தாரா சென்ற பிறகு வெகுநாளைக்குப் பின் சற்றே நிம்மதியாக உணர்ந்தவர்களாக தனுவும், ஷைலுவும் படுக்கையில் விழுந்த அரைமணி நேரத்துக்குள் அறைக்குள் இருந்த எக்ஸ்டென்ஷன் தொலைபேசி சிணுங்கியது. இணைப்பில் அழைத்த ரிசப்சனிஸ்ட், “தன்மத்ரா, காலையில் உன்னுடன் வந்த உக்ரைனியர்கள் இருவரில் ஒருவர் இன்னும் அறைக்குத் திரும்பவில்லையாம். அவரது மனைவி உன் மீது புகார் அளித்திருக்கிறார். நாளை உன் மீது விசாரணை இருக்கிறது எனத் தெரிவிக்கச் சொன்னார் மெக்கன்ஸி. காலை 8.30 மணிக்கெல்லாம் டெரஸில் இருக்கும் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வரச்சொல்லி உத்தரவு” என்று ஒரு மினி வெடிகுண்டை திரி கிள்ளி பற்ற வைத்து விட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
ஷைலுவிடம் இந்த விவரம் தெரிவித்து நடக்கப் போவதென்ன? அவளது தூக்கமும் கெட்டுப் போவது தவிர அதில் ஒரு நன்மையும் இல்லை எனக் கருதிய தனு, அவளிடம் வேறெதையோ சொல்லி சமாளித்து விட்டு மீண்டும் உறக்கத்தில் விழ முயற்சித்தாள். ஆனால், சதா அலைக்கழிந்து கொண்டிருக்கும் மனம் அதன் பின் அவளை உறங்க அனுமதிக்கவே இல்லை.
கிரீஸையும், தாராவையும் சந்தித்ததில் அந்த உக்ரைனியனை மறந்தே போனோமே! நியாயமாக நான் தான் அவனைப் பற்றி புகார் அளித்திருக்க வேண்டும். குதிரை குப்புறத்தள்ளியதோடு நில்லாமல் குழியும் பறித்த கதையாக அவனால் 10,000 ரூபாய் நஷ்டமானதோடு, எனது தங்கச் சங்கிலியும் வேறு அங்கு கடையில் பிணையாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைவலி நாளை எப்படிப்பட்ட திருகுவலியாக மாறவிருக்கிறதோ தெரியவில்லையே! இந்தப் பிரச்சினைகளில் இருந்தெல்லாம் விடுபட்டு எப்போது நானும், இவளும் (ஷைலு) இங்கிருந்து மீள்வது என்று பலவாறாக யோசித்துக் கொண்டு வெறுமே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் தனு.
மனிதனுக்கு கடுமையான மனச்சோர்வின் பின்னும் ஆழ்ந்த உறக்கம் வரக்கூடும். அதனால் அவர்கள் தமது துன்பங்களையும், பிரச்சினைகளையும் மறந்து விட்டார்கள் என்பதில்லை. சோர்வினால் உண்டான பலவீனம் தூக்கத்துக்கு இட்டுச் சென்றிருக்கலாம். அப்படித்தான் தன்மத்ராவுக்கு வைகறையில் ஒருவழியாகத் தூக்கம் வந்தது. மறுநாள் காலைக்கென ரிசார்ட் கார்டன் டியூட்டி தரப்பட்டதால் அதற்கென அதிகாலை 5.30 க்கே துயில் எழுந்த ஷைலு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தன் அத்தையைப் பார்த்து மிகுந்த அனுதாபம் கொண்டவளாக அவளை எழுப்பாமலே தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். தனுவுக்கு அன்று விசாரணை இருந்ததால் அவள் இன்று என்னென்ன வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் அறியாமலே மேலும் மேலுமென தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டே இருந்தாள்.
நேரம் பற்றிய பிரக்ஞை ஏதுமற்றவளாக இப்படி அவள் சயனித்திருக்கையில் உச்சந்தலையில் ஓங்கிக் குட்டுப் பட்டாற் போல காலிங்பெல் விர்ரென வீறிட்டு அதிர்ந்ததில் உலுக்கி எழுப்பப்பட்டவளாகத் துள்ளி எழுந்தவள், அனிச்சைச் செயலாக தனது ரிஸ்ட் வாட்ச்சில் மணி பார்க்க மெல்லிய தங்க நிற முட்கள் மணி 8.10 என்றன. சில நொடிகள் அலங்க, மலங்க விழித்த தன்மத்ரா, மீண்டும் காலிங் பெல் கதறுவதற்குள் ஓடிப்போய் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். 8.30 க்கு கான்ஃபரன்ஸ் அறையில் இருந்தாக வேண்டுமே?! அதைக் குறித்து எச்சரிக்கத்தான் யாராவது வந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்த தனு, கதவுக்கு அப்பால் நின்ற புதியவனைக் கண்டு ஒரு நொடி புரியாமல் விழித்தாள்.
தூங்கி எழுந்த கோலத்தில் அவசரமாக வந்து கதவைத் திறந்ததில் தனுவின் கூந்தல் காற்றில் களைந்து பறந்து கொண்டிருந்தது. கண்கள் சிவந்து இன்னும் கொஞ்சம் தூங்கேன் தனு என்பதாகக் கெஞ்சிக் கொண்டிருந்தன. விழித்த பின்னும் கூட ஏதோவொரு கனவுநிலையில் சஞ்சரித்தாற் போல் தூக்கத்திற்கும், விழிப்புக்குமிடையில் அல்லாடிக் கொண்டிருந்தாள் தனு. அதனால் கதவுக்கப்பால் நின்று கொண்டு இவளைப் புதிராகப் பார்த்துக் கொண்டிருந்தவன் யாரென உடனடியாக இவளால் அனுமானிக்க முடியவில்லை.
காலையில் விழிந்தெழுந்ததும் உடனடியாக பற்களை பிரஷ் செய்த பின்னரே வாயைத் திறப்பாள் தனு. அதுவரை கொட்டாவி விடக்கூட வாயைத் திறந்து மூடும் பழக்கம் கிடையாது தனுவுக்கு. அந்த சமயத்தில் யாராவது ஏதாவது பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அவளிடமிருந்து பதிலே வராது. அப்படித்தான் அவள் பழகி இருந்தாள். எனவே இந்தப் புதியவனிடமும் என்ன ஏது என்று எதுவும் விசாரித்தறியாமலே சைகையில் ‘5 நிமிடம் காத்திருங்கள், இதோ வருகிறேன்’ என்று உணர்த்தி விட்டு மீண்டும் கதவடைத்து உடனடியாகப் பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
இவள் கதவடைக்க முயன்ற போது அவனது முகம் சற்றே கன்றிச் சினந்ததோ?! என்றொரு சந்தேகம் பளிச் பளிச்சென மூளைக்குள் மின்னி மறைந்தாலும்… ஆகட்டும் அதனால் என்ன? அவன் யாரோ என்னவோ? விடிந்து எழுந்ததும் என்னிடம் என்ன வேலை இவனுக்கு? எதற்காக இப்படி அரள மிரள வைத்து காலிங் பெல் அடித்து என்னை எழுப்ப வேண்டும்? பார்த்தால் இந்த ரிசார்ட் ஊழியர்களில் எவரையும் போலத் தோன்றவில்லை. யாராய் இருக்கும்? என்று யோசித்தவாறு சட சடவென பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து பரபரவெனக் குளித்து விட்டு சாம்பல் வண்ண ஜீன்ஸும், மஸ்டர்டு நிற சிஃபான் டாப்ஸும் அணிந்து கூந்தலை பெரிய பல் கொண்ட சீப்பால் வாரி கறுப்பு நிற சில்க் பேண்டில் அடக்கி ஹை போனி போட்டுக் கொண்டு கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். கடைசியாக வெட் டிஸ்யூ கொண்டு முகத்தை அழுந்தத் துடைத்து மீச்சிறு கருப்பு நிற பிந்தியை நெற்றியில் இட்டுக் கொண்டதும் வேலை முடிந்தது. இத்தனையையும் செய்து முடிக்க அவளுக்குப் பதினைந்து நிமிடங்கள் தேவைப்பட்டிருந்தன.
யாராக இருந்தால் என்ன? எதற்காகத் தேடி வந்தான்? என்பதை அறிந்து கொள்வோம் என வேக வேகமாக வந்து கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவள் அங்கே யாரையும் காணாமல் ஒரு நொடி குழம்பிப் போனாள். எல்லாம் ஒரே நொடி தான். அடுத்த நொடியில் கான்ஃபரன்ஸ் அறையில் இருந்தாக வேண்டிய நேரம் தவறி மேலும் 10 நிமிடங்கள் ஆகின்றன எனக் காட்டிய ரிஸ்ட் வாட்சை மதித்து அவனை மறந்து வேக வேகமாக லிஃப்டை நோக்கி ஓடினாள். ஐந்து மாடிகள் கொண்ட அந்த ரிசார்ட்டின் டெரஸில் இருந்தது கான்பரன்ஸ் அறை. லிஃப்டில் சென்ற போதும் பிற மாடி அறைப்பகுதிகளில் இறங்க வேண்டியவர்களை எல்லாம் இறக்கி விட்டு விட்டு இவள் கான்பரன்ஸ் அறையை அடையும் போது நேரம் சரியாக 9 எனக்காட்டியது ரிஸ்ட் வாட்ச்.
தாமதமாகச் செல்வது தன்மத்ராவுக்குப் பிடிக்காது. ஆனால், எப்போதுமே அவளது கொள்கைகள் அனைத்தையும் மீறியதாகவே அமைந்து விடுகிறதே அவளது தலைவிதி! அதைப் பற்றி என்ன சொல்ல?! மரியாதைக்கு கதவை மெலிதாகத் தட்டி விட்டுப் பின் திறந்து உள்ளே எட்டிப் பார்த்து “மே ஐ கெட் இன் சார்?” என்றாள். அனுமதி எதுவும் கிடைக்கிறது போலத் தெரியவில்லை. உட்புறம் அமர்ந்திருந்த மூவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியவர்களாக இவளது வரவை எதிர்நோக்கியிருக்க, இவள் தான் தாமதமாக வந்தவள் என்ற பதற்றத்துடன் தயங்கியவாறு உள்ளே நுழைந்தாள்.
சேர்மன் இருக்கையின் எதிரில் அமர்ந்திருந்த மெக்கன்ஸியும் அந்த உக்ரைனிய பிசாசும் தான் முதலில் கண்ணில் பட்டார்கள். அவர்களில் கவனம் பதித்து இவளும் உள்ளே வந்து தலை உயர்த்திப் பார்த்தால் அங்கு அமர்ந்திருந்தவன் வேறு யாரோ அல்ல. சற்று முன் இவளது அறைக்கதவைத் தட்டிக் கொண்டிருந்தானே அவனே தான் அங்கே சேர்மன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இவளை குற்றவாளிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். தனுவுக்கு ஷாக் அடித்தாற் போலாயிற்று!
இவனா? என்று முதலில் குழம்பிய மனம் மீண்டும் உடனடியாக மயக்கம் தெளிந்தாற் போல, பின்னே! இவனில்லாமல் வேறு யாராயிருக்க முடியும்? இவன் தான் இந்த ரிசார்ட்டின் முதலாளி. அப்படியிருக்க இங்கே இவனை எதிர்கொண்டதில் அப்படியென்ன தான் அதிர்ச்சி வந்து விடக்கூடும் எனக்கு?! இவனை எப்படி மறந்தோம்? 10 நாட்களில் இவனது முகம் கூட மறக்குமளவுக்கா தன்னுடைய ஞாபக சக்தி பலவீனமாயிருக்கிறது என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டவள் அவனது குற்றம் சாட்டும் பார்வையில் வெட்கிப் போய், “ஸாரி சார்… தாமதத்திற்கு மன்னிக்கவும்…” என்று விட்டு மேற்கொண்டு என்ன சொல்வதெனத் தெரியாமல் அங்கிருந்த மூவரையும் குழப்பத்துடன் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் இவளை உட்காரச் சொல்லவில்லை. அப்படியே நிற்க வைத்து விசாரிக்கும் அளவுக்குத்தான் அவனிடம் இவள் மீதான மரியாதை இன்னும் நீடிக்கிறது போலும். அவளிடம் இருந்து பார்வையை மீட்டவனாக இப்போது அவன் தன் எதிரில் இருந்த அந்த உக்ரைனியப் பெண்ணிடம், “யெஸ் மிசஸ் ஆண்ட்ரு… இப்போது தொடங்குங்கள். இந்தப் பெண்ணால் உங்களுக்கு விளைந்த தீமை என்ன?” என்றான். அப்போது இயல்பாய் அவனது கையில் இருந்த பென்சில் நழுவி கீழே அவனது காலடியில் விழத்தொடங்கியது. பார்வையை மிசஸ் ஆண்ட்ரூவிடம் இருந்து திருப்பாமலே கை விரல்களால் சொடக்கிட்டு தன்மத்ராவை அழைத்து சைகையால் தன் காலடியில் கிடந்த பென்சிலை எடுத்துத் தரச்சொல்லி கட்டளையிட்டான்.
அவனது காலடியில் எங்கே பென்சில் கிடக்கிறதென இவளுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவன் அமர்ந்திருந்த குஷன் நாற்காலி அகலமான டேபிளை ஒட்டி மிக நெருக்கமாகப் போடப்பட்டிருந்தது. இவன் எழுந்து கொண்டாலன்றி அந்த இடுக்கில் நுழைந்து யாராலும் அங்கே தவறி விழுந்த பொருளை எடுக்க முடியாது. அப்படி இருக்க… இதென்ன விதமான முட்டாள்தனமான புதுக்கட்டளை?! என புரியாமல் பார்த்தவளை அவமதிக்கும் நோக்கில் மீண்டும் உறுத்து விழித்து, “உனக்கு காதுகள் பழுதில்லையே… டூ வாட் ஐ செட்” என்றான்.
இப்போது தனுவுக்கு கோபம் வரத் தொடங்கி இருந்தது. இவனென்ன எப்போது பார்த்தாலும் என்னைப் பற்றித் தவறாகவே நினைப்பது என்று விரதம் பூண்டிருக்கிறானா? நேற்றைய அளவில் இந்த மிசஸ் ஆண்ட்ரூவுக்கு சும்மாவே என்னைப் பிடிக்காது. அவள் முன்னிலையில் ஏதோ ஏவலாளைப் பணிப்பது போல பென்சில் எடுக்கச் சொல்லி ஏவுகிறானே? இவன் சொல்வதை எல்லாம் செய்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஒன்றும் எனக்கில்லை என்று மனதுக்குள் குமுறியவள், அவனை முகத்துக்கு நேராக நிமிர்ந்து பார்த்து, “என் காதுகள் சரியாகவே வேலை செய்கின்றன. நாம் சந்திக்க நேர்ந்த முதல் நொடியில் இருந்தே உங்கள் சிந்தனை தான் பழுதுபட்டிருக்கிறது போலும். இங்கே ஏதோ விசாரணை என்று சொன்னதால் நான் வந்தேனே தவிர நீங்கள் வேண்டுமென்றே தவற விட்ட பென்சிலை எடுத்துக் கொடுக்க அல்ல!” என்றாள் சுடச்சுட.
தனது பதிலில் வெகுண்டு ஃப்ளைட்டில் நடந்து கொண்டாற் போலவே ஏக வசனத்தில் குத்தலாக ஏதோ சொல்லப்போகிறான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ, “பரவாயில்லை. இந்த 10 நாட்கள் விடாது கசக்கிப் பிழிந்து வேலை வாங்கியும் கூட உன் திமிர் இன்னும் குறைந்தபாடில்லை போலிருக்கிறதே! இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாய் இன்னும் அனுபவிக்கத்தான் போகிறாய். அதைவிடு இப்போதைய பிரச்சினைக்கு வருவோம். இவரது கணவர் நேற்று காலை முதல் மாலை வரை உன்னுடன் தான் இருந்தாராம். ஆனால் இரவு அறைக்குத் திரும்பவில்லை. நீ தான் அவரை ஏதோ செய்து விட்டாய் என அஞ்சுகிறார் மிசஸ் ஆண்ட்ரு. அவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?” என்றான்.
தனுவுக்கு எரிச்சலாய் இருந்தது. “மிஸ்டர். சேர்மன், மைண்ட் யுவர் டங்க்… இந்தப் பெண்மணியின் கணவன் பச்சிளம் குழந்தை இல்லை. அவர் மீது சொல்வதற்கு எனக்கும் புகார் உண்டு. நான் ரிசார்ட் சார்பாகத்தான் அவர்களுக்கு உதவி செய்யச் சென்றிருந்தேன். ஆனால் இவரும் இவரது கணவரும் என்னிடம் நடந்து கொண்ட முறை கொஞ்சமும் நாகரிகமற்றது. இந்தம்மாள் என் உதவி தேவையில்லை எனத் தனியாக ட்ரெக்கிங் போய் விட்டார். இவரது கணவரோ அபெர்தீன் பஜாரில் 10,000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்து விட்டு அதை என் தலையில் கட்டி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். அவருக்கான பில் தொகைக்கு ஈடாக நான் எனது கழுத்துச் சங்கிலியை அங்கே பிணையாக வைத்து விட்டு ரிசார்ட் திரும்பினேன். இவர்கள் மீது தவறை வைத்துக் கொண்டு இப்போது நான் என்னவோ குற்றவாளி போல பதில் சொல்லிக் கொண்டிருக்க நேர்ந்தது என் தலைஎழுத்து. இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சந்தேகமிருந்தால் நீங்கள் அபெர்தீன் பஜாரின் அனாமிகா சில்க்ஸ் அண்ட் ஷூட்டிங், ஷர்டிங்கில் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்றாள்.
கோபத்துடன் இவற்றைச் சொல்லி முடிப்பதற்குள் முகம் சுளித்து பார்வை கடினமாக மாறி இருந்தது அவளுக்கு. அவளது மறுமொழியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தவன் இன்னமும் கூட அவளை நம்பமாட்டாதவன் போல, “இதொன்றும் சரியான பதில் இல்லையே மிஸ் தன்மத்ரா. நீங்கள் இழந்தது வெறும் 10,000 ரூபாய்கள். ஆனால், இவருக்கு கட்டிய கணவரே காணோமென்கிறாரே. உங்களுடன் அழைத்துச் சென்றவர்களை நீங்கள் தானே பொறுப்பாக மீண்டும் இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும்… ஏன் உங்கள் வேலைக்கான பொறுப்பில் இருந்து தவறினீர்கள்?! அப்படியென்ன அலட்சியம் உங்களுக்கு?!” என்றான்.
மிஸ்டர். சேர்மனின் இந்த இரக்கமற்ற குற்றச்சாட்டை நம்பாதவளாக விழித்த தனு, மீண்டும் அதீத கோபத்திற்கு ஆளானவளாக, “போதும் மிஸ்டர் சேர்மன். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் பாரபட்சமான விசாரணையை. அவசியமற்ற ஒரு குற்றத்தை என் மீது சுமத்துவதால் உங்களுக்கு ஆகப்போவதென்ன? இவரது கணவர் எங்கே தொலைந்தார் என்று எனக்குத் தெரியாது. நான் அந்த மனிதரை அபெர்தீன் பஜார் முழுதும் தேடி விட்டேன். என்னால் கண்டுபிடிக்க முடிந்திருந்தால் செவிட்டில் நாலு அறை விட்டு அவரைக் கொண்டு வந்து இங்கே சேர்த்திருப்பேன். இது விஷயமாக நீங்கள் இப்போது காவல்துறையைத்தான் நாடியாக வேண்டும். என்னால் முடிந்த ஒத்துழைப்பைத் தருவதற்கு நான் தயார். அதைத் தவிர இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.
‘என்ன ஒத்துழைப்புத் தருவாயா? ஒத்துழைப்பு என்றால் எப்படி தருவதாக உத்தேசம்? அதையும் தான் பார்த்து விடுவோமே!’ என்று அலட்சியமாக அவளை ஏறிட்டவனுக்கு முதல் முறையாக அவளது தோற்றம் அவனுக்கு வெகு நெருக்கமான யாரையோ நினைவூட்டியது. யாரை என அவனால் சட்டென நினைவு கூர முடியவில்லை. ஆயினும் சற்றே திகைத்தாற் போல புருவங்கள் நெரிபட அவன் யோசனையில் விழுந்தான்.
ஓரிரு நிமிடங்கள் யோசனையில் கழிய மூவரும் தன்னுடைய பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதை உணர்ந்து, “ஓகே… மிசஸ். ஆண்ட்ரு, நாம் காவல்துறையை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. இன்றும் நண்பகல் வரை காத்திருந்து பாருங்கள். உங்கள் கணவர் அறைக்குத் திரும்பவில்லை எனில் பின்னர் நாம் காவல்துறையின் உதவியை நாடுவோம். யூ மே கோ நௌ!” என்றான்.
மிசஸ். ஆண்ட்ரு அப்படியெல்லாம் எளிதாக விட்டு விடுவதாயில்லை போல. அவள் சேர்மனுடன் பேசுகிறோம் என்றெல்லாம் பயந்தாற் போலத் தெரியவில்லை. “ஸீ மிஸ்டர். சேர்மன். என் கணவர் உங்கள் ரிசார்ட்டில் வைத்து தான் காணாமல் போனார். அவர் மீள வேண்டும். அல்லது அவருக்கு ஈடாக நீங்கள் எனக்குப் பணம் தர வேண்டியிருக்கும். சும்மா போவதற்கு நான் ஒன்றும் வடிகட்டிய முட்டாள் அல்ல!” என்று மிரட்டத் தொடங்கினாள் அவள்.
தனது பரந்துபட்ட தொழில் அனுபவத்தில் இப்படி எத்தனை பேர்களைப் பார்த்திருப்பான் சேர்மன்? அவனுக்கு இப்போது மிசஸ். ஆண்ட்ரூவின் பேச்சு அருவருக்கத்தக்கதாயிருந்தது. அவளுக்கு பதில் அளிக்க விரும்பாதவனாக ஒரு கணம் கண் மூடித் திறந்தவன் மெக்கன்ஸியிடம் பார்வையைத் திருப்பினான். அதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசாது இங்கு நடந்த விசாரணையின் மௌன சாட்சியாக தேமேவென அமர்ந்திருந்த மெக்கன்ஸியிடம், “மெக்கன்ஸி இந்தம்மாளை உடனடியாக இங்கிருந்து வெளியேற்று. இவளை என்னால் நம்ப முடியாது. இவர்கள் எத்தர்கள் என்று நினைக்கிறேன். டேக் ஹெர் அவே!” என்றான்.
மெக்கன்ஸிக்கு எப்போதுமே தன் பாஸின் கட்டளைகளை உடனே நிறைவேற்றித்தான் பழக்கம். இப்போதும் அப்படியே!
இவற்றையெல்லாம் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த தன்மத்ராவும் விடைபெறும் நிமித்தம், “ஓகே ஃபைன்… தென்… அயம் லீவிங் நௌ!” என்றவாறு அறையை விட்டு வெளியேறத் திரும்பினாள்.
இப்போது சேர்மனிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது. “நில், உன்னை நான் போகச் சொல்லவில்லையே! காத்திரு, உன் மீதான விசாரணை இனிமேல் தானே தொடங்கவே இருக்கிறது!” என்றான் அமர்த்தலாக.
(தொடரும்)