Home தொடர்மருத்துவர் பக்கம் – 38:  சூப்பர் எல் நினோவும் உடல் நல பாதிப்புகளும்

மருத்துவர் பக்கம் – 38:  சூப்பர் எல் நினோவும் உடல் நல பாதிப்புகளும்

by Farooq Abdullah
0 comments

தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் பகுதியில் இடுகிறேன். எல் நினோ காலங்களில் வரலாறு காணாத வெப்ப அலை வீசும். இத்தகைய வெப்ப அலை வீசும் சூழலை நாம் அனுபவித்து வருவது கண்கூடு.

காற்றின் ஈரப்பதம் அதிகமாகி, மேற்புற மேக்கூரைகள் இல்லாதபடிக்கு சென்ற ஆண்டை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சராசரிக்கும் மேல் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் வெப்பமானியில் பதிவாகும் உண்மையான வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் என்றாலும் கூட நாம் அதை 40 டிகிரிக்கு மேல் உணரும் நிலையும் உள்ளது. அதிகப்படியான பகல் நேர வெப்பம், அதிகப்படியான காற்று ஈரப்பதம் ஆகியவற்றின் விளைவாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமாகப் பதிவாவது வாடிக்கையாகி வருகிறது. இரவு நேரமாவது குளிரும் என்று பார்த்தால் இரவு கூட 30 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வரும் சூழல் நிலவுகிறது.

இப்படியான சூழ்நிலையில் பல்வேறு இணை நோய்களுடனும் பல்வேறு மருத்துவ சிகிச்சையிலும் நம் மக்கள், குறிப்பாக முதியோர் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகள் பின்வருமாறு:

1. நீரிழிவு நோயர்கள் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் நீரிழப்பு, இரத்தத்தின் நீர்ச்சத்தைக் குறைத்து அதனால் கார்டிசால் உள்ளிட்ட அவசர நிலைக்கான ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்து ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கலாம். இதை நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் அதி ரத்த சர்க்கரை என்று அழைக்கிறோம். வெளியில் வெப்பம் அதிகரிக்கும் போது, அதை உள்வாங்கும் நமது உடலின் மையப்பகுதியும் வெப்பமாகும். அதைக் குளிர்விக்க வேர்வை சுரக்கும். ஆனால் நீரிழிவு உள்ளவர்களுக்கு இத்தகைய அமைப்புகளின் பாதிப்பு இருக்கும். இதை “அட்டனாமிக் நியூரோபதி” என்கிறோம். இதனால் உடலின் மையப்பகுதி உஷ்ணமானாலும், வியர்வை சுரப்பு சரியாக இருக்காது. எனவே, வெளியே 35 டிகிரி வெயில் அடித்தாலும் கூட நீரிழிவு நோயர்களுக்கு 40+ டிகிரி போல உணரும் தன்மை இருக்கும்.

இவற்றுடன் நீரை வெளியேற்றும் மாத்திரைகள், உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு மாத்திரைகளின் விளைவுகளுடன் நீரிழப்பும் சேர்ந்து கொள்ளும்போது ஆரம்பகட்ட சிறுநீரக நோய் முற்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு – சிறுநீரக அழற்சி (ACUTE KIDNEY INJURY) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெப்பமயமான சூழ்நிலையில், நீரிழப்பும் சேர்ந்து கொள்ளும்போது வெறும் பாதத்தில், வெளியில் நடக்க முற்பட்டால் கால் பாதங்களில் புண் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

2. இரத்தக் கொதிப்பு நோயர்கள் சூப்பர் எல் நினோ நிலவும் போது, இரத்தக் கொதிப்புக்கு நீரிறக்கிகள் (டயூரிடிக்ஸ், ஏ.ஆர்.பி, ஏசிஈ தடுப்பான்கள்) உள்ளிட்ட மருந்துகளை உட்கொள்ளும்போது, வெயிலில் நீண்ட நேரம் பணிபுரியவோ அல்லது பயணம் செய்யவோ நேர்ந்தால், அதன் பொருட்டு தீவிரமாக தாழ் ரத்த அழுத்த நிலை, தீவிர நீர்ச்சத்து இழப்பு, தாது உப்புகளில் ஏற்படும் சீர்கேடு ஆகியவை ஏற்படலாம். குறிப்பாக சோடியம், கால்சியம் உள்ளிட்ட தாது உப்புகள் ஏற்ற இறக்கமடைய வாய்ப்புள்ளது. நீரிழப்பை ஈடுகட்ட வெறுமனே நீரை மட்டும் குறைவான நேரத்தில் அதிகமாக அருந்திக்கொண்டிருந்தால், டைலூசனல் ஹைப்போநாட்ரீமியா ஏற்பட்டு மூளை வீக்கம் எனும் அவசர நிலை வர வாய்ப்புள்ளது.

3. சிறுநீரக நோயர்கள் ஏற்கெனவே சிறுநீரக அழற்சி இருப்பவர்களுக்கு, கடும் வெயிலின் விளைவாலும், சிறுநீரகங்கள் திறம்பட பொட்டாசியத்தை வெளியேற்ற முடியாததாலும், பொட்டாசியம் அளவுகள் அதிகரித்து ஹைப்பர் கலீமியா ஏற்பட்டு அதனால் இதயம் தறிகெட்டுத் துடிக்கலாம். இதை இதயத் துடிப்புச் சீர்கேடு என்று அழைக்கிறோம். நீரிழிவு, ரத்தக் கொதிப்பு நோயர்களில் பலரும், தங்களுக்கே தெரியாமல் ஆரம்பநிலை சிறுநீரக அழற்சியுடன் இருப்பார்கள். தற்போது நிலவும் கடும் வெப்பம் சார்ந்த சவால் நிலையால் அவர்களுக்கு சிறுநீரக அழற்சி அடுத்த கட்டத்தை எட்டலாம்.

டயாலசிஸில் இருப்பவர்கள் கவனத்திற்கு – இரண்டு டயாலசிஸிற்கு இடைப்பட்ட காலத்தில் தாகம் அதிகமாக எடுத்து அதிக நீர் குடிக்கும் நிலை ஏற்படலாம். குடித்த நீரை வெளியேற்ற சிறுநீரகங்களால் இயலாது என்பதால் உடல் எடை கூடும். அதிகப்படியான நீர், நுரையீரல் மற்றும் உடலின் வேறு பகுதிகளில் கோர்த்துக்கொண்டு அபாய நிலையாக மாறும் வாய்ப்புள்ளது. அதுவே, டயாலசிஸ் செய்யும்போது அதிகமான நீரை வெளியேற்றும்போது திடீரென ரத்த அழுத்தம் மிகவும் குறையவும் வாய்ப்புள்ளது.

4. இதய நோயர்கள் ஏற்கெனவே அட்டாக் வந்து ஸ்டெண்ட்/ பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இதயத்தின் செயல்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு, வியர்க்கும் தன்மை குறைவாக இருக்கும். கூடவே, டயூரிடிக்ஸ், இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகள், இதயத் துடிப்பு குறைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை உண்பார்கள். வெயில் அதிகமாக இருக்கும்போது வியர்வை போதுமான அளவு சுரக்காது. இதயத்துடிப்பு குறைவாகவே இருக்கும். இரத்த நாளங்கள் சுருங்கி விரிவதிலும் சிக்கல் இருக்கும். இதன் விளைவாகத் திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, தலைச்சுற்றல், கீழே விழுதல் ஆகியவை ஏற்படலாம்.

5. முதியோர்கள் 60+ முதியோர்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் செயல்திறன் குறைவாக இருக்கும். உடலின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும் செயல்முறைகள் மிகவும் மந்தமாகவே இருக்கும். வெயில் எவ்வளவு அடித்தாலும் அதற்குரிய தாகம் எடுக்காது. நீரிழிவு + இரத்தக் கொதிப்பு + இதய நோய் + சிறுநீரக நோய் என்று பல்வேறு இணை நோய்களுக்கு மருந்துகள் எடுப்பார்கள். இதன் விளைவாக, நீர்ச்சத்து இழப்பு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவர்கள் வெயிலின் தாக்கத்திற்கு உட்படும்போது, மாரடைப்பு, சிறுநீரக நோய், தீவிர நுரையீரல் நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இவற்றைத் தடுக்கச் செய்ய வேண்டிய விஷயங்கள்:

  1. நீர்ச்சத்து குறைபாட்டைச் சரிசெய்தல்: முதியோர்கள், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு இருப்பவர்களுக்குத் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாக, தாகம் எடுப்பது குறைந்து காணப்படும் என்பதை உணர வேண்டும். எனவே, தாங்களாகவே முன்வந்து அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  2. தாது உப்புகளைச் சரிசெய்தல்: மோரில் உப்பு போட்டுப் பருக வேண்டும். அதிக நேரம் வெயிலில் இருந்தால், ஓ.ஆர்.எஸ் திரவம் அருந்தலாம். எலுமிச்சைச் சாறு/ நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை உப்பு போட்டுப் பருக வேண்டும்.
  3. வெயிலில் அலைச்சலைத் தவிர்த்தல்: குறிப்பாக முதியோர், இணை நோய்கள் கொண்டவர்கள் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நேரடி வெயிலில் பயணம் செய்வதையும் வேலை செய்வதையும் இயன்ற அளவு தவிர்க்கலாம். இது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று கருதுவோர், கட்டாயம் குளிர்ந்த நீரை அவ்வப்போது அருந்த வேண்டும். உப்பு மோர் அருந்த வேண்டும். நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்.
  4. மருத்துவர் ஆலோசனை: கடும் வெயிலில் பணிபுரிய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் தங்களின் சிறுநீரக/ இதய நோய்/ குடும்ப மருத்துவரைச் சந்தித்து, இரத்தக் கொதிப்பு / நீரிறக்கி மாத்திரைகளின் அளவைத் தேவைக்கு ஏற்பக் குறைத்துப் பரிந்துரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது வெப்பத்தில் பணிபுரிய வேண்டிய நாட்களில் மட்டும் இந்த மாத்திரைகளில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
  5. அறிகுறிகளைக் கண்காணித்தல்: இதயத்துடிப்பு அதிகரிப்பது, படபடப்பு, அடிக்கடி வரும் தலைச்சுற்றல், கடும் வெயிலிலும் வியர்வை சுரப்பு சரியாக இல்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை இனங்கண்டு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கு ஏற்றாற்போல சிகிச்சையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
  6. மாதாந்திரக் கண்காணிப்பு: இணை நோய்கள் இருப்பவர்கள் அதிலும் குறிப்பாக முதியோர்கள் கட்டாயம் தங்களின் மருத்துவரை மாதம் ஒருமுறை சந்தித்துக் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான மருத்துவச் சிக்கல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து தெளிந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் அறிந்து விழிப்புணர்வு பெறுவோம்.

Author

You may also like

Leave a Comment