வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “காலத்தை வென்ற கதை” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
கோல வடிவழகும் கொஞ்சும் சிலையழகும்
சாலப் பலநூறு ஆண்டுகள் சென்றாலும்
ஞாலத்தில் நம்மிடம் நாள்தோறும் சொல்லிடும்
காலத்தை வென்ற கதை.
இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.
விஜி சம்பத்
கல்லும் கனிந்து நெகிழும்
சிற்பியவன் கற்றுளி தொடுகையில்..!
கற்சிலையும் மகிழ்ந்துருகும்
கன்னியவள் கயற்கண் படுகையில்..!
காலத்தால் வென்ற கதை
உஷா கண்ணன்
காலில் சலங்கை ஜலீர் என
கரு விழிகள் மின்னலென தையாலாள்
வதனம் காட்டிய காதல் கவிதை
காலத்தால் வென்ற கதை
ருக்மணி வெங்கட்ராமன்
தலைமுறைகள் மாறினாலும் வாழ்ந்த
தடம் மட்டும் மாறுவதில்லை;
நல்லோர் வாழ்ந்த பாதை
நாளும் மறக்க இயலவில்லை
காலத்தின் கரங்கள் அழிக்க முடியாத
கனவுகளின் காவியம் அது
மனிதம் வாழும் வரை நிலைக்கும்
காலத்தை வென்ற கதை
சுபாஷிணி ரமணன்
கல்லில் கைவண்ணம் காட்டி சிற்பிகள்
சொல்லாத கதைகள் சொல்லி வைத்தார்
நில்லாத பூமியில் நிலைத்து நிற்கும்
காலத்தால் வென்ற கதை
இப்னு ஹம்துன்
கரைகண்டார் யாருமில்லை; கண்ணறியா ஆழம்
திரைகடலும் போகும் திகைத்து – வரையிலா
ஞாலம் வரைபடத்தில் புள்ளியெனில் யாருரைப்பார்
காலத்தை வென்ற கதை
மாலா மாதவன்
உள்ளொளி ஊன்ற உயிரொளி மின்னுமாம்
தெள்ளிய சிந்தனை தேன்சுவை – வெள்ளமாய்
ஞாலத்தில் வாழ்கின்ற ஞானியர் வாழ்வெல்லாம்
காலத்தை வென்ற கதை
சின்னக்கண்ணன்
பாவை அருகிருந்து பார்த்ததும் புன்சிரிப்பாய்
பூவை சிலையாகப் பூக்கின்றாய் – தேவைதான்
மாலன் மயக்கிடும் மங்கையுனைப் பற்றிச்சொல்
காலத்தை வென்ற கதை
ஹேமா செந்தில்
கலையழகில் கண்சொக்கி நின்றாள் சிலையாய்/
கல்லில் செதுக்கிய சிற்பியின் சிற்பம்
காலத்தின் சுவடு ஞாலத்தின் பெருமை
காலத்தை வென்ற கதை.
கண்மணி பாண்டியன்
கீற்று போன்ற புன்னகை
தொற்று போல் காண்போரை
பற்றிக் கொள்ளும்.
நூற்றாண்டுகள் எட்டு கடந்தாலும்
மாறா இளமை மங்கா பொலிவு.
அங்குலம் அங்குலமாக
அங்கம் முழுவதும் நிஜத்தின் நகல்.
சிற்பியின் திறமையும் பெருமையும்
காலத்தை வென்ற கதை.
ராமலக்ஷ்மி ராஜன்
பொறுமையுடன் நிற்கிறது
மறக்கப்பட்ட நூற்றாண்டுகளில்
செதுக்கப்பட்ட சிற்பம்
அதன் விழிகள் இமைப்பதில்லை
ஆயினும் கண்டிருக்கின்றன
தன் பார்வையின் கீழ்
நடந்து சென்ற
எந்த அர்ச்சகரையும்
அரசரையும் விட
அதிக விடியல்களை
பேரரசுகள் சரிந்த பின்னும்
கொடிகள் மாறிய பின்னும்
நிற்கிறது புன்னகையோடு
மெளனத்தில் உறைந்து
காலத்தைச் செவியுற்று
உளிகள் ஒருகாலத்தில்
அதன் உடலில் ஒலித்தன
பேரழகை வடிக்க
கலைஞனின் கைகள்
நடுக்கத்துடன் உழைத்தன
ஒவ்வொரு வளைவும் இன்னும்
ஒரு துடிப்பைச் சுமக்கிறது
உயிர் கொடுத்த இதயத்தையும்
தாண்டி வாழ்கிறது
தம் பெயர் இல்லாமலேயே
தமக்காகப் பேசும் ஒன்றை
விட்டுச் செல்வதில் இருக்கிறது
காலத்தை வென்ற கதை
நளினி சுந்தர்ராஜன்
புயலென சுழன்றடித்த காலத்தினை
பொறுமையுடன் காத்திருந்து வென்றுவிட்டோம்!
துயரப் பெருங்கடலினைத் தாண்டியே
துணையென இருகரம் பற்றிவிட்டோம்!
பிரிவெனும் தணலினில் வெந்த ஈருயிர்
பெருமழை இணைவினில் குளிர்ந்ததே!
இருளென்னும் விலங்கினை
உடைத்த நம் வாழ்வு
புத்தொளி பெற்று கண்முன் மலர்ந்ததே!
விழியோரம் வழிந்த உவர் நீரும்
தேனாய் மாறியதே சுவை!
முள்வழி மீண்ட நம் காதல் சொல்லும்
காலத்தை வென்ற கதை!
வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.