Home தொடர்மருத்துவர் பக்கம் – 39: பஞ்சத்தின் மரபணுவும் இன்றைய நோய்களும்: வரலாறும் அறிவியலும்

மருத்துவர் பக்கம் – 39: பஞ்சத்தின் மரபணுவும் இன்றைய நோய்களும்: வரலாறும் அறிவியலும்

by Farooq Abdullah
0 comments

சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள்தான் தற்கால இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதைப் பறைசாற்றும் நிகழ்வாகவே நான் அன்னாரின் பேட்டியைப் பார்க்கிறேன்.

1960களில் மரபணு ஆய்வாளர் நீல் அவர்கள் முன்மொழிந்த “த்ரிஃப்டி ஜீன் தத்துவம்” (Thrifty Gene Hypothesis) கூறுவது இதுதான்: தொடர்ந்து மாவுச்சத்து கிடைக்காத, அதாவது தானியங்கள் கிடைக்காத பஞ்சங்களுக்கு உட்படும்போது, ஒருவரது மரபணுக்கள் அவ்வப்போது கிடைக்கும் கொஞ்சம் மாவுச்சத்தையும் உடலில் கொழுப்பாகச் சேமித்து வைக்குமாறு உருமாற்றம் அடையும்.

இதுவே நம் முன்னோர்களைப் பஞ்சங்களில் இருந்து காப்பாற்றியது; நிகழ்காலத்தில் நம்மவர்களைக் கொன்று வருகிறது.

என்னது, காப்பாற்றிய அதே மரபணுக்கள் தற்போது கொன்று வருகின்றனவா? எப்படி???

நமது முன்னோர்களுக்கு 1970களுக்கு முன்பு வரை அடிக்கடி பஞ்சங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. எனவே, உருமாற்றம் அடைந்த, மாவுச்சத்தைக் கொழுப்பாகச் சேமிக்கும் மரபணுக்கள் வீரியமாகச் செயல்பட்டு, அவர்கள் எப்போதெல்லாம் மழை பொழிந்து வயலில் இருந்து தானியங்கள் கிடைத்ததோ, அப்போது சாப்பிட்ட கொஞ்சம் மாவுச்சத்து கொழுப்பாகச் சேமிக்கப்பட்டு, அடுத்த பஞ்சம் வரும்போது அவர்களின் உயிரைக் காத்தது.

ஆனால், 1970களுக்குப் பிறகு நமக்கு பஞ்சம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனாலும், நம்மிடையே உள்ள மரபணுக்கள் அப்படியேதான் இருக்கின்றன. அவை கிடைக்கும் மாவுச்சத்தைக் கொழுப்பாக மாற்றி தோலுக்கு அடியில், தொப்பையில், தொடையில், உள்ளுறுப்புகளில் எனச் சேமிக்கின்றன.

இதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகிறது.

  • டயாபடிஸ் (சர்க்கரை நோய்)
  • ரத்தக் கொதிப்பு
  • ஃபேட்டி லிவர் (கல்லீரல் கொழுப்பு)
  • உடல் பருமன்
  • இதய நோய்
  • சிறுநீரக நோய்

ஆகியவை அதிகமாக வருகின்றன.

1876-1878 இந்த வருடங்களில் நம் முன்னோர்களுக்கு என்ன நடந்தது?

இதை அறிய நாம் டைம் டிராவல் செய்து சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.

ஆண்டு 1876:

எனது வயதை ஒத்தவர்களின் தாத்தாவின் தாத்தா (முப்பாட்டனார்) அந்த ஆண்டில்தான் பிறந்திருக்க வேண்டும். (நான் < அப்பா < தாத்தா < பாட்டனார் < முப்பாட்டனார்).

அந்த ஆண்டின் முக்கியத்துவம் என்ன தெரியுமா???

நமது இந்தியத் துணைக்கண்டம் கண்ட மிகப்பெரிய உணவுப்பஞ்சம் ஏற்பட்டது அந்த ஆண்டில்தான். சுமார் மூன்று வருடங்கள் நீடித்த கொடிய உணவுப்பஞ்சம்.

காரணங்கள் பலவாறு கூறப்படுகின்றன: பருவமழை பொய்த்தது ஒரு காரணம்; அளவுக்கு அதிகமான தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது மற்றொரு காரணம்; ஆங்கிலேயர்களின் சுயநல ஆட்சி வேறொரு காரணம் என்று கூறப்பட்டாலும், இந்தியா முழுமைக்கும் சேர்த்து 55 லட்சம் பேர் இறந்தனர் என்று ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர்.

இந்த பஞ்சம் ஆரம்பித்தது நமது தமிழ்நாட்டில்தான். பின்பு மெதுவாக இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இந்த பஞ்சத்தை ‘The Great Famine of Madras 1876-78’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஆக, அந்த பஞ்சத்தில் தப்பிப் பிழைத்தவர்கள்தான் நமது முப்பாட்டன், பாட்டிமார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்வோம். அவர்களைப் பிழைக்க வைத்தது, கிடைக்கும் கொஞ்சம் மாவுச்சத்தையும் கொழுப்பாக மாற்றிச் சேமிக்க உதவிய அந்த மரபணு உருமாற்றம்தான். இதைத்தான் “த்ரிஃப்டி ஜீன்” (கஞ்சத்தனமான மரபணு) என்று கூறுகிறோம்.

சரியான உணவு இன்றி எப்படி அவர்கள் அந்த மூன்று வருடங்களைக் கடந்திருக்க முடியும்? உணவு இல்லாமல் அவர்களது உடல் எவ்வாறு உயிர் பிழைத்தது?

நமது உடலில் மாவுச்சத்தை உணவில் பிரதானமாக எடுத்துக்கொள்வதால், நமது ரத்தத்தில் குளுக்கோஸ் கலந்திருக்கும். நமக்கு அடுத்த வேளை உணவு கிடைக்கவில்லையெனில், இந்த குளுக்கோஸ் நமது நான்கிலிருந்து ஆறு மணி நேர எரிபொருள் தேவையைச் சமாளிக்கும்.

உங்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைக்கவில்லையெனில், நமது கல்லீரலிலும் தசைகளிலும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜென் (Glycogen) குளுக்கோஸாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படும். இது கிளைகோஜெனோலைசிஸ் (Glycogenolysis) எனப்படும். (Lysis என்றால் உடைதல்). இந்த கிளைகோஜென் நமது எரிபொருள் தேவைகளை மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை சமாளிக்கும்.

ஐந்து நாட்களாகியும் ஒருவருக்கு உணவு கிடைக்கவில்லையெனில், அடுத்து உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பைக் கரைக்க ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோ கலோரிகள் அளவு ஆற்றலைத் தரும் அளவுக்குக் கொழுப்பு நம்மிடம் ஸ்டாக் இருக்கும். ஆகவே, இந்தக் கொழுப்பை வைத்து நூறு நாட்கள் கூட உயிர் பிழைக்க முடியும்.

ஆகவே, நமது முன்னோர்களுக்கு உயிர் தந்தது அவர்கள் சேர்த்து வைத்திருந்த கொழுப்புதான். மாவுச்சத்து கிடைக்காத நாட்களில் நம் உடல் நாம் சேர்த்து வைத்த கொழுப்பைக் கொண்டு மட்டுமே உயிர் வாழ முடியும்.

கொழுப்பும் இல்லையெனில், நமது உடலில் உள்ள புரதம் காலியாகும் வரை உயிர் வாழ முடியும். புரத இழப்பை நாம் Muscle Wasting என்கிறோம்.

பஞ்ச காலத்தில் கொழுப்புணவோ, மாவுச்சத்தோ, புரதமோ எதுவுமே கிடைத்திருக்காது. அதன் விளைவாகத்தான் மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருப்பவர்களை “பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி இருக்கான்” என்கிறோம்.

ஆகவே, மாவுச்சத்தையும் குளுக்கோஸையும் மட்டுமே நம்பி நமது உடல் படைக்கப்படவில்லை என்பது திண்ணம். கார்போஹைட்ரேட் என்பது ஊக்க மருந்து போலத்தான்; சிறிதளவு இருந்தால் பிரச்சனையில்லை. அதையே சர்வகாலமும் மிக அதிகமாக எடுத்தால், நம்மை அது அதற்கு அடிமையாக்கிவிடும்.

தற்காலத்தில் மாவுச்சத்துக்கு பஞ்சமே ஏற்படுவதில்லை என்பதாலும், நம் முன்னோர்களின் த்ரிஃப்டி ஜீன்கள் இன்னும் நம்மிடையே ஆக்டிவாக இருப்பதாலும் நாம் செய்ய வேண்டியது என்ன?

நாமே செயற்கையாக அவ்வப்போது விரதங்கள் வாயிலாக பஞ்சங்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். கூடவே மாவுச்சத்தைக் குறைவாகச் சாப்பிட்டு, நமது ஜீன்களை அதிகமாகக் கொழுப்பைச் சேர்க்க விடாமல் செய்ய வேண்டும்.

(இணைக்கப்பட்டிருப்பது உலக புகைப்பட நாளில், தாது வருடப் பஞ்சத்தில் தப்பிப் பிழைத்த நம் முன்னோரின் புகைப்படம்)

Author

You may also like

Leave a Comment