Home கவிதைதமிழே அமிழ்தே – 24
This entry is part 24 of 25 in the series தமிழே அமிழ்தே

தமிழரின் விருந்தோம்பல்

அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே முதன்மை என்றாகி அறம் பின்னால் சென்றுவிட்டது.

ஆனால், தமிழர்தம் பண்பாட்டில் முற்காலத்தில் வறியவர்க்கும் வழிப்போக்கர்க்கும் உணவு படைத்தல் தமிழர்களின் இயல்பான குணமாகவே இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

வீட்டுத் தலைமைக்கு உரிய மாண்புகளாகவும் இல்லறத்தின் உயர்ந்த அறமாகவும் விருந்தோம்பலும் சுற்றம் ஓம்பலும் இருக்கிறது என்கிறது தொல்காப்பியம்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள் (கற்பியல்,11).

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே என்ற பொருள் தரும் திருக்குறள் 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு இருந்தது.

இதனை அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்கிறது நற்றிணை (142).

மட்டுமின்றி, குறுந்தொகை பாடலில் பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் என்ற 118 ஆம் பாடலில் வரும் வரிகள், சங்க காலத் தமிழர்கள் தம் வீட்டுக் கதவை இரவில் அடைப்பதற்கு முன்பும் கூட, பசியோடு வரும் புதிய விருந்தினர்களை வரவேற்கக் காத்திருந்த நற்பண்பைப் பறைசாற்றுகின்றன.

இன்றைக்கும் வரலாற்றின் எச்சங்களாய் சில ஊர்களில் வழிப்போக்கர் தங்கிச் செல்லும் சத்திரங்கள் இருக்கக் கூடும். அக்காலம் விருந்து என்பது அறியாதவர்க்கு அளித்தலாக இருந்தது.

இரந்து நிற்பவருக்கு உணவிடுவதும் விருந்தினருக்கு விருந்தளிப்பதும் வேறுபடுவது உபசரிப்பில் தான். அதனாற்றான் விருந்தினரை முகம் மாறா மகிழ்வுடன் பேண வேண்டும்; முகர்ந்தவுடன் வாடிவிடும் அனிச்சத்தைப் போல விருந்தளிப்பவர் முகம் திரிதலில் விருந்தினர் மனம் வாடிவிடும் என்கிற நுணுக்கத்தையும் தமிழின் தன்னிகரற்ற திருக்குறள் (90) சுட்டுகிறது

இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதெனத் தமியர் உண்டலும் இலரே
எனப் புறநானூறு(182) காட்டும் சித்திரம், கிடைப்பதற்கு அரிதான அமிழ்தமே கிடைத்தாலும் விருந்து இன்றி தனித்து உண்ணலாகா என்கிறது.

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
என்கிறது ஒளவை மூதாட்டியின் அறிவுரை.

இக்காலத்தில், தம் செல்வச் செழிப்பைக் ‘காட்டி’க் கொள்ளவும், ஏதேனும் பலனை எதிர்பார்க்கும் நோக்கிலும் தான் தம்மின் வலியோருக்கு விருந்துகள் ஏற்பாடாகின்றன என்றால் மிகையில்லை.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 23தமிழே அமிழ்தே – 25 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

3 comments

ஊர் நேசன் August 4, 2026 - 5:42 pm

சங்க இலக்கியம் முதல் திருக்குறள் வரை தமிழரின் உயர்ந்த விருந்தோம்பல் மரபை உயிர்ப்பித்துள்ளீர்கள்.

இன்றைய சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வை தரும் சிறந்த பதிவு.

Reply
கருணை பிரியன் August 4, 2026 - 6:10 pm

தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டை இலக்கியச் சான்றுகளுடன் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

அறமும் மரபும் இணைந்த சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு. பாராட்டுகள்!

Reply
ஜாக்கிர் ஹுசைன் August 4, 2026 - 7:52 pm

“விருந்தில்லாது உண்ணும் சோறு மருந்து தானே.”
ஒரு பழம் பாடலொன்று பேசுகிறது :

திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்
பகலாமோ? உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரம் செய்தனுப்பி
இன்னுமெங்கே பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா துணுஞ்சோறு மருந்து தானே.

பொருள்:

திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் :

செல்வம் தங்கிய திருத்தண்டலைத் திருநகர் உள்ள செழித்த நாட்டினில் இல்லறம் நடத்தும் பெரியோர்கள்,

ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ :

ஒரு விருந்தினரேனும் இல்லாமல் உணவு கொண்ட நாள் (ஒரு) நாளாகுமோ,

உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி :

நட்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவளித்துக் களைப்பாற்றிப் பேசி விடுத்த பின்னர்,

இன்னும் பெரியோர் எங்கே என்று :

மேலும் வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று,

வருவிருந்தோடு உண்பது அல்லாமல் :

வரும் விருந்தினருடன் உண்பது அன்றி,

விருந்து இல்லாது உணும் சோறு மருந்து தானே :

விருந்தினர் இல்லாமல் உண்பது மருந்து போலத்தான் – கசப்பாக இருக்கும்.

விருந்து எனில் “ மாமன் மச்சான் “ இல்லை !

அறிமுகமே இல்லாத சான்றோன் !

செல்விருந்(து) ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு .

என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய மறைமொழி.

“ மருந்தே ஆயினும் விருந்தோடு உண்”

என்பது ஔவையின் அருள்மொழி.
மருந்தைக் கூட விருந்தோடு உண் என்கிறார் .

அக்காலம் இத்தகைய வாழ்வை நம் பெரியவர்கள் வாழ்ந்துள்ளனர் !

பெருமையே !

உங்களைப் போன்ற ஒருவர் முன்னர் ஒருமுறை முகநூலில் பதிவிட்டு இருந்தார்.

அழகான நடையில் சிறப்பாக இருந்தது உங்கள் பதிவு.

பண்டைய தமிழரின் வாழ்வியலை உயிர்ப்பிக்க முடியவில்லை எனினும் பண்பையாவது உயர்பிப்போம்.

Reply

Leave a Comment