்றும் மண்.
குடும்பமும் நலமும்
உறவும் நட்பும் கூடினாலே
ஈட்டிய பணம் அர்த்தம் பெறும்.
அல்லேல்
பொன் வெறும் சுமையாகும்.
எவ்வளவு முழுமையாக
வாழ முடிகிறது என்பதே
உண்மையான செல்வம்


வீரம், நடுக்கம்
அறியா நெஞ்சம் அன்று—
நிலத்தில் ஊன்றி நிற்கும்,
நடுங்கும் ஒருவரது
உறுதியான பாதங்கள்.
இரவு நெருங்குகையில்
அவருள் எழும் குரல்.
நேருக்குநேர் விழிகளை
எதிர்கொள்ளும்
அவரது துணிவைக் கண்டு
துவண்டு போகும் அச்சம்.
அச்சம் முணுமுணுக்கும்—
ஒருவர் சிறியவர் என்றும்
இரவு ஆழமானது என்றும்
முன்னால் இருக்கும் மலை
மிகச் செங்குத்தானது என்றும்.
மீறி எடுத்து வைக்கும்
ஒரு சிறிய அடி
அவரை இட்டுச் செல்லும்
இடம் ஒளி.
ஒளி தேடி வரும்—
துணிந்து நிற்பவரை,
விழுந்தெழுந்து
கடினமான பாதையில்
நடப்பவரை,
ஒவ்வொரு புயலிலும்
நடந்துகொண்டே இருப்பவரை.
இறுதியில் அவருக்கே
காணக் கிடைக்கும் விடியல்.
விடியல் சொந்தமாகும்—
இருள் திரும்பிப் போ என்றபோதும்
கேளாது தொடர்பவருக்கு,
எவ்வளவு தூரம் வந்தோம் என்பதை
சத்தமின்றி நினைவூட்டும்
தழும்புகளைச் சுமப்பவருக்கு.
தயக்கங்களைப் புறந்தள்ளி
தன்னால் இயலும் என
அவர்தம் இதயம் துடிக்கையில்
நிமிர்ந்து நிற்கும் அங்கே வீரம்.

நவராத்திரி பாமாலை 1:
நளினி SN

துர்கா தேவி
தேவி, எம் வாழ்வினில் துயரம் போக்கிடுவாய்
துணிவினை நெஞ்சினில் நிலை நிறுத்திடுவாய்
பயமென்னும் பேயை ஓடச் செய்வாய்
பாதம் பணிந்தேன்; தைரியம் தருவாய்!

தருவாய் நின் கடைக்கண் பார்வை
அருள்வாய் என்றும் தூய மனதை
பெறுவேன் உன் துணையால் புகழை
பற்றுவேன் நீ காட்டும் நல் வழியை!

நல் வழியை நல்கும் தாயே
வரும் சஞ்சலம் தடுத்திடு நீயே
கருமேக அச்சங்கள் சூழாது நீக்கி
பழி அண்டாது காப்பாய் துர்கா தேவி!

எனது கானம் - இசைக்குட்பட்டது - பாலசாண்டில்யன்

பக்கத் துணையாய்ப் பாதுகாத் தருளும்
திக்கற் றவர்க்கருள் காமாட்சித் தாயே!
துக்க நிவாரணி தூயவள் மாயே
துரிதமாய்க் காக்கும் அருள் நிதியே!

நிதியே தருணத்தில் காட்டிடும் தயையே
கதியே தவிக்காமல் காத்திடும் தாயே!
விதியையே வெல்லும் பரிபூ ரணியே
மதியே கல்மிஷம் போக்கும் சஞ்சீவி நீயே!

சஞ்சீவி யாய்க் காஞ்சி யமர்ந் தருளும்
செஞ்சொல் காவல் தெய்வமே தாயே
கொஞ்சுமுன் அன்பால் கல்மனம் கரைப்பாய்
நெஞ்சொளிர்ந் திலங்கும் அன்பின் வழியே!

வழியே குங்கும மகிமையின் ஒளியே
பொழியும் அருட்கண்ணாள் பங்கஜ மாயே
தொழுதே அங்கம் அடங்கிப் பணிய
அழிவிலா தருள்வாய் ஆதிசக்தியே!

உலகே வணங்கும் சிவனின் உமையாளே
நலமும் வளமும் விளங்க-மலர்கள்
கொண்டு உளமார அர்ச்சித்து நாயேன்
தொண்டு புரிவேன் நாளும்.

நாளும் மனதில் உனையே நினைத்து
தாள்பற்றித் தாயே வணங்கிட -மாளாத்
துயரும் மடிந்தே ஒழிய துளிரும்
நயமாய் அடியேன் வாழ்வு.

வாழ்வு மலர அருள்வாய் கலைமகளே
தாழ்ந்து பணிந்திட தாயே- அழியாத
கல்வியும் பண்பும் பணிவும் பெருமையும்
நல்கிடப் போற்றும் (இவ்)உலகு.

கண்மணி பாண்டியன்.

நவராத்திரி பண்டிகை நாளும் வந்தது
ஒரு நாள் அல்ல ஒன்பது நாள் பண்டிகை
தேவியர் மூவருக்கும் ஆரவார ஆராதனை
வீடு தோறும் கொலு வைத்து கொண்டாட்டம்

கொண்டாட்டம் கோயில்களில் பிரமாண்டம்
கல்வியே நம் மூலதனம் என்று
கலைமகளுக்கு முதல் மூன்று நாட்கள்
முக்கியத்துவம்

முக்கியத்துவம் அலைமகளுக்கு
அடுத்த மூன்று நாட்களுக்கு
செல்வமும் வளமும் வழங்கிட
லட்சுமியை வணங்குவோம்

வணங்குவோம் மகிஷாசுரமர்த்தினி துர்க்கையை,
கடைசி மூன்று தினங்களில்
வீரமும் தீமையை அழிக்கும் துணிவும் வேண்டிடுவோம்/
கல்வி செல்வம் வீரம் மூன்றும்
வேண்டி கொண்டாடுவோம் நவராத்திரி.

சின்னக் கண்ணன்

ஆணிப்பொன் போல அழகாய்க் கவி நெய
வாணி நீ தந்தால் வரம்
வரமெனத் தந்தாலும் வண்ணமாய்ப் பாட்டில்
சுரமதும் வந்தால் சுகம்
சுகமும் வருகின்ற துன்பமும் போக்க
உகந்தெந்தன் உள்ளத் திரு

உள்ளத் திருந்து உணர்வின் வழியூடி
அள்ளக் குறையாத செல்வத்தை அனுதினமும்
நல்லதை செய்திட நாடி அருளுவாய்
செல்லத் திருமகளே சீர்

சீராக வாழ்க்கை சென்றிட என்றென்றும்
வேராக செல்வமும் வேண்டுமே – தேராக
ஆடி அசைந்து அழகியலாய் நான்செல
ஊடி உணர்வில் உயர்

உயரம் பலவிதமாய் ஓங்குதற்குக் கல்வி,
துயரமதைப் போக்குதற்கு சூட்சுமமாய்ச் செல்வமெனத்
தேடியெனை ஆசியுடன் சேர்ந்திட வேண்டியே
பாடினேன் பாடல் பல

பலவிதமாய் பாடல்கள் பாங்காக நெய்ய
சிலவிதமாய் வாழ்க்கையில் சென்றுவரும் தோல்வியைத்
தாங்கிப் பிடிக்க மலைமகளே இங்கெனக்குத்
தேங்கிடும் வீரத்தைத் தா

தாவென்றால் வந்து தயங்காமல் வல்வினையை
போவென்று போக்கப் புயபலமும் – பூவென்று
எண்ணியவர் போற்றநீ ஏற்றத்தை என்றனுக்குத்
திண்ணமாய்த் தந்திடில் தேன்

தேன்போலச் சீராகப் பாமாலை தேவியர்க்கு
மீன்போலத் துள்ளியே மென்மையுடன் – வான்சிந்தும்
சாரலாய்த் தந்தேன் தங்கமாய் மின்னிடும்
ஆரமாய் ஆகிடும் ஆம்

ஆமென்று சொல்லிவிட்டு அழகாகத் தேவியரை
அன்புடனே அவர்பாதம் அடக்கமுடன் பூசித்தால்
பூமென்மை கொண்டவர்கள் பொலிவுடன் தானுவந்து
போதனைகள் பாவகைகள் பல்விதமாம் செல்வமதை
ஆமென்று தின்பதைப்போல் அருகினிலே உடன்வந்து
அனுக்கமாய்த் தந்திடவும் ஆரவார ஒலியுடனே
போமென்று சொல்லாத தையெண்ணிப் பூரித்து
பொங்கித்தான் வாழ்க்கையது மின்னுதலும் ஆணிப்பொன்!

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 14 – இப்ராகீம் ஸவுக்

மருத்துவர் பக்கம் – 44: பக்கவாதமும் சிகிச்சையும்

நல்லாச்சி – 43