திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

This entry is part 13 of 13 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

அந்த வீடு

தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளின் நிரபராதியான சிரிப்போடு சேர்த்து,
மரணப் படுக்கையில் முதியவர்களின் துயரக் கதறலையும் பார்த்தது அந்த வீடு.
ஆனந்தக் கண்ணீரைக் கண்டு துள்ளிக் குதித்தது போலவே,
கண்ணீர்த் துளிகளுக்கும் எதிர்ப்புடன் நின்றது அந்த வீடு.

திடீரென ஒருநாள்
உள்கலவரப் பூசலில் உறவுகளெல்லாம் அடித்துக்கொள்வதைப் பார்த்து அப்படியே இருந்துபோனது;
அனாதையாக மீந்திருந்தது…

ரொம்ப நாள்களுக்குப் பிறகு
அந்த வீட்டைப் பார்த்து வரலாமென்று சென்றேன்.
தெருமுனை மூலைத் திருப்பத்திலிருந்தே
அந்த வீட்டின் சாவு வாசனை அடிக்கின்றது.
வீட்டின் முன்பு வேப்பமரம் பசுமையான பழ நினைவுகளை உதிர்த்துவிட்டு வெறும் தண்டாக நின்றது,
அப்படியே அந்த வீட்டின் நினைவு வரும்போதெல்லாம்
ஈரப்பசையில்லா ஞாபகங்கள் கண்ணிலிருந்து உதிர்வதைப் போலவே…

உள்ளே,
மௌனத்துக்குத் தூக்குப் போட்ட அறைகளைப் பார்த்துச்
சுவர்கள் நெஞ்சை அடித்துக் கொள்கின்றன.
தாத்தா படுத்திருந்த பழைய கயிற்றுக்கட்டில்
கால் முறிந்து மூலையில் முனகிக் கொண்டு கிடந்தது.
சுவரில் ஆசையாகத் தொங்கவிடப்பட்ட “குடும்பத்தின் கடைசிச் சிரிப்பு” கூடக்
கீழே விழுந்து நொறுங்கிப் போயிருந்தது.

நாங்கள் அந்த வீட்டை விட்டுத் தொலைத்தோம்…
ஆற்றைக் கடந்ததும் தெப்பத்தைத் தூக்கி எறிந்தது போல,
கரையை அடைந்ததும் துடுப்பை உடைத்தது போல,
முதிய தாயை மகன்கள் கைவிட்டது போல,
நாங்கள் அந்த வீட்டை விட்டுத் தொலைத்தோம்.
இப்போது அந்த வீடு இல்லை…
எங்களைப் போலவே,
மழை ஜோராகப் பெய்கையில்
உடல் முழுக்க ஓட்டை உடைசல்கள் விழுந்து
அந்த வீடு எப்போதோ இறந்து போயிருந்தது.

உயிரற்ற உடலாய் மாறிப்போன அந்த வீட்டைப் பார்க்கையில்
எனக்குத் தோன்றியது…
“புதிதாகக் கட்டிய இரண்டடுக்கு மாடி வீடு அந்தஸ்தை உயர்த்தியது;
மனசாந்தி மட்டும் அந்த வீட்டோடே சேர்ந்து மரணித்தது…”

Series Navigation<< திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

ராம நாமமொரு வேதமே

ஞான நூல்கள் – 12 & 13