ஐசிஎம்ஆர் ஆய்வு எழுப்பிய சந்தேகமும் அறிவியல் உண்மையும்
சமீபத்தில் அமெரிக்க இதய நலச் சங்கத்தின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வு இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. அந்த ஆய்வில், இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு சமையல் எண்ணெய்களை நிலக் கடலை எண்ணெயுடன் ஒப்பிட்டு அதில் நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை ஒப்பீட்டளவில் நிலக்கடலை எண்ணெயை விட மூன்று மடங்கு எல்.டி.எல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலை உயர்த்துவதாக முடிவு பகிரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேங்காய் எண்ணெய், நெய் உபயோகிப்பாளர்களுக்கு இதய நோய் அதிகரிக்கும் என்பது போல செய்தி பரவி இருக்கிறது. இதன்வழி, நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உண்பவர்களிடையே சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை வழியாக, அந்த ஆய்வு கூற வரும் செய்தி என்ன? என்பதை அறிவியல் ரீதியாக பகுத்தாராய்வோம்.
ஆய்வின் பின்னணியும் அதில் உள்ள அளவீட்டுச் சிக்கல்களும்
ஆய்வில் 18,090 பேர் பங்குகொண்டுள்ளனர். ஆய்வில் பங்குகொண்டோரின் சராசரி வயது 42 ஆகும். இதில் 51% பேர் பெண்கள். ஐசிஎம்ஆர்- இண்டியாப் (ICMR- INDIAB) பங்களிப்பின் படி மருத்துவக் குழு இந்த ஆய்வைச் செய்துள்ளது. ஆய்வில் பங்குகொண்டோரிடம், அவர்களின் உணவு குறித்த 14 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக எந்த சமையல் எண்ணெய்களை அதிகம் உபயோகப்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. இவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் உட்கொள்ளல், மாமிச உட்கொள்ளல், உப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் குறித்த கேள்விகளும் இதில் அடக்கம்.
பொதுவாக, கேள்விகள் கேட்டு அதை பங்கேற்பாளர்களை நிரப்பச் சொல்லும் போது, அவர்கள் உணவில் சாப்பிடும் விஷயங்களை சரியாக நினைவுபடுத்தி துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல் இருக்கும். இதை “நினைவுகூறுதல் சார்பு நிலை” (RECALL BIAS) என்கிறோம். அதே போன்று எண்ணெய் உபயோகிப்பின் சரியான அளவை அவர்களால் பகுத்தறிந்து துல்லியமாகக் கூறியிருக்க முடியும் என்பதையும் கூற இயலாது. மனக்கணக்கில் அவர்கள் கூறும் விஷயங்களை துல்லியமான ஒன்று என்று ஏற்கவும் இயலாது. இதை “அளவிடுதலில் ஏற்படும் தவறு” (QUANTIFICATION ERROR) என்கிறோம்.
ஆய்வு முறை மற்றும் முடிவுகள் பற்றிய தவறான புரிதல்கள்
இந்த ஆய்வு என்பது “குறுக்கு வெட்டு வகை” (CROSS SECTIONAL STUDY) ஆய்வாகும். இதில் பங்கேற்பாளர்களிடம் அவர்கள் உபயோகிக்கும் எண்ணெய்கள் யாவை மற்றும் அவர்களுக்கு இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் பருமன் அளவுகளை ஆராய்ந்து முடிவாகக் கூறுகிறது. இதன் வழியாக வரும் முடிவுகளை வைத்து நெய் மற்றும் தேங்காய் எண்ணெயால் மட்டுமே எல்.டி.எல் கொலஸ்ட்ரால் ஏறுகிறது என்று அருதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. மருத்துவ ஆய்வியல் ரீதியாக, இரண்டு வெவ்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் ஒருவரிடம் வெளிப்படுவதால் மட்டுமே, இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்று கூற இயலாது. அதாவது, நெய்/ தேங்காய் எண்ணெய் உபயோகிப்பாளர்களிடையே எல்.டி.எல் அதிகமாக உள்ளது என்று தான் கூற முடியுமே அன்றி, நெய்/ தேங்காய் எண்ணெய் தான் அந்த எல்.டி.எல் உயர்வுக்குக் காரணம் என்று கூற இயலாது.
இந்த ஆய்வின் முடிவின்படி, இந்தியாவின் வடக்கு, வட கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கடுகு எண்ணெய் (Mustard Oil) உபயோகப்படுத்தப்படுகிறது. மேற்கு மாநிலங்களில் நிலக்கடலை எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. தென் மாநிலங்களில், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை உபயோகப்படுத்தப்படுகின்றன. கேரளாவில் பிரதானமாக தேங்காய் எண்ணெயும், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தின் மையப்பகுதிகளில், மிசோரமிலும் சோயா எண்ணெயும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதில் பங்கேற்றவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அவற்றுடன் அவர்களுக்கு இருக்கும் உடல் பருமன் அளவுகளும் சோதிக்கப்பட்டுள்ளன.
இதில், கடலை எண்ணெய் உபயோகிப்பாளர்களை விடவும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பாளர்களுக்கு எல்.டி.எல் கொலஸ்ட்ரால் 2.89 என்ற ஆட்ஸ் ரேஷியோ (ODDS RATIO) – முரண்பாடுகள் விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. நெய் / வெண்ணெய் உபயோகிப்பாளர்களிடையே ODDS RATIO 3.45 என்ற அளவில் கூடுகிறது என்று ஆய்வு கூறுகிறது. இதன்வழியாக, நெய், தேங்காய் எண்ணெய் உபயோகிப்பாளர்களிடையே எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மூன்று மடங்கு கூடுகிறது என்று பொருள் கொள்ள இயலாது. ஆனால் பொதுவெளியில் மீடியாக்களில், நெய் / தேங்காய் எண்ணெய் உபயோகிப்பாளர்களில் மூன்று மடங்கு இதய நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று செய்தி வெளியிடுவது அபத்தமாகும். இந்த ஆய்வு முடிவுகளை அவ்வாறு நோக்க இயலாது.
இன்னும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடையே, சமையல் எண்ணெய் உபயோகிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பங்கேற்றோர் உட்கொண்ட உணவு முறை என்ன? அதில் மாவுச்சத்து எவ்வளவு? அவர்கள் செய்த உடற்பயிற்சி என்ன? என்றெல்லாம் பார்த்து அவற்றின் பாதிப்புகளைக் களையாமல் நேரடியாக சமையல் எண்ணெய்களுக்கு மட்டுமே எல்.டி.எல் கொலஸ்ட்ராலை ஏற்றும் தன்மை உள்ளது என்பது போல முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.
எல்.டி.எல் கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்
இதற்கடுத்த படியாக நாம் பார்க்க வேண்டியது, எல்.டி.எல் (Low Density Lipo Proteins) கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்திருப்பது மட்டுமே வைத்து ஒருவருக்கு இதய நோய் கட்டாயம் ஏற்படும் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாது. எல்.டி.எல் கொலஸ்ட்ராலைப் பொருத்தவரை, ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சி (INFLAMMATION) காரணமாக, இரத்த நாளங்களின் உட்புற சுவரில் காயங்கள் ஏற்படுகின்றன; இந்தக் காயங்களின் மீது எல்.டி.எல் கொலஸ்ட்ரால் காயங்களை ஆற்றுவது போல அதன் மீது பூச்சு வேலை செய்கிறது.
ஆனால் தொடர்ந்து நமது இரத்தத்தில் இன்சுலின் அதிக அளவில் இருக்கும் போது, இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் ஏற்பட்டு, இரத்த நாளங்களில் உள்காயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதன் விளைவாக, எல்.டி.எல் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் அடைந்து அளவில் சிறியதாகவும் அடர்த்தி மிகுந்ததாகவும் (SMALL DENSE LDL) மாறிவிடுகிறது. இதன் காரணமாக, இரத்த நாளங்களில் மெல்ல மெல்ல அடைப்பை அதிகரித்து, இரத்த நாள கொழுப்பு அடைப்பு நோயை உருவாக்குகிறது.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவில் அதிகரிப்பதற்கும், கூடவே எல்.டி.எல் அதன் அளவில் சிறியதாகவும் அடர்த்தியாகவும் மாறுவதற்கும் நமது உடலின் இன்சுலின் சார்ந்த வளர்சிதை மாற்றக் கோளாறு தான் பிரதான காரணமாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும் நமது இரத்தத்தில் கண்டறியப்படும் கொலஸ்ட்ராலுக்கும் நேரடி திட்டவட்டமான தொடர்பை இதுவரை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்க இயலவில்லை.
நிறைவுற்ற கொழுப்புகளின் நன்மைகள்
நெய், தேங்காய் எண்ணெய், வெண்ணெய் ஆகியவற்றை அவற்றில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புக்காக மட்டுமே தவிர்க்கக் கூறுவது என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய அறிவுரையாகும். காரணம் மேற்கூறிய எண்ணெய்களில், உடலுக்கு நன்மை செய்யும் மீடியம் செயின் ட்ரைகிளசரைடுகள் உள்ளன. மேலும் அவற்றின் வெப்பம் தாங்கும் அளவு (SMOKING POINT) அதிகம் என்பதால் இவற்றைப் பொரிக்கப் பயன்படுத்தும் போது, ஆபத்தான அக்ரிலமைடுகள், லிபிட் பெராக்சைடுகள் குறைவாகவே வெளிப்படுகின்றன. மேலும், நெய், தேங்காய் எண்ணெய், வெண்ணெய் ஆகியவற்றில் இருக்கும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை உடலால் நன்றாக கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.
கடலை எண்ணெய்யில் உள்ள சாத்தியமான அபாயங்கள்
நிலக்கடலை எண்ணெயை பொது விநியோக திட்டத்தில் வழங்க வேண்டும் என்று ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. எனினும் நிலக்கடலை எண்ணெயைப் பொருத்தவரை, ஒமேகா 3 அளவுகள் மிக மிகக் குறைவு; ஒமேகா 6 அளவுகள் அதிகம். இவ்வாறு ஒமேகா 6 அளவுகள் அதிகமாகவும் ஒமேகா 3 அளவுகள் குறைவாகவும் இருக்கும் எண்ணெய்களை உபயோகிக்கும் போது அதனால் இதய நலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
கூடவே, நிலக்கடலையில் அஃபலாடாக்சின் எனும் பூஞ்சைத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நச்சுப் பொருளை அதிகம் உண்ணும் போது கல்லீரல் பாதிப்பு ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடலை எண்ணெயை வறுப்பதற்கு உபயோகிக்கும் போது, அதில் உள்ள கொழுப்புகள் உடைகின்றன. கூடவே நச்சுப் பொருட்களான பெராக்சைடுகள், ஆல்டிஹைடுகள் ஆகியவை ஒப்பீட்டளவில் சற்று அதிகம் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இவையன்றி, நம் மக்களிடையே சிலருக்கு நிலக்கடலை சார்ந்த ஒவ்வாமை உள்ளது; இதற்குக் காரணமாக நிலக்கடலையில் உள்ள Ara h1, Ara h2 ஆகிய புரதங்கள் காரணமாக அமைகின்றன. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறந்த வாழ்வியல் வழிமுறைகள் மற்றும் முடிவுரை
இறுதியாக, நமது பார்வையை, வெறுமனே கொலஸ்ட்ராலைப் பார்த்து மட்டும் அச்சப்படுவதை விட்டு, நமது வாழ்வியலைச் சீர் செய்வதன் மூலம் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸை சரி செய்து அதன் மூலம் இரத்த நாள அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். நமது உணவில் மாவுச்சத்து நுகர்வைக் குறைக்கலாம்; அதிலும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் நுகர்வைக் குறைப்பது சிறந்தது. சர்க்கரை உள்ளிட்ட இனிப்பு சுவை கொண்ட உணவுகளின் உட்கொள்ளலைத் தவிர்க்கலாம்.
எண்ணெயைப் பொருத்தவரை, தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை கலவையாகப் பயன்படுத்தலாம். எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. சமையல் எண்ணெய்களை அளவுடன் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது சிறந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைக்க வேண்டும். உணவைப் பொரிக்கப் பயன்படும் எண்ணெயை மறு உபயோகம் செய்வதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது.
தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றை உபயோகிப்பவர்கள் மிகவும் குறைவு; அப்படியே உபயோகித்தாலும் நுகரும் அளவும் குறைவே. எனினும், இது போன்ற வீண் அச்சங்கள் பரப்பப்படும் போது அவர்கள் இன்னும் மிரட்சிக்கு உள்ளாவது இயற்கை. தேவையான அளவில் பல்வேறு எண்ணெய்களைக் கலந்து உபயோகிக்கும் போது உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவே. எனவே, அச்சமின்றி குழப்பமின்றித் தொடர்ந்து தேங்காய்/ வெண்ணெய்/ நெய் உள்ளிட்ட எண்ணெய்களை உபயோகிக்கலாம் என்றுரைத்து இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.