காலவெளி மருத்துவன்

காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை போலிருந்தன.

நான் ஒரு மருத்துவன் என்று அவர்கள் சொல்கிறார்கள். அல்லது நானே சொல்லிக்கொள்கிறேனோ? தெரியவில்லை. இந்த அறை. இந்த நாற்காலி. முன்னால் ஒரு மேஜை. எனக்கு எதிரே தினமும் மனிதர்கள் வந்து அமர்கிறார்கள்.

அவர்கள் நிழல்களா? இல்லை நிஜங்களா? அல்லது என் அகத்தின் ஆழத்திலிருந்து எழும்பி வரும் நிழல்களா? என என்னால் பிரித்தறிய முடிவதில்லை.

நேற்று ஒருவன் வந்தான். அவன் பெயர் நவீணன் என்று சொன்னான். அவனுக்குள் தாங்க முடியாத துக்கம். அவன் கண்களில் நீர் ஊறி வெளியேற வெளியேற ஏதேதோ சொல்கிறான். அது முக்கியமில்லை. ஆனால் அவனுடைய வார்த்தைகள் என் தொண்டைக்குழியில் இருந்து வெளிவருவது போல ஒரு பிரமை. அவன் அழுதபோது என் புறங்கை மீது சூடாக விழுந்த நீர்த்துளி அவனுடையதில்லை. நானும் அழுதுகொண்டிருப்பதை உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் அந்த நாற்காலியில் வந்தமரும் மனிதர்கள், தங்களின் இருண்ட ரகசியங்களை ஒரு மேலாடையைக் கழற்றிவிடுவது போல என்னிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். நேற்று நவீணன், இன்று காலையில் சுசீலா.

காலையில் சுசீலா என்னைப் பார்த்துச் சிரித்தாள். அதில் ஒரு வசீகர மயக்கம் இருந்தது. சமயத்தில் அவள் சிரிப்பும் என் சிரிப்பைப் போலவே இருக்கிறது.

நான் அவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன். மருத்துவக் குறிப்பேட்டில் என்னென்னவோ எழுதுகிறேன். இருங்கள், இது என் கையெழுத்தா? ஒருவேளை மருத்துவன் வேறொருவனா? இல்லை நான் உண்மையில் மருத்துவன் தானா? எதுவாயிருந்தால் என்ன இப்போது? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. நான் பித்தனா? இல்லை அவர்கள் தான் பித்தர்களா? இரண்டில் ஏதோ ஒன்று நிஜமாக இருக்கத்தானே வேண்டும்.

ஒன்று மட்டும் புரிகிறது. நவீணனோ, சுசீலாவோ அல்லது இன்னும் பலர் வந்து அவர்கள் சொன்னதெல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்திருக்கிறது.

எங்கோ ஒரு மூளையில் சுருண்டு கிடக்கும் பழங்கதைகளை அவர்கள் சொல்லத் தொடங்கும்போது, வலிப்பது அவர்களுக்கல்ல, எனக்குத்தான் என்பது எனக்கே புரிவதில்லை.

அவர்கள் சொல்வதெல்லாம் எனக்குத் தெரிந்த ரகசியங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நான் செத்துச் செத்துப் பிழைத்த நினைவுகளின் மிச்சங்கள்.

அந்த அறையின் வெளிச்சம் மங்கத் தொடங்கும் அந்தி வேளையில், எதிரே யாருமற்ற நாற்காலியைப் பார்த்து நான் பேசிக்கொண்டிருக்கிறேனோ என்ற பிரமை என்னைச் சில கணங்கள் சூழ்ந்துகொள்கிறது.

கண்ணாடியைப் பார்க்கிறேன். அங்கு நான் இருக்கிறேன். அல்லது நான் என்று நான் நினைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனுக்குப் பின்னால் அவர்கள் எல்லோரும் நிற்கிறார்கள். நவீணன், சுசீலா, நவீணனுக்கு வலது பக்கம் நான்காமிடத்தில், அவள் பெயர் லட்சுமி என்றே நினைவு. இப்படியாக இன்னும் பெயர் தெரியாத பலர்.

எல்லார் பெயரும் மனதில் நிலைத்துவிடுவதில்லை. இந்த லட்சுமி வந்த அன்று அவளின் முகத்தின் இறுக்கமும் கண்களில் தெரிந்த கொலைவெறியும் என்னை இப்போதும் நடுங்க வைக்கின்றன.

இதோ யாரோ ஒருத்தி வருகிறாள். இவள் சுசீலாமா? மங்கம்மாவா? இவள் வெள்ளுடுப்பு அணிந்துகொண்டு என்னை அணுகுகிறாள். அவள் கைகளில் இருக்கும் ஊசியில் ஏதோ வெளிர் மஞ்சள் நிறத் திரவம் இருக்கிறது. எந்தக் கேள்வியும் கேட்காமல் என் கையைப் பிடித்துப் புஜத்தில் நறுக்கென்று குத்தினாள்.

கண்களில் மெல்ல மெல்ல இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. எழுந்ததும் அடுத்த நோயாளி யாரென்று கவனிக்க வேண்டும்.

Authors

Related posts

உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’

தமிழே அமிழ்தே – 15

வரலாற்றில் பொருளாதாரம் – 30