“சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…”
அம்மா போனை வைத்துவிட்டாள்.
‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் செய்தாள் அம்மா? அவள் பேசிய விதமும் தொனியும் வழக்கம்போல் இல்லை; சற்றே மாறுபட்டு இருந்தது.
எனக்குத் தெரியும், அம்மா அப்படி இப்படி எல்லாம் பேசுபவள் இல்லை. ஏதோ ஒன்று அம்மாவின் மனதை ஆட்கொண்டிருக்கக்கூடும்; அவளை அது இம்சைப்படுத்தியும் இருக்கக்கூடும். அந்த அவஸ்தையின் வெளிப்பாடுதான் அம்மாவின் இந்தப் பேச்சு.
எழுந்து சமையலறைக்குச் சென்றேன். ஞாயிற்றுக்கிழமை காலை கார்த்திக் 11 மணிக்குத்தான் எழுந்திருப்பான்; ஆகவே எனக்கு மட்டும் காபி போடலாம் என்று ஃபில்டரை எடுத்து வைத்தபோதுதான் தெரிந்தது, அம்மா கொடுத்து அனுப்பிய காபி பவுடர் தீர்ந்துவிட்டது என்று. சரி பரவாயில்லை, இன்று இன்ஸ்டன்ட் காபிதான்!
இங்கு வந்ததிலிருந்து எனக்கு ஏனோ இந்த மெக்சிகன் காபியும் கொலம்பியன் காபியும் பிடிப்பதே இல்லை. நம்ம ஊர்ல சிக்கரி கலந்த காபி மாதிரி இங்கே இல்லை. காபி தண்ணி மாதிரி இருக்கிறது; அசிடிட்டி வேற அதிகம்! ஊரிலிருந்து அம்மா யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பும், அல்லது சில நேரங்களில் கொரியர் மூலமாக அனுப்பும் நம்ம ஊர் காபித்தூளுக்கு இணையாக வேறு எந்தக் காபியும் இங்கு இல்லை என்பது என் நம்பிக்கை.
‘யாராவது இந்தியாவில் இருக்கிற காபி கம்பெனிகள் சப்ஸ்கிரிப்ஷன் (Subscription) மாடலில் மாதம் ஒருமுறை காபி அனுப்பி வைத்தால் தேவலை; எதற்கும் சாட் ஜிபிடியிடம் (ChatGPT) அப்படி யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்…’
காபியை எடுத்துக்கொண்டு முன் அறையில் வந்து அமர்ந்தேன். காபி குடித்து முடிக்கும்வரை அம்மாவின் நினைவே இருந்தது. திரும்பவும் ஒருமுறை கூப்பிடலாமா என்று யோசித்தேன். ‘வேண்டாம்… அம்மா வழக்கமாகவே இரவு சீக்கிரமே படுக்கச் சென்றுவிடுவாள். அப்பொழுதுதான் காலை நான்கரை மணிக்கு எழுந்து தன் வேலையைத் தொடங்கி, அந்தப் பொழுதைச் சிறப்பாகக் கழிக்க முடியும்.’
அப்படி என்ன நான்கரை மணிக்கு எழுந்து வேலை என்று நானும் பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். இல்லாத பாத்திரங்களைக் கழுவுவதும், குப்பையே இல்லாத வீட்டைக்கூட்டிப் பெருக்குவதும், அப்பாவை ஒரு இரண்டு முறை ஏதாவது வம்புக்கு இழுப்பதும் அவள் தினமும் செய்கிற வேலைகள்!
இருப்பினும், இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதில் தொடங்கி பூஜை முடியும் வரையிலான அந்த ஒரு மணி நேரம், அவளுக்கு மிகவும் மனநிறைவோடு கழியும்.
அம்மா ஏன் அப்படி விரக்தியாய்ப் பேசினாள்? யோசித்துப் பார்த்தேன்.
கும்பகோணத்திற்கு அருகில் நஞ்சை நிலப்புலன்களுடன், வளையப்பேட்டை அக்ரஹாரத்தில் பெரிய வீடு! அப்பாவும் கும்பகோணத்தில் புகழ்பெற்ற கைராசியான மருத்துவர்; அதனால் வருமானத்திற்கு ஒன்றும் குறைச்சலில்லை.
என்னையும் என் தம்பியையும் மிக நன்றாகவே படிக்க வைத்தார். அதன் பலனாய், இன்று புலம்பெயர்ந்து அமெரிக்காவில் ஒரு ஏக்கர் நிலத்தில் நான்கு படுக்கையறைகள் கொண்ட மிகப்பெரிய வீட்டின் உரிமையாளராய் நான்! அதைப்போலவே என் தம்பியும் பாஸ்டனில்…
எப்படியும் நாலைந்து மாதங்களுக்கு ஒருமுறை நானோ, அவனோ, அல்லது கார்த்திக்கோ இந்தியா சென்று அவர்களைப் பார்த்து வருவது இன்றளவும் தொடர்ந்து நடக்கிறது. அப்படித் திரும்பி வரும்போது அம்மா ஏதேனும் பலகாரங்களோ, சமையல் பொடி வகைகளோ கொடுத்து அனுப்புவாள்… மறக்காமல் காபித்தூளும்!
இந்தமுறையும் அப்படித்தான் செய்திருந்தாள். அதில் என்றும் குறையில்லை!
பின்னை ஏன் அப்படிப் பேசினாள்? யோசித்துப் பார்த்தேன்… புரியவில்லை. கார்த்திக்கிடம் கேட்க வேண்டும்.
மாலை கார்த்திக்குடன் டின்னருக்குச் சென்றபோது இதைப்பற்றிப் பேசினேன்.
“கார்த்திக், அம்மா காலையில பேசும்போது ‘அப்ராப்ட்டா’ (abrupt-ஆ) போனை கட் பண்ணிட்டா… அவளோட வாய்ஸும் நார்மலா இல்லை. காலையிலிருந்து எனக்கு அது ஒரு ‘மெண்டல் அகனி’ (mental agony)! ஏன் என்று புரியல… நீ என்ன நினைக்கிற?”
“ரம்யா, அம்மாவோட மனசை உன்னால புரிஞ்சுக்க முடியலைனா வேற யாரால புரிஞ்சுக்க முடியும்? இருந்தாலும் பேசுவோம். இதப்பத்தி பேசிட்டே இருந்தா எப்படியாவது ஒரு ‘கனெக்ஷன் லிங்க்’ கிடைக்கும். போன வாரம் உங்க அம்மா என்ன சொன்னாங்க?”
“ஒன்னும் பெருசா இல்லை… கிருஷ்ண ஜெயந்தி பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதுக்கு பலகாரம், சீடை இதெல்லாம் செய்யணும்; செஞ்சு உனக்குக்கூட கொஞ்சம் அனுப்பணும் அப்படின்னு சொன்னாங்க. நான் கூட, ‘நீ ஏன் கஷ்டப்படுற? நாங்க ஒன்னும் இங்கே அதை அவ்வளவு பெருசா சிறப்பா கொண்டாடப்போறது இல்லை. காரணம், அது வியாழக்கிழமை வருது. அதனால வேண்டாம்’னு சொன்னேன்.”
“சரி, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”
“அவங்க என்ன சொன்னாங்கன்னு யோசிச்சேன்… ‘ஊரு விட்டு ஊரு போனா இதையெல்லாம் மறந்துடுவீங்களா? நமக்குன்னு உண்டான சாஸ்திர சம்பிரதாயங்கள் ரொம்ப முக்கியம். நீ எங்க போனாலும் கடைசியில இங்கேதான வந்து சேரணும். உன்கிட்டேயிருந்துதான் உன்னுடைய குழந்தைகள் அதைக் கத்துக்கணும். உன்னைப் பார்த்துதான் உன் குழந்தை கத்துக்கணும். நீ வேலை, பணம், பதவின்னு ரொம்ப பிஸியா இருந்து இதையெல்லாம் மறந்துட்டீங்க… என்ன சொல்றது… போ! ஹூஸ்டன்லதான இருக்கீங்க… அங்கே இருக்குற கோவிலுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் உன்னால போக முடியாதா? சரி, உன் இஷ்டப்படியே முடிவு பண்ணிக்கோ’ என்று சொன்னா அம்மா.”
“இதுதான் ‘ட்ரிக்கர்’ ஆகி இருக்கும்னு நான் நினைக்கிறேன்! காரணம், கும்பகோணத்து அம்மாவுக்கும் ஹூஸ்டன் மகளுக்கும் உள்ள வேறுபாடு. அம்மாவுக்குத் தெரியாது… அமெரிக்காவில் வசிக்கும் பெண்கள் இந்தியா போகும்போது மட்டும் தவறாமல் தாலிக்கொடியை அணிந்துகொள்வதும், பட்டுப்புடவைக்கு மாறிக்கொள்வதும் கலாச்சாரம் செய்கிற விந்தை என்று!
இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. அம்மா உனக்குச் சீடையையும் முறுக்கையும் செய்து கொடுத்து அனுப்பியிருந்தால், அவளுக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அவள் உடல் உழைப்பை விடவும், அந்தச் சீடையும் முறுக்கும் சுமந்துவரும் உன் மீதான அன்பும் பாசமும் அவளுடைய உடல் வலிக்கு முன்னால் தூசுக்குச் சமம்! இதை நீ புரிந்துகொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்.
நீ அவள் மீது கொண்ட ‘பொஸசிவ்னஸ்’ காரணமாக அவள் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறாய்; உன் நினைப்பும் சரியே. ஆனால், அந்த அன்பிற்கு இணை ஏது?
உனக்குத் தெரியும்தானே, கிராமங்களில் ஒரு வீட்டிலிருந்து பலகாரங்கள் அடுத்த வீட்டிற்குக் கொடுத்து அனுப்பினால், அந்தப் பாத்திரம் காலியாகத் திரும்பி வராது. அதற்குள் வேறு ஏதேனும் ஒரு பொருளை நிரப்பி அனுப்புவதுதான் அடுத்த வீட்டுக்காரரின் வழக்கமாக இருக்கும். இந்தச் சின்னச் சின்ன அன்பில்தான் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் உறவை ஊருக்குப் பறைசாற்றுவார்கள். அவர்களின் வாழ்வு மற்றொருவரைச் சார்ந்ததுதானே! இது ஏன் உனக்குப் புரியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
நீ எம்பிஏ படிக்கும்போது ‘பெஞ்சமின் ஃபிராங்க்ளின் விளைவு’ பற்றிப் படித்திருப்பாய்…”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் கார்த்திக்? நீ ரொம்பக் குழப்புற… முதல்ல சொன்னது எனக்குப் புரியுது; ஆனா இந்த தியரி புரியலையே!”
“இது ரொம்ப சிம்பிள் ரம்யா… நாம் ஒருவருக்கு நன்மை செய்வதைவிட, அவரிடமிருந்து ஒரு சிறிய உதவியைப் பெறும்போதுதான் நம் மனம் அவர்களின் மீதும், அந்தச் செயலின் மீதும் அதிக ஈடுபாடும் பாசமும் கொள்ளும். பிள்ளைகள் பாசத்தால் அம்மாவை எப்போதும் ‘பெறுபவராகவே’ வைத்திருக்க நினைக்கிறார்கள். ஆனால், அம்மாவுக்கு இன்னமும் ‘கொடுப்பவராக’ இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது!
‘ஃபண்ட் ரைஸ்’ பண்ணும்போது அந்த சமூகத்தில் இருக்கிற எல்லோரையும் அதில் ஈடுபடச் சொல்லுவார்கள், தெரியுமா? இப்போது ஒரு மனுவில் கையெழுத்து போட வேண்டும் என்றால், அதில் கையெழுத்திடுபவர்களுக்கு ஒரு பேனாவை இலவசமாகக் கொடுப்பார்கள். இது அவர்களை அந்த இயக்கத்தோடு இணைத்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்; இதைப் பற்றி மற்றவர்களிடமும் பேசத் தொடங்குவார்கள். அப்படியாக அந்த இயக்கமும் பெரிதாகும்.”
“சரி… அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
“ரம்யா, உனக்கு இன்னமும் புரியலை! அதாவது, அவங்க ரெண்டு பேரும் வயசானவங்க. நீ என்னதான் பணமும் பொருளும் கொடுத்து அனுப்பினாலும், அவர்களைக் கடைசி வரை வசதியாக வைத்திருந்தாலும், அது அவர்களைப் பெரிதாகத் திருப்திப்படுத்தாது. நீ காபித்தூளுக்கும் முறுக்குக்கும் சீடைக்கும் உன் அம்மாவை நம்பியிருப்பதாக அம்மாவுக்குப் புரியும் வரை அவளுக்குத் திருப்தி கிடைக்காது! நீ அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டாய்! உன்னிடமிருந்து தான் விலக்கப்பட்டுவிட்டதைப்போன்ற ஒரு வருத்தம் அவளுக்குள் ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால்தான், ‘பிள்ளைகளுக்கு நாம் இனி வேண்டாமோ?’ என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையும் அவளுக்கு வந்திருக்கக்கூடும்.”
“அதுசரி… நீ கவலைப்படுகிற அளவுக்கு அப்படி அது என்ன அவ்வளவு சிரமமான காரியமா? முறுக்கு, சீடைதானே… ஏதாவது ஸ்வீட் செய்யறதா இருந்தாகூட நீ சொல்லலாம்.”
“கார்த்திக், உனக்கு ஒன்று தெரியுமா? ‘சாப்பிடணுமே’ அப்படின்னு செய்யறது வேற; ‘சாப்பிடணும்!’ அப்படின்னு செய்யறது வேற. ‘சாப்பிடணுமே’னு செய்யறது கடனுக்குச் செய்யறது. ஏதோ ஒன்று செய்யணுமே, சாப்பிடணுமே என்கிற ஒரு கட்டாயம். ஆனால், ‘நான் செய்யறதை நீ கட்டாயமா சாப்பிடணும், பாராட்டி மகிழணும்’ அப்படின்னு நினைச்சு நான் அதைச் செய்வதற்கு எடுக்கும் சிரமம் என்னவென்று உனக்குத் தெரியாது! அவ்வளவு சிரமம் அது…
சீடைக்கு, முறுக்குக்கு மாவு எடுத்துச் சலித்து, சுடு எண்ணெயை ஊற்றிப் பிசைந்து… அப்படிச் சுடு எண்ணெயை ஊற்றும்போது கை பொத்துப் போகுமோ, கையில் புண்ணாகி காயப்படுத்தி விடுமோ, வயசான காலத்தில் அந்தத் தோல் தாங்குமா என்கிற பயமும் கவலையும் என் மனசில் இருக்கிறது. அதனால்தான் அவளைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். ஆனால், அம்மாவுக்கு அது புரிய மாட்டேங்குது; சொன்னால் மனசு கஷ்டப்படுறா… இதை எங்கே போய் நான் சொல்லி முட்டிக்கிறது?”
“கோழி மிதித்து குஞ்சு சாகாதுன்னு சொல்லுவாங்க தெரியுமா உங்கள் ஊரில்… அந்த மாதிரிதான் இதுவும்!”
“சரி பார்ப்போம், என்ன நடக்குதுன்னு. நாளைக்கு போன் பேசும்போது அம்மாவோட மூடு எப்படி இருக்குன்னு தெரிந்துவிடும்.”
கார்த்திக் மிகப்பெரிய தத்துவத்தைச் சாதாரண பேச்சுவாக்கில் மிக இயல்பாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
வார இறுதியில் வழக்கம்போல் அம்மாவிடம் பேசினேன். எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்று தெரியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அம்மாவே தொடங்கினாள்:
“ரம்யா… கிருஷ்ண ஜெயந்திய அன்னைக்கு ஊத்துக்காடு காளிங்கநர்த்தன பெருமாள் கோவில் போயிட்டு வரலாம்னு நினைச்சு, வலங்கைமானில் இருக்கிற என் தங்கைக்கு போன் பண்ணினேன்… அவளும் சரின்னுட்டா! சரி, அடுத்தவர் ஆத்துக்கு வெறுமனே கையை வீசிட்டு போக முடியுமோ? அதனால உனக்குச் செஞ்ச முறுக்கு, சீடையையெல்லாம் எடுத்துண்டு அவ ஆத்துக்குப் போய், அக்கம் பக்கத்து மனுஷாளுக் கெல்லாம் கொடுத்துட்டு அடுத்த நாள்தான் வந்தேன்! ஒரு நிறைந்த மனத்திருப்தியோட கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிட்டு வந்துட்டேன். நீ என்ன பண்ண?”
“நான் வழக்கம் போல ஒரே ஒரு கிருஷ்ணர் கால் பாதம் மட்டும் வரைஞ்சு, ஒரு அஞ்சு நிமிஷம் பூஜை பண்ணினேன்… அவ்வளவுதான்.”
“இந்த வாரம் ‘வீக் எண்ட்’லதான் கோவிலுக்குப் போகணும்.”
“சரி, செய். இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… விட்டுவிடக் கூடாது, புரியுதா? பகவான் கிருஷ்ணன் எல்லாரையும் நல்லா காப்பாற்றுவார்!”
“சரிம்மா…” என்று சொல்லிவிட்டு, வழக்கமாகப் பேசும் பல விஷயங்களைப் பேசிவிட்டு போனைத் துண்டித்தேன்.
கிருஷ்ணார்ப்பணம்.