திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 4

This entry is part 10 of 10 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்
போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காது
நிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாது
கால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராது
இறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாது
இதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்
முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர் விடுத்து
கலக்கங்களையெல்லாம் முளையிலேயே கிள்ளிவிட்டு

அப்போதே பிறந்த பச்சிளங் குழந்தையையும்
படுக்கையில் விழுந்த வயதான அப்பாவையும்
நசுங்கிப் போன பொட்டலங்களை
முப்பது கிலோ மூட்டைக்குள் திணித்துக்கொண்டும்
கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டு சுற்றி வரும் மனைவியின் அவஸ்தையையும்
வழியனுப்ப வந்த எதிர்வீட்டு ஜரீனாவை அணைத்துக்கொண்டு
பெருந்துயரத்தைப் பொழிகின்ற தாயின் பெற்றெடுத்த நேசத்தையும்
இப்படி சொந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு
எனக்குச் சொந்தமான கைகளை முறித்துவிட்டு
எனக்குச் சொந்தமில்லா இறக்கைகளை அணிந்துகொள்ளும்போதெல்லாம்
உடல் ஒரு துக்க மேகம்
வீடு ஏதோ கவலைத் தொழிற்சாலை

“சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்”
ஒவ்வொரு ஊராகக் கடந்துபோகிறது
ஒவ்வொரு துளியாக உதிர்ந்து விழுகிறது
துயரத் துளிகளையெல்லாம் கூட்டி
காலம் துக்கப் பயிரை சாகுபடி செய்கிறது

இருட்டிலிருந்து இருட்டை நோக்கிப்
பயணிக்கின்ற வழியில்
கண்களில் கடல்கள் பொங்கி எழும் அலைக்கழிப்பு
கலக்கத்தின் கத்திகள் கனவுகளைக் குத்திக்கிழிக்கும் சலனம்

மேற்போக்காய் நிசப்தமாகவே இருக்கும்,
முகத்திலும் எந்தவித கலக்கமும் இருக்காது
உள்ளே இருந்து பொங்கி எழுந்தவர்களின் அருவியாய்
வழிகிற ஸ்பரிசம்

“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென் திஸ் இஸ் யுவர் கேப்டன் ஸ்பீக்கிங்,
வீ வில் பி அரைவிங் அட் அவர் டெஸ்டினேஷன் ஷார்ட்லி..”

“கவனமா இரு பேட்டா” என்று
என் நல்லதுக்காக துவா செய்து
ஈரக்கண்ணில் நனைந்த இமாம்ஜாமினை தோளில் கட்டிவிட்டாள் உம்மா.

கழட்டியபோது
தாயத்திலிருந்து நழுவிப்போன ரூபாய் நாணயத்தின் சப்தத்திற்கு
ரியால் கனவு இரத்தம் கக்கியதென்று
அவளுக்கு எப்படிச் சொல்வேன்?!

Series Navigation<< திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

காவூ – ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை)

மருத்துவர் பக்கம் – 36: பல வண்ண அபாய அப்பளம்

மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி