மருத்துவர் பக்கம் – 34: செரிப்ரல் மலேரியா அலர்ட்

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மலேரியா எச்சரிக்கை

நமது நாட்டின் மத்திய வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில், மூளையைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும் மலேரியா தொற்றுப் பரவி வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 பேருக்குத் தொற்றுப் பரவி, அதில் 4 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

மலேரியா தொற்று இரண்டு வகையான நுண்ணுயிரியால் உண்டாகிறது:

  1. ப்லாஸ்மோடியம் வைவாக்ஸ்
  2. ப்லாஸ்மோடியம் ஃபால்சிபாரம்

இதில் இரண்டாவது நுண்ணுயிரி தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கவல்லது. இந்த வகைத் தொற்றுதான் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பரவி வருகிறது.

நம் அனைவருக்கும் தெரியும், மலேரியாவை ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரப்பும் வேலையை அனோஃபிலஸ் வகைக் கொசுக்கள் செய்கின்றன.

தொற்றுச் சங்கிலி

ப்லாஸ்மோடியம் தொற்றுக்கு உள்ளான ஓர் அனாஃபிலஸ் கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் இந்த நுண்ணுயிரி காணப்படுகிறது. பசியெடுத்து மனித இரத்தத்திற்குப் பறந்து திரியும் கொசு, ஓர் ஆரோக்கியமான மனிதரைக் கடிக்கும்போது அவருக்குள் ப்லாஸ்மோடியத்தைச் செலுத்திவிடுகிறது.

உள்ளே சென்ற நுண்ணுயிரி நேராகக் கல்லீரலுக்குச் சென்று அதன் செல்களைத் தாக்கி அங்கே 5-16 நாட்கள் இருந்துவிட்டு, அங்கிருந்து இரத்தத்தில் கலந்து இரத்தச் சிவப்பணுக்களுக்குள் புகுந்து அவற்றைத் தாக்குகின்றன.

இப்போதுதான் மலேரியாவின் அறிகுறிகளான:

  • கடுமையான குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல்
  • தலைவலி
  • மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படுதல் ஆகியன உண்டாகின்றன.

இந்தச் சமயத்தில் மற்றொரு கொசு கடிக்கும்போது அந்தக் கொசுவுக்கும் தொற்றுப் பரவுகிறது. பிறகு அந்தக் கொசுவிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கும் பரவுகிறது.

ஃபால்சிபாரம் மலேரியா ஏன் ஆபத்தானது?

இரத்தச் சிவப்பணுக்களை ஃபால்சிபாரம் தாக்கும்போது பிசுபிசுப்புத் தன்மையை உருவாக்கி இரத்த நாளங்களின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளச் செய்து அழற்சி நிலையை உண்டாக்குகின்றன. குறிப்பாக நுண் இரத்த நாளங்களில் பாதிப்பை உருவாக்கி மூளையில் வீக்கம் மற்றும் பாதிப்பை உண்டாக்குகிறது. சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளையும் செயலிழக்கச் செய்கின்றன.

இரத்தச் சிவப்பணுக்களை ஃபால்சிபாரம் தாக்கும்போது கேமடோசைட்டுகள் எனும் பெயரில் இனப்பெருக்கத்திற்கான செல்களையும் உற்பத்தி செய்கின்றன.

சிகிச்சையை விரைவில் ஆரம்பித்தாலும் 15-20% மரண விகிதத்தையும், சிகிச்சை தாமதமான சூழ்நிலையில் 100% மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட நோய் இது.

ஃபால்சிபாரம் மூலம் செரிப்ரல் மலேரியா எனும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டால்:

  • அடிக்கடி வலிப்பு ஏற்படுதல்
  • அதீத காய்ச்சல்
  • தீவிர இரத்த சோகை
  • குமட்டல் / வாந்தி
  • நினைவு தப்புதல்
  • கோமா நிலை ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தச் செரிப்ரல் மலேரியா ஏற்பட்டுக் குணமானவர்களில் 25-30% பேருக்குத் தொடர்ந்து மூளை நரம்பியல் / நடத்தை / சிந்தித்தல் / நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் நீடிக்கின்றன. தொடர் வலிப்பு நோய் மற்றும் குழந்தைகளாக இருப்பின் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இந்தச் செரிப்ரல் மலேரியாவை அறிவது எப்படி?

அதீத குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் இருப்பின் இரத்தத் தடவல் (PERIPHERAL SMEAR) பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதில் மலேரியா தொற்றுக்கான ப்லாஸ்மோடியம் ஒட்டுண்ணி கண்டறியப்படும். உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

செரிப்ரல் மலேரியாவுக்குச் சிகிச்சை உள்ளதா?

ஆம்.

ஆர்டிமிசினின் அடிப்படையிலான கூட்டு மருந்துச் சிகிச்சை (ARTEMISININ BASED COMBINATION THERAPY) அதனுடன் சல்ஃபாடாக்சின் – பைரிமெதமின் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனுடன் ப்ரிமகுயின் மாத்திரையும் சேர்த்து உண்ணப்பட வேண்டும்.

சிகிச்சையைத் தாமதமின்றித் தொடங்கி முழுவதுமாக நிறைவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும் ஜார்கண்டில் பரவும் செரிப்ரல் மலேரியாவுக்கும் என்ன சம்பந்தம்? ఎதற்கு நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களுள் 33 மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களாக மலேரியா தொற்றுப் பதியப்படவில்லை.

எனினும்,

  • சென்னை
  • இராமநாதபுரம்
  • தூத்துக்குடி
  • செங்கல்பட்டு
  • சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மலேரியா தொற்றுப் பதிவு செய்யப்படுகிறது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும்படி மலேரியா தொற்று நிலை நமது மாநிலத்தில் இல்லை. (No local transmission)

எனினும் வெளிமாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், ஒடிஷா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குப் பணி நிமித்தமாக வருபவர்களிடத்தில் மலேரியா கண்டறியப்பட்டு வருகிறது.

2025ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 321 மலேரியா தொற்றாளர்களில் 203 பேர் “உள் நுழைந்தவர்கள்” (IMPORTED CASES).

தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்தும் வசித்தும் வருகிறார்கள். இந்தத் தொழிலாளிகள் அனைவரும் சுழற்சி புலம்பெயர்தல் முறையில் (CIRCULAR MIGRATION) பணிபுரிகின்றனர். கட்டிடம் கட்டுதல், உற்பத்தித் தொழிற்சாலைகள், உணவகங்கள் ஆகியவற்றில் சில காலம் பணிபுரிந்துவிட்டு, மீண்டும் சில காலம் அவர்கள் மாநிலத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் உள் நுழைகிறார்கள். எனவே, இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தொற்றுப் பரவல் இடம் மாற வாய்ப்பு அதிகம் உண்டாகிறது.

ஃபால்சிபாரம் தொற்று அடைந்த நபர்கள் நமது மாநிலத்திற்குள் நுழைந்தால், அந்தத் தொற்றைப் பரப்புவதற்குத் தேவையான அனாஃபிலஸ் கொசு நம் மாநிலத்தில் உள்ளதா?

ஆம்…

நமது மாநிலத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மூடப்படாத மாடித் தண்ணீர் தொட்டிகள், கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் கலன்கள் ஆகியவற்றில் அனாஃபிலஸ் ஸ்டீபன்சி (Anopheles stephensi) வகையும், ஊரகப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், பாசனக் கால்வாய்கள், குட்டைகள், குளங்களில் அனாஃபிலஸ் க்யூலிசிஃபேசிஸ் (Anopheles culicifacies) வகையும் அதிகமாகக் காணப்படுகின்றன.

தற்போது சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் நிலவும் வறட்சியான சூழ்நிலையினால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, நகர்ப்புறங்களில் தண்ணீரைத் கீழ்நிலைத் தொட்டிகளில் அதிகம் சேமிக்கும் நிலையும், பெரிய கலன்களில் சேமிக்கும் நிலையும் இருக்கும். இதன் பொருட்டுப் பெருநகரங்கள் / மாநகரங்களில் கொசுவினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகலாம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

  • ஜார்கண்ட் உள்ளிட்ட வடமத்திய / வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரும் சகோதர சகோதரிகளுக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அது மலேரியாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வர வேண்டும்.
  • குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல், கடுமையான தலைவலி என்று யாருக்கு ஏற்பட்டாலும் உடனடியாக மலேரியா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • நமது வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி இருப்பதை அனுமதிக்கக் கூடாது. மேல்நிலை & கீழ்நிலை நீர்த் தொட்டிகளை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
  • ஊரகப் பகுதிகளில், புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்க்கலாம். இவை கொசுக்களின் புழுக்களைச் சாப்பிட்டு வாழ்பவை.
  • மலேரியா தொற்று ஏற்பட்ட வீடுகளில் கொசுக்கொல்லி மருந்துகளைப் புகையாக்கி அடிக்க வேண்டும்.
  • கொசு நம்மையும் குழந்தைகளையும் கடிக்காதவாறு வீட்டில் கொசு வலைகள் கொண்டு சாளரங்களை அடைக்க வேண்டும். குழந்தைகளுக்கு முழுக்கைச் சட்டைகள் அணிவிக்க வேண்டும். பெரியவர்கள் கொசுக்கடி தவிர்க்கும் களிம்புகளைப் பூசலாம்.
  • அதீத குளிர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் உடனடியாக மலேரியா கண்டறியப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
  • மலேரியா பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்குள், மாவட்டங்களுக்குள் செல்வதற்கு முன்பிருந்து உட்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மாத்திரைகளை மருத்துவர் அறிவுரையுடன் உட்கொண்டு அங்கு சென்று பணியாற்றலாம்.

ஒருகாலத்தில் நம்மை அச்சுறுத்திய மலேரியா, இப்போது நமது மாநிலத்தில் அரிதாகவே கண்டறியப்படுகிறது. ஆயினும், வெளிமாநிலங்களிலிருந்து உள் நுழையும் தொற்று வழியாக மீண்டும் அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தலாம் என்பதாலும், நமது மாநிலத்தில் அதிகமான புலம்பெயர் சகோதர சகோதரிகள் பணிபுரிவதாலும் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

(தொடரும்)

Author

Related posts

அறிவெழுச்சி: 1

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

தின்று செரித்தாலும் தீது