பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து..
எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில் இவை மூன்றும் கொண்டிருக்கும்.
உண்மை தான் நேற்று ஆயுஷி பார்த்த பார்வை..
ஆழக் கடலின் அமைதியைப்போல் அடர்ந்தே மிளிர்ந்த இருவிழிகள் கோலம் அழகாய் இருந்தாலும் கோதை சிரிப்பில் ஒளியில்லை ஓலம் நன்றாய் இடுமுணர்வின் ஓசையைக் கொஞ்சம் மறைத்தபடி பாலங் கட்ட்த் தான் நினைத்தே பாவை என்னை அணைத்தாளோ
அனந்துக்குப் புரியவே இல்லை … அவ்வளவு அழகாக ஆடியது கொஞ்சம் சோகமாய் அணைத்து விடை பெற்றது.. என்ன விஷயமாக இருக்கும்..
என்ன தான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளும் இல்லாத திரு நாளாய் ஆடக் கூப்பிட்ட்து.. ம்ம் ஆயுஷியிடம் கேட்க வேண்டும் என்னவென்று..
மறு நாள் அலுவலகம் சென்றால் சார் மட்டும் அவர் அறையில் இருந்தார்.. வெளியில் ஆயுஷி இல்லை.
”அனந்தனா வாவா.. இன்னிக்கு ஆயுஷி வரலைன்னு மெஸேஜ்..”
”ஏனாம்..?”
”என்ன ஏனாம்.. ஒண்ணும் சொல்லலை.. அதுக்கப்புறம் ஒனக்கு ஃபோன்.. யூ ஹேவ் டு கோ டு சோஹர்.. ரெண்டரை மணி ட்ரைவ்.. அங்க மால்ல் நம்ம ஷாப் மேனேஜர் கூப்பிட்டிருக்கார் உன்னை.. எதுக்குன்னா”
என ஆரம்பித்து டீடெய்ல்ஸ் சொல்லி – ”சமர்த்தா போய்ட்டு ஈவ்னிங்க் திரும்பிடு என்ன”
”சரி.. ஆயுஷி?”
”ஏதாவது லேடீஸ் ப்ராப்ளமா இருக்கும் அனந்தா. உடம்பு சரியில்லாமப் போயிருக்கும்.. சரி போய்ட்டு வா.. ஆஷாவும் கேப்பா..”
கிளம்புவதற்கு முன் செல்லில் தொடர்பு கொள்ள முயற்சித்தான்.. ரிங்க் மட்டும் சென்றது..
சரியாக இரண்டரை மணி நேரத்தில் ஷோஹர் இடத்துக்குச் சென்று வேலை முடித்து நாலுமணி ஈவ்னிங்க்கில் கிளம்பி மஸ்கட் ஆறரைக்கு அடைகையில் மெஸேஜ்..
சார் தான் அனுப்பியிருந்தார்.. ”ஆயுஷி அவசரமா ஊர் போறாளாம்.. உன்னைப் பார்க்கணுமாம்.. முடிஞ்சா காண்டாக்ட் பண்ணிட்டு வா.. லீவுக்கு மெய்ல் அனுப்பச் சொல்லு.. வந்து ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிக்கலாம்”
”என்ன அவசரமாம்?”
”ஒண்ணும் தெரியலை அனந்தா…”
பின்னர் தான் பார்த்தான்.. நாலைந்து மிஸ்கால்கள் அவளிடமிருந்து.. இந்த வைப்ரேட்டரி மோடில் போட்டு காரில் மறந்து வைத்துவிட்டு பின் அதையே சுத்தமாக மறந்தது நினைவுக்கு வந்தது..
கூப்பிட்டான். மூன்றாவது ரிங்கில் எடுத்தாள்.. குரலில் சோர்வா என்ன..?
”அனந்த்.. எங்க இருக்கீங்க.. உங்க கிட்ட ஒண்ணு பேசணும்”
”ஒன் ஃப்ளாட் கீழ தான் இருக்கேன்.. எது உன்னோட ஃப்ளோர்.. டோர் நம்பர் என்ன?”
”இல்ல நீங்க லிஃப்ட்ல ஏறி அஞ்சாவது மாடிக்குப் போய் மொட்டை மாடிக்குப் போங்க.. நானும் வர்றேன்…”
மொட்டை மாடியா? எதற்கு?.. அவனுக்குப் புரியவில்லை…
மேலே போன சில நிமிடத்தில் வந்தாள்..
அங்கு யாரும் இல்லை.. இந்தப் பக்கமும் யாரும் பார்ப்பது போல இல்லை.. நடையில் சோர்வு.. ஆனால் கண்களில் ஏதோ தீர்மானம்..
”அனந்த்..”
”சொல் ஆயுஷி.. வாட் ஹாப்பண்ட் டு யூ.. ஏன் இந்தியா செல்கிறாய்..?”
”சும்மா..”
”இந்தக் கதை வேண்டாம் சொல்..”
”சொல்வதற்கு ஒன்றுமில்லை.. அப்பா கூப்பிட்டார் ஒரு நல்ல வரன் வந்திருப்பதாக”
”ஆயுஷி…”
”ம்”
”புருடா கப்ஸா பீலா விடுகிறாய்”
”இல்லை அனந்த்.. இன்ஃபேக்ட் நான் உங்களிடம் கொண்டது இன்ஃபாச்சுவேஷன் என்று தான் நினைக்கிறேன்..”
”ஆயுஷி.. இப்படி எல்லாம் சீரியஸாப் பேசாதே… இந்த வயதிலா.. நீ என்ன ப்ளஸ்டூ மாணவியா.. இதெல்லாம் வருவதற்கு..?”
”இல்லை.. உங்கள்…” என ஆரம்பித்தாள்..
கண்களைப் பார்க்கவில்லை அவள்..
”உங்கள் படிப்பை சிவியில் பார்த்தேன்.. சாலரி அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் பெர்ஸனல் ஃபைலில் பார்த்தேன்.. யூ ஆர் எ பெர்ஃபக்ட் மாட்ச் டு மி என நினைத்து பின் பின்..”
”பின் என் மூஞ்சியை முழுதாகப் பார்த்தேன். அதானே.. எதுக்கு இப்படி மொட்டை மாடி?”
”இது வேற மொட்டை மாடி தானே…”
வெளிறிச் சிரித்தாள்.
”சோகையாக சிரிக்காதே ஆயுஷி.. உன் உடம்பிற்கு என்ன?”
”நடந்தால் கூடக் கூட வருகிறது”
”பொய்..”
”உண்மை..”
”வேற…?”
”அதான் அப்புறம் கொஞ்சம் யோசனை செய்து பார்த்தேன், உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால் லக்கேஜுடன் வருவீர்கள்.. எனக்கு அதெல்லாம் ஒத்து வராது..”
”லக்கேஜ்?”
”உங்கள் அப்பா அம்மா”
”ஆயுஷி.. என்ன பேத்தறே..?”
”யெஸ்ஸூ” சிரித்தாள்..
“இப்ப எங்க அப்பா ஒரு வரன் பார்த்திருக்கார்.. ரொம்ப நல்ல படிப்பு நல்ல வேலை, இன் சிங்கப்பூர்.”.
அனந்துக்கு முதன் முறையாகக் கோபம் வந்தது.
”சிங்கப்பூர்.. சிங்கப்பூர் மச்சானா..?”
”ம் பழைய பாட்டு அனந்த்.. தவிர எனக்கு பழைய மலையாளப் பாட்டு தான் தெரியும்”
ஆயுஷி.. இழுத்தான் அவளை.. அருகிலும் வந்தாள்..
”சொல் நீ நீயாக இல்லை”
”ச் அந்தப்பக்க எதிர் ப்ளாட்ஸ்க்கு நாம் சினிமா ஆக வேண்டாம், நான் சொன்னது தான் உண்மை.. ஸோ கோயிங்க் ஃபார் எ ஷார்ட் லீவ்..”
இருமினாள். நிறைய..
”ஆயுஷி.. என்ன இருமல்?”
”ட்ரை காஃஃப்.. சிரப் குடித்துத் தூங்கினால் சரியாய்டும்.. பை அனந்த்..” விலகினாள்.
”மறுபடி சந்திக்கலாம். அனேகமாக இருக்காது, அங்கிருந்தே ரிசைன் பண்ணுவேன்.. எல்லாத்துக்கும் தாங்க்ஸ்”
”எல்லாத்துக்கும்னா?”
”எல்லாத்துக்கும் தான்..”
”மீன்ஸ்…”
கண்களை உயர்த்திப் பார்த்தாள்.. ”அனந்த் ஸாரி இஃப் ஐ ஹேவ் மிஸ் லெட் யூ.. தாங்க்ஸ் சொன்னது நீங்க என்னை மறக்கப் போறதுக்காக…”
சொல்லும் போதே கொஞ்சம் குரலில் குழறல்..
கடக் கடக்கென படிகளில் இறங்கிச் சென்றவளை பார்த்துக்கொண்டே நின்றான் அனந்த்..
ஹாய் ஆராவமுதன் ஹியர்..
என்னடா சொல்ற நீ என்றேன் அனந்த்திடம்
”தெரியலை சித்தப்பா.. என் அப்பா அம்மாவையெல்லாம் லக்கேஜ் என்றாள்.. என் பணம் என் படிப்பு பார்த்து தான் லவ்வாம்.. இயற்கையா இல்லை சித்”
”ஸோ கிளம்பிட்டாளா?”
”இன்னேரம் போய்ச் சேர்ந்திருப்பாள் சித்தப்பா”
அவன் என்னிடம் பேசியது மறு நாள் காலை.
”ஆமாம் எனக்கு ஒண்ணே ஒண்ணு தெரியணும்”
”என்ன?”
”இல்லடா அவளுக்கு ஏதாவது வியாதியோ என்னமோ.. நீ அவளை வெறுக்கணும்னு இப்படிப் பேசறாளோ”
”எப்படிச் சொல்றீங்க சித்தப்பா?”
”தமிழ் சினிமாக் கதைல இப்படித் தானே வரும்.. ஆனா அனந்த்.. எனக்குத் தெரியலை அண்ட் புரியலை..
பொண்ணுங்கள்ளாம் கட்டிப் பிடிச்சுக்கறது ஆடறது எல்லாம் இந்தக் காலத்துல சகஜம், அதெல்லாம் டான்ஸ் ஆடறச்சே பப் இன்னபிற நியூ இயர் பார்ட்டிலன்னு சொல்லிக்கலாம். பட் வேலை மெனக்கட்டு கூட்டு டாண்டியா ஆடிட்டு வந்து ஹக் பண்ணிண்டவ இப்படிப் பேசினா.. ”
”இப்படிப் பேசினா?”
”சம் திங்க் ஃபிஷி.. ம் அந்தக் காலப் படத்துல ஓஹோஹோ ஓடும் எண்ணங்களேன்னு தேவிகா பாடறா மாதிரி பாடுவான்னு நினச்சா இப்படிப் பண்ணிட்டாளே.. இதுக்கு ஒரு சொல்யூஷன் இருக்கு”
”என்னது..?”
”நான் போறேன்..”
”எங்க?”
”அவ ஊருக்கு.. எந்த ஊரு?”.
”சித்தப்பா இருங்க அவகிட்டயே கேக்கறேன்.”.
”ம்க்கும் எங்க போறேன்னு கூட கேக்கலையா”
”இல்ல சித்தப்பா கொச்சின் பக்கத்துல… நினைவுக்கு வரலை.. வெய்ட் காண்டாக்ட் பண்றாளா பார்க்கறேன்….”
”என்னத்துக்கு அனந்த்.. சித்தப்பா கேக்கறாரா.. அவருக்கும் இதே பதில் தான் வருவேங்கறாரா… நான் இருக்கறது திருவல்லா.. பாரேன் உங்க சித்தப்பா கண் விரியும்னு தெரியும்.. எஸ்.. டயானா மரியம்குரியன் என்ற நயன் தாராவின் ஊர் தான்.. ஆனா கொஞ்சம் ஊரைத் தள்ளியே இருக்கு எங்க வீடு.. சரி இதான் என்னோட அட் ரஸ்..” அவளது வாய்ஸ் மெஸேஜ் வாட்ஸப்பில் வந்ததை எனக்கு ஃபார்வர்ட் பண்ணியிருந்தான்.. குரல் நன்னாயிட்டு தான் இருந்தது.
”என்னது என்னை வரச் சொல்றாளா.. புரியலையேடா அனந்தா.. சரி எனக்கு ஒரு வாரமாவது டைம் கொடு போய் வந்து சொல்றேன்..” எனச் சொல்லி ஃபோனை வைத்தேன்.
சொன்னாற் போல சில தினங்கள் கழித்து கொச்சின் ட்ரெய்ன் பின் பஸ்ஸில் திருவல்லா சென்று அவள் சொன்ன தெருவில் நுழைந்து டீக்கடையில் விசாரித்தேன்..
ஓ ஈ அட்ரஸா.. அதோ கடோசி வீடு.. எனச் சொன்ன டீக்கடைக்காரன் மேலும் ஒன்று கேட்க எனக்கு அதிர்ச்சி.
(தொடரும்)