போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள்.
கடல் கடன்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தற்காலத்தில் Corporate Finance எனப்படும் பெருநிறுவன நிதியைப் புரிந்துகொண்டாலே போதும். பெருநிறுவன நிதி என்பது பெரிய அளவிலான வியாபாரமோ அல்லது தொழிற்சாலையோ ஆரம்பிக்கும் பொழுது, அடமானமாக எதுவும் வாங்காமல் நிறுவனத்தின் நிதி அறிக்கை, நிறுவனத்தின் கடன் தகுதி, நிறுவனத்தில் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் மற்றும் பல விஷயங்களை அடிப்படையாக வைத்துப் பெருநிறுவன நிதி வழங்கப்படும்.
அதே போலத்தான் கடல் கடன்களும்.
எல்லாம் சரி, அதென்ன கடல் கடன்கள்?
கடல் கடன்கள் என்பது பண்டைய காலத்தில் கடல் வணிகத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறையாகும். கடல் வழியாக வணிகத்தில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை நினைத்து வணிகம் செய்யத் தயங்கிய வணிகர்களுக்குத் தேவையான முதலீட்டைக் கடனாகக் கொடுத்தனர். மேலும், கடன் கொடுப்பவர்களுக்கு வட்டிக்கு வட்டி, கொண்டு வரும் பொருட்களில் பங்கு, லாபத்தில் பங்கு என லாபம் அதிகமாக இருந்ததினால் கடன் கொடுப்பதில் தயங்காமல் இயங்கினார்கள்.
கடல் பயணம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே வணிகர்கள் அசல் தொகையுடன் வட்டியையும் லாபத்தில் ஒரு பங்கையும் சேர்த்துத் திருப்பித் கொடுக்க வேண்டும். புயல், கப்பல் விபத்து, கடற்கொள்ளையர் தாக்குதல் அல்லது பிற இயற்கை பேரிடர்களால் கப்பல் மற்றும் சரக்கு முழுமையாக அழிந்துவிட்டால், அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்காது. அந்த நஷ்டத்தை வணிகரின் அடுத்த வணிகப் பயணத்தில் வரும் லாபத்தில் வசூலித்துக் கொள்வார்கள். இதனாலேயே இதிலிருந்த அபாயத்தைக் கடன் கொடுப்பவரும் ஒரு அளவிற்கு ஏற்றுக்கொண்டார்.
இந்த முறை பண்டைய மெசொப்பொத்தேமியா மற்றும் பாபிலோனிய நாகரிக காலத்திலேயே தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்னர் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் இதனை மேலும் மேம்படுத்தினர். இடைக்காலத்தில் இத்தாலியின் வெனிஸ், ஜெனோவா, பிசா போன்ற கடல் வணிக நகரங்கள் உலக வர்த்தக மையங்களாக வளர்ந்தபோது, கடல் கடன்களின் பயன்பாடும் அதிகரித்தது. கிழக்கு நாடுகளிலிருந்து மசாலா பொருட்கள், பட்டு, வாசனை பொருட்கள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்களை ஐரோப்பாவிற்குக்கொண்டு வர இக்கடன் முறை முக்கிய பங்கு வகித்தது. மறைமுகமாக இது பல வணிகப் பாதைகளை உருவாக்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.
கடல் கடன்கள் வணிக வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், சில குறைகளும் இருக்கத்தான் செய்தன. கடல் பயணத்தில் அபாயம் அதிகமாக இருந்ததால் கடன் வழங்குபவர்கள் அதிக வட்டியை வசூலித்தனர். சில நேரங்களில் வணிகர்களும் கப்பல் உரிமையாளர்களும் திட்டமிட்டுக் கப்பலைச் சேதப்படுத்தி அல்லது மூழ்கடித்துக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியும் செய்துள்ளார்கள். இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்த பல அரசுகள் மற்றும் வணிக அமைப்புகள் புதிய சட்டங்களை இயற்றின.
காலப்போக்கில் கடல் பயண அபாயத்தைக் கடன் மூலம் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தனியாகக் காப்பீடு செய்யும் முறை உருவானது. இதுவே பின்னர் நவீன கடல் காப்பீட்டின் அடித்தளமாக அமைந்தது. கடல் காப்பீடு புதிய கடல் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையை நேரடியாக உருவாக்கவில்லை. ஆனால், அந்தப் புதிய கடல் வழிகளைத் தேடும் பயணங்களுக்கு நிதி ஆதரவை அதிகரித்து, அவற்றைப் பொருளாதார ரீதியாகச் சாத்தியமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது.
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், பட்டு மற்றும் பிற ஆடம்பர பொருட்களுக்கு மிகுந்த தேவை இருந்தது. இப்பொருட்கள் பெரும்பாலும் ஆசியாவிலிருந்து வந்ததால், நேரடியாக ஆசியாவை அடையும் புதிய கடல் வழிகளைக் கண்டுபிடிக்க ஐரோப்பிய வணிகர்களும் அரசர்களும் ஆர்வம் காட்டினர். அந்தக் காலத்தில் கடல் பயணங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தன. புயல்கள், கடற்கொள்ளையர்கள், கப்பல் விபத்துகள் மற்றும் பிற அபாயங்களால் கப்பல்களும் சரக்குகளும் முழுமையாக இழக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.
கடல் காப்பீடு அறிமுகமான பிறகு, இந்த அபாயங்களில் ஒரு பகுதியைக் காப்பீட்டாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனால் கப்பல் அல்லது சரக்கு இழந்தாலும் வணிகர்களுக்கு முழுமையான பொருளாதார அழிவு ஏற்படாமல் பாதுகாப்பு கிடைத்தது. இதன் விளைவாக முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் நீண்ட தூரக் கடல் பயணங்களில் முதலீடு செய்ய அதிக விருப்பம் காட்டினர். தொடர்ந்து பல கடல் ஆய்வுப் பயணங்களுக்கு நிதி கிடைக்கத் தொடங்கியது.
புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அவற்றின் மூலம் தொடர்ந்து வணிகம் செய்வதற்குப் பாரம்பர்ய கடல் காப்பீடு முக்கிய ஆதரவாக இருந்தது. இதனால் சர்வதேச கடல் வணிகம் வேகமாக வளர்ந்தது; பின்னர் உலகளாவிய வர்த்தக அமைப்பு உருவாவதற்கும் இது உதவியது. முக்கியமாக இதைக் காப்பீட்டு நிறுவனங்களும் ஊக்குவிக்கவே செய்தன. ஏனென்றால், அதிகமானோர் காப்பீடு எடுத்தால் அவர்களுக்கு லாபம்தானே! அதனால் புதிய கடல் வணிகப் பாதைகளைக் கண்டுபிடிப்பதற்குக் காப்பீட்டு நிறுவன முதலாளிகள் ஆர்வம் காட்டினார்கள். கிறிஸ்டோபர் கொலம்பஸ் போன்றவர்கள் காப்பீடு செய்துகொள்ளாமல், அதிகார வர்க்கத்தினர் மற்றும் அரசர்கள் ஆகியோர் கொடுத்த நிதியை வைத்தே புதிய கடல் வணிகப் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கிளம்பினார்கள்.
புதிய கடல் பாதைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையை உருவாக்கியது எதுவென்று பார்த்தால், மசாலா பொருட்கள் மற்றும் கிழக்கத்திய நாடுகள் மற்றும் இந்திய நிலப்பரப்பைக் குறித்து அரேபியர்கள் உருவாக்கி வைத்திருந்த கதைகள் ஏற்படுத்திய பொருளாதார விருப்பமே ஆகும். அந்தத் தேவையை நிறைவேற்றும் கடல் ஆய்வுப் பயணங்கள் மற்றும் வணிக முயற்சிகள் நிதி ரீதியாக வெற்றிகரமாக நடைபெறக் கடல் காப்பீடு முக்கியமான ஆதரவாக இருந்தது.
(தொடரும்)