- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 19
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா
காயப்பட்ட மான்
மாடியில் ஒருவனாக நின்று,
பார்வைத் தூரிகையால் ஆகாயத்திற்குத்
தனிமையின் வண்ணத்தைப் பூசுகின்றேன்.
ஒரு நண்பன் எப்போ வந்தானோ கவனிக்கவில்லை,
என் தனிமையின் தோளில் ஆறுதல் கையால்,
தைரியத்தைத் தடவிக்கொடுத்து பக்கத்தில் நிற்கின்றான்.
கருவிழியை நிரப்பிய ஈரத்திலிருந்து
அவன் உருவம் மங்கலாகத் தெரிகிறது.
ஏதோ சொல்ல வருகிறேன், ஆனால்
சொற்கள் உதட்டு எல்லையைத் தாண்டாமல்,
வெடிக்காத துயரம் ஏதோ
தொண்டைக்குழியில் அடைத்து நிற்கிறது.
எல்லாம் தெரியும் என்பதுபோல் தலையாட்டி,
சுழலாகச் சுற்றிவரும் பாரத்தைத் துடைத்துவிட்டு
அவனொரு கதை சொன்னான்.
“வெறிச்சோடிய வானிலிருந்து உதிர்ந்தது ஒரு நட்சத்திரம்,
மின்மினியாக மாறி மண்ணில் மிளிர்ந்த” கதை அது.
என்னையொரு மின்மினியாக மாற்றும் முயற்சியில் அவனிருந்தான்.
அந்தக் கண்களில் என் சொற்கள் விழவேண்டுமென்ற ஏக்கம்,
இந்தமுறை இரட்டிப்பு மௌனத்தைச் சாதித்தேன்.
அதற்குள்ளேயே,
பார்ப்பதற்கு விரும்பாத ஒரு காட்சி,
கேட்பதற்கு மனசொப்பாத ஒரு சத்தம்,
ஊர்வலமாக வந்து தெருமுனையில் நர்த்தனமாடுகிறது,
கல்யாணக் கொண்டாட்டத்தின் நடுவில் “அவள்” அலங்கார உருவம் பளிச்சிடுகிறது.
அறியாத்தனமாகவே கண்கள் மூடிக்கொண்டன,
வேட்டைக் காட்சிகள் துரத்திக்கொண்டிருக்கையில்,
இதய மேகங்கள் அவிழ்த்த பாரம்,
கண்ணீர் மழையாய்ப் பொழிகிறது.
மெதுவாக என் தோள் அவன் கையின் ஸ்பரிசத்தை இழந்தது.
அவன் புரிந்துகொண்டது போல் தெரிகிறது…
“பலமாக இறங்கிய நகக்கீறலுக்கு இனி மான்
தேறுவது கஷ்டம்தான் என்று.”