சுழலும் பந்து மையமான ஆட்டம்
அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!
தேச எல்லைகள் கடந்து நிற்கும்
விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்!
வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமை
சடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!
இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமை
தலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை!
சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்
வில் விடுத்த கணையின் வீரம்!
வலிமையான கால்கள் செய்யும் ஜாலம்
வலைக்குள் வெற்றிகளைக் குவித்திடும் மாயம்!
கரும்பாறை உடல் கொண்ட வீரர்கள்
களம் கண்டுவிட்டால் ஓயாத சூரர்கள்!
ஆயிரமாய் இலட்சங்களாய் இரசிகர்கள்
அரங்கம் அதிரும் உற்சாகப் பிரியர்கள்!
தோற்றாலும் வென்றாலும் உணர்வால் குலுங்குவர்
இதயத்தில் வீரர்களைத் தாங்கிச் சுமப்பர்!
விளையாட்டுகளின் மகுடமிந்தப் போட்டி என்போர்
விட்டுக் கொடுக்காத பந்தத்தில் இணைந்தோர்
திசை எட்டும் இணைக்கின்ற பாலம்
உலகத் திருவிழாவான கால்பந்தின் கோலம்!
நூறாண்டு வரலாறு நிழலாடும் நெஞ்சில்
நீங்காமல் நிலைத்தது நாயகர்கள் மாண்பில்!