Home இதழ்கள்இதழ் 13தமிழே அமிழ்தே – 18
This entry is part 18 of 21 in the series தமிழே அமிழ்தே

கட்டளைக் கலித்துறை
தமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு அது பற்றி வினவினேன். அதுதான் கட்டளைக் கலித்துறை பற்றிய முதல் அறிமுகம் எனக்கு.

கட்டளை என்றால் ஒழுங்கு / கணக்கு என்ற பொருளில் அடிக்கு இத்தனை எழுத்துகள் என்று எண்ணிப் பாடப்படுவது ஆகும்.

ஒற்றுகள் நீங்கலாக நேரசையில் தொடங்கினால் ஓர் அடிக்கு பதினாறு எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் பதினேழு எழுத்துகளும் வர வேண்டும். வெண்பாவைப் போல அடிகளுக்குள் வெண்டளை பயில வேண்டும் எனினும், ஓரடியின் கடைசிச் சீருக்கும் அடுத்த அடியின் முதலடிக்கும் வெண்டளை வேண்டுவதில்லை. வெண்டளை பயின்று வருவதால் இயல்பாகவே செப்பலோசை அமைந்துவிடும்.

முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஒன்றி வர வேண்டும். ஐந்தாம் சீர் விளங்காய் தான் கட்டாயம் வரவேண்டும். அடிகள் தோறும் எதுகை அமைய வேண்டும். இறுதிச் சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

இந்த விதிகளின் படி வெண்டளை பிறழாமல் இருந்தாலே, எழுத்தெண்ண வேண்டியிராது, சரியாக இருக்கும் என்பர்.

கட்டளைக் கலித்துறையில் மிகுதியும் பக்திப் பாடல்களே காணப்படுகின்றன. இதை முதலில் தொடங்கியவர் மாணிக்கவாசகர் என்றும் காரைக்கால் அம்மையார் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

பாவேந்தர் பாரதிதாசனாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல் ஒன்று சான்றுக்குக் கீழே உள்ளது.

தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகுவண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற தால்பெற்ற தேயிந்த வையகமே.

என் பாடல்கள்:

வானுடன் ஏனைய பூதமும் வாய்த்திடும் வாழ்வமைப்பில்
மானுடம் ஓங்கிட மாண்பாய்ப் பொறுப்புகள் மாந்தருக்கே
பேணிடும் அன்புடைப் பெண்ணவள் தாய்மையின் பேறமையக்
காணுமோர் இன்பக் கவிதை யெனப்படும் காட்சியதே.

காதலொரு பூதம் கருதும் கவிஞன் யானொருவன்
ஆதலின் யாரும் வினவலும் அங்கன மெங்ஙனமோ
நீதத்தில் ஐம்பூதம் நீள்புவி வாழுயிர் உய்வதற்காம்
காதலும் அவ்விதம் காணும் வகையினில் ஏற்புடனே!

நவீனமோ மரபோ மீண்டும் அடியேன் சொல்ல விழைவது, கவிதையிலோ செய்யுளிலோ அளப்பரிய இன்பம் துய்க்க வேண்டுமெனில், என்னதான் இலக்கணக் கட்டுக்குள் எழுதினாலும் வாசிப்போர் உள்ளம் மறக்கா வகையில் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற உவமமோ உருவகமோ காட்சிப்படிமமோ அமைவது சிறப்பாக இருக்கும்.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 17தமிழே அமிழ்தே – 19 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

1 comment

ஊர் நேசன் June 21, 2026 - 9:33 pm

கட்டளைக் கலித்துறை, இலக்கண நயம், கவிநயம்
மூன்றையும் கலக்கிய அழகான காக்டைல் பானம்.

மரபும், உணர்வும் இணையும் போது கவிதை உயர்ந்த பானம் அருந்திய உணர்வையும், இன்பத்தையும் தருகிறது.

Reply

Leave a Comment