இரண்டு ஈக்கள் — சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஈக்கள் சினம் கொண்ட உயிர்த்துளிகள்
அவர்களுக்கு ஏன் இத்தனை கோபம்?
அவர்களுக்கு இன்னும் ஏதோ
வேண்டும் போலிருக்கிறது
ஈக்களாக இருப்பதற்காகவே அவர்கள்
ஆத்திரப்படுவது போலிருக்கிறது

அது என் தவறல்ல
நான் அவர்களுடன்
அறையில் அமர்ந்திருக்கிறேன்
அவர்கள் தம் வேதனையால்
என்னை வெறுப்பேற்றுகின்றனர்
எங்கிருந்தோ விடுபட்ட ஆன்மாவின்
துண்டுகள் போல அலைகின்றனர்

நான் செய்தித்தாளை
படிக்க முயல்கிறேன்
ஆனால் அவர்கள் என்னை
விடுவதாக இல்லை

ஒருவன் சுவரின் மேல்பகுதியில்
ஒரு பரிதாபமான ரீங்காரத்தை
என் தலைமேல் வீசியபடி
அரை வட்டங்களாகச் சுற்றுகிறான்

மற்றவன், சற்று சிறியவன்
அருகிலேயே இருந்து
என் கையை வம்புக்கு இழுக்கிறான்
எதுவும் பேசாமல்
மேலெழுந்து, கீழிறங்கி
அருகில் ஊர்ந்து வருகிறான்

எந்தக் கடவுள்
இந்தத் தொலைந்துபோனவற்றை
என் மீது சுமத்துகிறான்?

பிற மனிதர்கள்
பேரரசின் ஆணைகளாலும்
துயரமிகு காதலினாலும்
துன்புறுகிறார்கள்
நானோ
பூச்சிகளால் துன்புறுகிறேன்

நான் அந்தச் சிறிய ஈயை
விரட்டுவதற்குக் கையசைக்கிறேன்
அது அவனுடைய
சவால் விடும் எண்ணத்தை மேலும்
தூண்டிவிடுவது போலிருக்கிறது
இன்னும் வேகமாய்
இன்னும் அருகில் சுழல்கிறான்
ஒரு ஈயின் ரீங்காரத்தையும்
எழுப்புகிறான்

மேலே இருந்தவன்
இந்தப் புதிய சுழற்சியின்
உணர்வைப் பிடித்துக்கொண்டு
உற்சாகமடைந்து
தன் பறத்தலை வேகப்படுத்துகிறான்—
திடீரென்று கீழிறங்கி
சத்தம் எழுப்பியபடி
இருவரும் இணைந்து
என் கையைச் சுற்றி வருகின்றனர்

விளக்குக் குடையின்
அடிப்பாகத்தைத் தட்டி
முழங்கிக் கொண்டே இருக்கின்றனர்—
இறுதியில் என்னுள் இருக்கும்
மனிதத்தன்மையின் ஏதோ ஒன்று
இனியும் இந்தப் புனிதக்கேட்டை
பொறுக்க முடியாது என்கிற வரையில்

சுருட்டப்பட்ட செய்தித்தாளால்
அடிக்கிறேன்—
தவறுகிறது
அடிக்கிறேன்
அடிக்கிறேன்

அவர்கள் இசைவிழந்து பிரிகின்றனர்—
அவர்களுக்கிடையே
பரிமாறிக் கொள்ளப்பட்ட
ஏதோ ஒரு செய்தி
தொலைந்துவிட்டது போல

முதலில் பெரியவன் சிக்குகிறான்
முதுகோடு கிடந்தபடி
அவன் தன் கால்களை
சீறும் பெண்ணைப் போல
வெறித்தனமாக உதைக்கிறான்

மீண்டும்
சுருட்டிய தாளை இறக்குகிறேன்
அருவருப்பான ஈயின் கூழாக
அவன் மாறுகிறான்

சிறியவன்
இப்போது உயரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறான்
அமைதியாகவும் வேகமாகவும்
கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாமல்
அவன் மீண்டும் என் கைக்கு
அருகில் வரவில்லை
அவன் அடக்கப்பட்டுவிட்டான்
அணுக முடியாதவனாகிவிட்டான்
நான் அவனை
அப்படியே விடுகிறேன்
அவனும் என்னை
அப்படியே விடுகிறான்

செய்தித்தாள் நிச்சயமாக
பாழாகிவிட்டது

ஏதோ நடந்துவிட்டது
ஏதோ ஒன்று என் நாளை
கறைபடுத்திவிட்டது
சில நேரங்களில் நாள் கறைபட
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ
தேவைப்படுவதில்லை
உயிருள்ள ஏதோ ஒன்று போதுமானது

நான் அமர்ந்து
அந்தச் சிறிய ஈயைப் பார்க்கிறேன்
காற்றிலும் வாழ்விலும்
நாங்கள் இருவரும்
ஒருவரோடு ஒருவர்
நெய்யப்பட்டிருக்கிறோம்
எங்கள் இருவருக்குமே
நேரம் கடந்துவிட்டது

*

மூலம்:
“Two Flies”
By Charles Bukowski
*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.

*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகளின் மொழியாக்கம்

அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டைப் படங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

மொட்டவிழ்வு..

ஞான நூல்கள் – 35 & 36

பாகோஸ் என்கிற நபும்சகன் – 15