Home கவிதைஈற்றடிக்கோர் பாட்டு – 9

ஈற்றடிக்கோர் பாட்டு – 9

by Iyappan Krishnan
0 comments

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

உழவர் உழைப்பால் உயரும் உலகம்
மழையால் செழிக்கும் மரங்கள் – தழலாய்ப்
பயிலும் பரிதியின் பாங்கின் தழைத்த
வெயிலில் விளைந்திடும் வான்.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

சின்னக்கண்ணன்

கண்கள் சுருக்கி கலகலக்கும் நெற்பயிர்கள்,
பண்புடன் நிற்கின்ற பைங்கரும்பு – வண்ண
மயிலாக ஆடுதற்கு மாண்பாய் உதவும்
வெயிலில் விளைந்திடும் வான்

மாலா மாதவன்

உழவர் உழுதார் நிலத்தைக்கண் நீரால்
விழலோ உழைப்பிங்கு வீணோ – பழகப்
பயிலும் நிலத்தில் பயிரின் விளைச்சல்
வெயிலில் விளைந்திடும் வான்

இப்னு ஹம்துன்

தார்ச்சாலை பொங்கிவரத் தாளாத பாலையில்
நீர்வேண்டி எவ்வுயிரும் நின்றநிலை – யார்க்கும்
துயிலில் வளர்ந்திடும் தூய கனவும்
வெயிலில் விளைந்திடும் வான்

கண்மணி பாண்டியன்

காலையில் வரும் கதிரவன்
கட்டியம் கூறும் புள்ளினம்
இரவில் நிலவின் ஆட்சி
அல்லி மலரே சாட்சி
தடம் மாறா ரவி மதியின் சுழற்சி
இயற்கையின் அற்புத பயிற்சி
நிலவில் குளிர்ந்தது மண்
வெயிலில் விளைந்திடும் வான்

நளினி

அந்தி வான்மதியும் எரிக்குதே அக்னியாய்,
வைகறை இளவெயிலும் சுடுதே எரிமலையாய்,
நெஞ்சில் பிரிவுத்துயர் தகிக்குதே
செந்தணலாய்,
கண்ணில் நீர் வழியுதே வெந்நீர்ப்புனலாய்!
காலடி வைக்கும் தடமெங்கும் முள்ளாகுதே,
காதலன் பிரிவாலே நாளும் நரகமாகுதே,
நெஞ்சினில் ஓயாத நினைவுகள் அலைபாயுதே,
வேதனைகள் தீராது இரவுகள் பல கழியுதே!
அழகிய சோலைகள் யாவும் சுடுகாடாய் தோன்றிட,
ஆருயிர் வேக சோகத் தீ சிதை மூட்டிட,
கானல் நீராய் நின் வதனம் காட்டுவதேனோ
வெயிலில் விளைந்திடும் வான்

ஹேமா செந்தில்

கார்மழை கொட்டுதே விண்ணும் களைகட்டுதே
கார்த்திகை திங்கள் மனதை நிறைக்குதே
மெய்யும் சிலிர்த்திட வெய்யோன் வெளிப்பட
வெயிலில் விளைந்திடும் வான்.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment