இதய நோயாளிகள் குளிர்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏன்???
இதயத்தின் ரத்த நாளங்களில், அதிலும் குறிப்பாக இதயத்திற்கு ரத்த ஓட்டமளிக்கும் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களை ISCHEMIC HEART DISEASE PATIENTS, அதாவது “இதய நாள குருதி ஓட்டக் குறைபாட்டு நோய்” இருப்பவர்கள் என்று கருதுகிறோம்.
இத்தகையோர் எழுந்து நடந்தாலும் மூச்சு வாங்கும், இளைப்பு எடுக்கும், கொஞ்சம் ஓடினாலும் நெஞ்சுப்பகுதியில் கனமாக இருக்கும், வலி தோன்றும். எப்போதும் ஒருவித சோர்வும் உடல் வலியும் இருந்துகொண்டே இருக்கும். இரண்டு கால்களின் கணுக்கால் பகுதிக்குக் கீழ் நீர் சுரந்து வீக்கம் இருக்கும்.
இத்தகைய அறிகுறிகள் தென்படுமாயின், அது இதய நோயின் அறிகுறிகள் என்று உடனே உணர்ந்து, இதய நோய் சிறப்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்.
பொதுவாக இத்தகைய இதய ரத்த நாள சுருக்கம் / அடைப்பு போன்றவை 45+ வயதினருக்கே அதிகம் நேர்கிறது.
எனினும், இளைஞர்களுக்கு நேராது என்று அருதியிட்டுக் கூறுவதற்கில்லை. தற்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு இளைஞர்கள் மாரடைப்பினாலும் இதய நோயினாலும் மரணமடைந்து வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.
குறிப்பாக 60+ வயதுடையவர்களுக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் ரத்த ஓட்டக் குறைபாடு இனம் காணப்படாமல் அமைதியாக ஒளிந்திருக்கும்.முதியவர்கள் பொதுவாகத் தங்களது நடமாட்டத்தைச் சுருக்கிக்கொள்வதால் வெளியே தெரியாமல் இருக்கும்.
இத்தகையோர் குளிர்காலங்களில், அதிலும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடமாடினால்… குறிப்பாக வாக்கிங் செல்வது, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, வழிபாட்டுக்கு முன்பு குளிர்ந்த நீரில் குளிப்பது (அதிலும் குளிரான நீர்நிலைகளில் இறங்கிக் குளிப்பது) போன்ற காரியங்களில் அதிகம் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.
குளிர்காலங்களில்தான் அதிகமான மக்கள் மாரடைப்புக்கு உள்ளாகின்றனர்.மாரடைப்பு சார்ந்த மரணங்களும் குளிர்காலங்களில்தான் ஜாஸ்தியாகப் பதிவாகின்றன.
இதனுடன் சேர்த்து, முதியோர்களுக்கு மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ‘ஸ்ட்ரோக்’ எனும் பக்கவாதமும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.
இதற்கான காரணம்:
இதய ரத்த நாள அடைப்பு அல்லது குருதி ஓட்டக் குறைபாடு உள்ள ஒருவர் குளிர்ச்சி மிகுந்த காற்று அல்லது நீருக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது உடல் குளிர்ச்சியடைகிறது.
இத்தகைய குளிர்ச்சி நிலையை நமது உடல் விரும்புவதில்லை. அதனால் உடலைச் சூடுபடுத்த உடலின் பாகங்கள் முழுவதும், குறிப்பாகத் தசைகளுக்கு ரத்தம் பாய்ச்சப்படுகிறது.
இதற்காக இதயம் கூடுதலாகப் பணிபுரிந்து துடிக்க வேண்டியிருக்கிறது. இதயத்தின் துடிப்பு விசை மற்றும் வேகம் இரண்டும் ஒருசேரக் கூடுகிறது.
ஏற்கெனவே பழுதடைந்த இதயத்தை அதிகப் பணிசெய்யக் கட்டாயப்படுத்தும்போது, பளுவைத் தாங்க முடியாமல் துடிப்பை நிறுத்திவிடுகிறது அல்லது தாறுமாறாகத் துடிக்கிறது.
இத்தகைய நிலையில்:
- இதயம் திடீரென்று செயலிழக்கலாம்
- அல்லது இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்
- அல்லது மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்
- அல்லது இதயம் தறிகெட்டுத் துடிக்கலாம்.
இறுதியில் முறையான அவசியமான அவசர சிகிச்சை கிடைக்காவிடில் மரணம் ஏற்படலாம்.
எனவே, முதியோர்களுக்கும் இதய நோய் / இதய ரத்த நாள அடைப்பு நோய் / இதய ரத்த நாள குருதி ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கும் பொதுவான பணிவான அறிவுரை யாதெனில்:
- குளிர்காலங்களில் தயவுசெய்து வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்கும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்.
- குளிர்காலங்களில் அதிகாலை வாக்கிங் செல்வதைப் பற்றி நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். மாலை நேர வாக்கிங் நல்லது.
- அதிகாலை வழிபாடு போன்றவற்றை வீட்டிலேயே அமைத்துக்கொள்வதைப் பற்றியும் சிந்தியுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது.
- குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நலம்.
- குளிர்ச்சியான நீரில் குளிப்பதைக் காட்டிலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சிறந்தது.
- குளிர்ச்சியான நீர்நிலைகளில் அதிகாலை வேளைகளில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்கலாம்.
- குளிர்காலங்களில் வெதுவெதுப்பான பானங்களைப் பருகுவதில் நாட்டம் கொள்ளுங்கள்.
- வெதுவெதுப்பாக உணர வைக்கும் ஆடைகளை அணியுங்கள்.
- தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள்.
- மருத்துவரிடம் முறையான மறுசந்திப்புகளை வைத்துக்கொள்ளுங்கள்.
இதய நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால், இதய ரத்த நாள அடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள். புறநோயாளிகள் பிரிவிற்குச் சென்று காத்திருந்து பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.