உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 1 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினை
ஆறடி நிலமும் கிடைக்கவில்லை
என்னைப் புதைக்க
என் மண்ணில்

பகதூர் ஷா ஸஃபர் (1775-1862)

ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டியதற்காகவும் அதனுடன் சேர்த்து இன்னும் மூன்று குற்றங்களும் சுமத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு, 1858இல் ரங்கூனுக்கு நாடுகடத்தப்படுகிறார். அங்கு  நோய்வாய்ப்பட்டு 1862இல் மரணம் அடைகிறார். கடைசி மொகலாய மன்னரின் உடல் ரகசியமாகப் புதைக்கப்படுகிறது. எந்த இடத்தில் புதைக்கப்பட்டது என்னும் அடையாளம் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

அதற்குப் பின்னர், ஆண்டு 1991 இல் கால்வாய்க்காகப் பள்ளம் தோண்டியபோது கல்லறையும் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ஸஃபருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டது. 

தன்னைப் புதைக்க ஆறடி நிலமும் தன் மண்ணில் இல்லை என எழுதிய கவிதை காலத்தால் அழியாமல், ஒரு கவிஞனின் வாய்ச்சொல் அவன் வாழ்க்கையில் உண்மையாகி, வரலாறாகவும் ஆகி நிற்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பாரசீகமும், அரபியும், பிரிஜ்பாஷாவும், சமஸ்கிருதமும் கலந்த மொழியாக ஹிந்தவி, ஹிந்துஸ்தானி என அழைக்கப்பட்ட மொழி, பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கவிதை மொழியாக முகிழத் தொடங்கிய இம்மொழி, பின்னர் ‘உருது’ எனப் பெயர் பெற்றது. ‘ஓர்து’ என்பது துருக்கிய மொழியில் பாசறை அல்லது படை முகாம். துருக்கியப் போர் வீரர்கள் தக்காணத்தில் பாசறையில் இருக்கும்போது அவர்களுடன் உரையாடுவதற்குப் பயன்பட்டதால், அது ஓர்து => உருது. உருதுவில் இதன் ஒலிப்பு ஒவுக்கும் உவுக்கும் இடைப்பட்ட ஒலிப்பாக, உர்தூ. 

போர்வீரர்களுடன் உரையாடுவதற்குப் பயன்பட்ட மொழி என்பதால், அது தொடர்பாடலுக்கான மொழி மட்டுமல்ல. பாரசீகத்திலும் ஹிந்தவி என்னும் உருதுவிலும் கவிதைகள் இயற்றிய அமீர் குஸ்ரு வாழ்ந்த காலகட்டம் ஆண்டு 1253 – 1325. உருதுக்கவிதை வடிவங்கள் கஜலும், ருபையும், உருதுப் பாடல் வடிவம் கவ்வாலியும், அமீர் குஸ்ருவிடமிருந்து தொடங்கியவை.

தக்காணம், வங்கம், பஞ்சாப், தில்லி, லக்னௌ என இந்தியாவின் அனைத்துப் பகுதியினரும் உருது மொழியில் இலக்கியம் படைத்தனர். கபீர்தாஸின் ‘தோஹா’ எனப்படும் இரண்டடி உருதுக் கவிதைகள் தேவநாகிரி வரிவடிவில் எழுதப்பட்டன. மாநில எல்லைகளையும் மத எல்லைகளையும் கடந்து கவிதைக்கான மொழியாகப் பார்க்கப்பட்ட உருது, ஆங்கிலேயர் காலத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரிவினையை உண்டாக்கும் மொழியாகவும் கட்டமைக்கப்பட்டது. இந்துக்களுக்கு தேவநாகிரி வரிவடிவில் இந்தியும், முஸ்லிம்களுக்கு அராபிய வரிவடிவில் உருதுவும் எனக் கட்டமைக்கப்பட்டன. அந்த அரசியலையும் தாண்டி உருது அனைவருக்குமான கவிதை மொழியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டது.

இந்தியாவின் வரலாற்றில் உருதுக்கவிதைகளுக்குத் தனி இடம் உண்டு. இந்தியாவின் மூன்று பகுதிகள் உருது இலக்கிய வளர்ச்சியின் மையங்களாகச் செயல்பட்டன.   

  1. தக்காணம்
  2. தில்லி
  3. லக்னௌ

உருது மொழி இந்தியாவின் வடக்குப் பகுதியில் தோன்றினும், உருதுக்கவிதைகளின் வளர்ச்சி முதலாவதாகத் தெற்கில் தக்காணத்திலிருந்து தொடங்கியது. கவிஞர்கள் வலி தக்கனி, மொஹம்மத் கூலி குதுப் ஷா, சிராஜ் ஔரங்காபாதி, முல்லா வாஜிஹி, இவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இயற்றிய கவிதைகள் தில்லியைத் தெற்கு நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்தன. 

இரண்டாவதாக, தில்லியின் பெயர் சொல்லும் கவிஞர்களாக க்வாஜா மீர் தர்த், மீர் தாகி மீர், மீர்ஸா அசதுல்லாகான் காலிப் (காலிப்), நவாப் மீர்ஸாகான் தாக் விளங்கினர். 

மூன்றாவதாக லக்னௌவின் முக்கியமான பங்களிப்பாக உருது மொழிக்கு, ‘உருது’ என்னும் அந்தப் பெயரைச் சூட்டியவர் குலாம் ஹம்தானி முஷாஃபி. இன்ஷால்லாகான் இன்ஷா, க்வாஜா ஹைதர் அலி ஆதிஷ், என லக்னைவிக் கவிஞர்களின் பெயர்ப்பட்டியல் நீளும். 

உருதுக் கவிதை நூற்றாண்டுகள் கடந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உருதுக் கவிஞராகக் கொண்டாடப்படும் அல்லாமா இக்பாலிடம் வந்து சேர்ந்தது. அதற்குப் பின் தொடர்ந்து  ஜோஷ் மலிஹாபாதி, ஜிகர் மொராதாபாதி, ஃபைஸ் அஹமத் ஃபைஸ், கைஃபி ஆஸ்மி, ஜான் நிசார் அக்தர் என்றும், சமகாலத்தில் குல்ஸார், ஜாவீத் அக்தர் போன்ற கவிஞர்களின் சொற்களாகி வாசகர்களையும், கேட்பவர்களையும் தன்னுடைய தளத்தில் உலவவிடுகின்றது.

மொகலாயர்களின் அவையில் உருதுக்கவிதைகள் ஒலித்தன, கடைசி மொகலாய மன்னர் ஒரு கவிஞர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் உருதுக்கவிஞர்கள் இருந்தனர், இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரைப்படங்களிலும் உருதுக்கவிஞர்களின் பங்களிப்பு இருந்தது. யாப்புகளை ஒதுக்கிவிட்டு புதுக்கவிதையாகக் கவிதைகள் புறப்பட்ட காலகட்டத்தில் உருதுக்கவிதைகளும் யாப்புத் தளையைத் தகர்த்துவிட்டு ‘ஆஸாதி ஷாய்ரி’ என்னும் பெயரில் புதுக்கவிதைகளாக வெளிப்பட்டன.

ஷாய்ர் – கவிஞன், ஷாய்ரி – கவிதை, ஆஸாதி – விடுதலை.

தமிழில் யாப்பு உள்ளதைப் போல உருதுவிலும் யாப்பிலக்கணம் உண்டு. உருதுவிலும் வெவ்வேறு கவிதை வடிவங்கள் உண்டு. கஜல், ருபை (இதன் பன்மை ருபையாத்), நக்ம், கசீதா, நாத், கவ்வாலி, மஸ்னவி, மர்சியா என விரியும் வடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் அடி, சந்தம், இயைபு, பாடுபொருள் என இலக்கணம் உள்ளது. 

இரண்டடிக் கவிதைகளின் தொகுப்பு கஜல். 

நான்கடிக் கவிதைகளின் தொகுப்பு ருபையாத்.

செய்யுள் வடிவில் தொடரும் கவிதை நக்ம்.

புகழைப் பாடுவதற்கு கசீதா. 

நபிகள் நாயகத்தின் புகழைப் பாட நாத்.

இறைநேசர்களின் சன்னதியில் பாட கவ்வாலி.

நீள்கதையாடல், உரையாடல், தத்துவங்களுக்கு மஸ்னவி. 

இவற்றுள் பரவலாக அனைவராலும் விரும்பப்படும் வடிவம் கஜல். எளிமையான யாப்பில் இரண்டிரண்டு அடிகளாக எழுதப்படும் அவை  வாசகரையும் கேட்பவரையும் தன்னுடைய கருப்பொருளில் கரையச் செய்பவை. இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமல்லாமல் உருது அறிந்தவர் அனைவரையும் கஜல் வடிவம் சென்றடைந்ததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் கவியரங்கங்களும் இசைத்தட்டுகளும். சில திரைப்படங்களும் கஜல்களைத் திரைப்பாடல்களாக அமைத்து ரசிகனுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்தன, இன்றும் செய்துகொண்டிருக்கின்றன. 

கஜலின் பொதுவான யாப்பு எளிமையானது. 

(1)
இரண்டு அளவடிகள். அதாவது, இரண்டு அடிகளின் சந்தமும் ஒன்றாக இருக்கவேண்டும். 

(2)
இயைபுத்தொடை. அதாவது ஒவ்வொரு இரண்டாவது அடியின் கடைசிச் சொல்லும் ஒத்த ஓசையுடையனவாக இருத்தல் வேண்டும்.

(3)
அசைக்கணக்குக்கு எல்லையில்லை. நான்கு அசைகளிலிருந்து பதினேழு அசைகள் வரையில் ஒரு அடியில் இருக்கலாம்.

சந்தம் இருப்பதாலும், இயைபு (rhyming) கஜல்கள் பாடுவதற்கும் மனனம் செய்வதற்கும் கஜல்கள் உகந்தவை.

தலைவனும் தலைவியும் பிரிவதும் சேருவதும் தமிழில் அகத்திணையின் இரண்டு முக்கியப் பிரிவுகள். கூடல், பிரிதல் என்னும் அவ்விரண்டைப் போல் உருதுக்கவிதைகளிலும் தலைவனும் தலைவியும் கூடுவதும் பிரிவதும் இரண்டு பிரிவுகளாகக் கவிதைகளில் இடம்பெறுகின்றன. சேரும் இரவு, பிரியும் இரவு என இரவை முன்னிறுத்திப் பாடப்படுகின்றன. ஷப் என்னும் உருதுச்சொல்லின் பொருள் இரவு, வஸ்ல் – இணைதல். சேரும் இரவு ஷப்-ஏ-வஸ்ல். ஃபிராக் – பிரிதல், பிரியும் இரவு ஷப்-ஏ-ஃபிராக். கூடலும் பிரிவும் உருதுக்கவிதைகளில் பாடப்படுகையில் மேற்சொன்ன ஷப்-ஏ-வஸ்ல், ஷப்-ஏ-ஃபிராக் இவ்விரண்டு சொற்களையும் இங்கு குறிப்பிட்டுள்ள அதே ஒலிப்பில் பயன்படுத்துவது மரபு.   

நிலவுக்கும் சூரியனுக்கும் பால் வேறுபாடு தமிழில் உள்ளது. சூரியன் எப்போதும் ஆண்பாலாகவும், நிலா சிலநேரங்களில் பெண்பாலாகவும் கொள்ளப்படுகிறது. நிலம் எப்போதும் பெண்பாலாகக் கொள்ளப்படுகிறது. நிலமகள், நிலாப்பெண், சூரியன் உதித்தான் என அவற்றைக் குறிப்பாகச் சொல்லும்போது பால் வேறுபாடு காட்டுவதும், பூமி குளிர்ந்தது எனச் சொல்லும்போது பால் வேறுபாடு காட்டாததும் தமிழிலக்கண மரபு. உருதுவில் அப்படியல்லாமல் ஒவ்வொரு பொருளுக்கும் பால் வேறுபாடு உண்டு. கவிதையில் மரபாக இடம்பெறுபவையும் அப்படிப் பால் வேறுபாட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் உருவகிக்கப்படுகின்றன (metaphor). எடுத்துக்காட்டாக, விளக்கு பெண்ணாகவும், விளக்கில் விழுகின்ற விட்டில்பூச்சி ஆணாகவும் உருவகிக்கப்படுகின்றன.    

இந்தித் திரைப்பாடல்களிலும் உருதுவின் தாக்கம் பெரிது. தொடக்க காலத்திலிருந்து இந்தித் திரையிசை உருது இலக்கியத்தின் சுவையைத் தாங்கி நிற்கின்றன. இலக்கியத்தின் வேர்களையும் உருது மொழியையும் நன்கு அறிந்த கவிஞர்கள் திரையிசைப் பாடல்களை இலக்கியத் தரமாக இயற்றினர்.   

உருதுக் கவிதைகளை வாசிப்பது என்பது ஒரு மொழியை அறிதல் மட்டுமல்ல; அது மனித உணர்வுகளின் நுண்ணிய அடுக்குகளைத் தொடும் அனுபவம். சில வரிகள் நம்மை அமைதியாக்கும். சில வரிகள் நம்மை அழ வைக்கும். சில வரிகள் பல ஆண்டுகள் மனதில் தங்கிவிடும்.

உருதுக்கவிதைகள் மனித மனத்தின் மென்மையான பிரதிபலிப்புகள். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், உலகம் வேகமாக மாறினாலும், மனிதன் இன்னும் காதலாலும் நினைவுகளாலும் ஏக்கங்களாலும் நிரம்பியவனாகவே இருக்கிறான். அந்த மனதின் மெதுவான குரலாக உருதுக்கவிதைகள் என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

ஒரு மொழி மனித மனதை இசையாக மாற்றும்போது அது கவிதையாகிறது. 

(தொடரும்)

Author

Related posts

இறைவனின் இணையில்லாப் படைப்பு

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

திருவை மு.இரா. கவிதைகள் -3