Home சிறப்பிதழ்கள்நல்லாச்சி – 29
This entry is part 29 of 32 in the series நல்லாச்சி

தோல்பாவைக்கூத்து தெருக்கூத்து
இரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்கு
ஊர்த்திருவிழாவை முன்னிட்டு
தெய்வங்களும் கொஞ்சம்
உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன

நல்லாச்சியும் பேத்தியும்
தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்
அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்
அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்
நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்
கூத்துவடிவில் பார்த்த பேத்தி
ராஜாக்களையும் ராணிகளையும்
பளபளக்கும் அரசவாழ்வையும்
நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்
இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வது
அவர்கள் உலகம் என்பதை மறுக்கிறாள்

ஒரு பகலில் கல்லடுப்பில் சமைத்தபின்
அம்மிதேடி வருகிறாள் மகாராஜாவின் மனைவி
நல்லாச்சி வீட்டுக்கு
கைச்சொடுக்கில் அடிபணியும் ஏவல்பெண்கள்
கொண்ட ராணி
ஒட்டிய கன்னங்களுடன்
அள்ளிச்சொருகிய புடவையும் கூந்தலுமாய்
நெஞ்சுவலிக்க அம்மியரைப்பதை
அதிர்ச்சி விலகாமல் பார்க்கிறாள் பேத்தி.

Series Navigation<< நல்லாச்சி – 28நல்லாச்சி – 30 >>

Author

You may also like

Leave a Comment