Home தொடர்ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

by Iyappan Krishnan
0 comments

பழைய குளம்;
குதித்த தவளை
நீரின் ஓசை!

பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானியக் கவிஞர் மாட்சுவோ பாஷோ எழுதிய இந்த மூன்று வரிகள்தான், உலக இலக்கிய வரலாற்றில் ஹைக்கூவின் முகவரியாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

ஒரு சாதாரண தவளை நீருக்குள் குதிக்கும் நிகழ்வை, பிரபஞ்சத்தின் மகத்தான மௌனத்தோடு இணைத்து ஒரு தியான நிலைக்கு வாசகனை இட்டுச் செல்வதுதான் மரபான ஹைக்கூவின் அடிப்படை நாதம்.

ஜப்பானிய இலக்கியத்தில் இது வெறுமனே ஒரு கவிதை வடிவமாகத் தோன்றாமல், இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியல் தத்துவமாகவே மலர்ந்தது.

ஹைக்கூ என்ற வடிவம் ஒரே இரவில் தோன்றிவிடவில்லை. அதற்குப் பல நூற்றாண்டுகளின் இலக்கியப் பரிணாமம் உள்ளது. ஜப்பானிய மரபில் ‘டான்கா‘ எனப்படும் முப்பத்தியொரு ஒலிகளைக் கொண்ட கவிதை வடிவம் தொன்றுதொட்டு இருந்து வந்தது.

காலப்போக்கில் இந்த டான்கா வடிவத்திலிருந்து ‘ரெங்கா‘ எனப்படும் தொடர் கவிதை எழுதும் முறை உருவானது. ரெங்கா என்றவுடன் நம் ஊரின் ரெங்கநாதனை நினைத்துக்கொள்ள வேண்டாம்.

ரெங்கா என்பது பல கவிஞர்கள் ஒன்றாக அமர்ந்து, ஒருவர் மாற்றி ஒருவர் என ஒரு சங்கிலித்தொடர் போல வரிகளை இணைத்து எழுதும் ஒரு கூட்டு இலக்கிய விளையாட்டு. ரெங்கா என்ற ஜப்பானியச் சொல்லுக்கு இணைக்கப்பட்ட கவிதை எனப் பொருள் வரும்.

இந்தக் கவிதையின் முதல் பத்தியை ‘ஹொக்கு‘ என்று அழைத்தார்கள். ஹொக்கு என்பது 5-7-5 என்ற ஒலி அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.

ஒவ்வொரு கவிஞரும் தனக்கு முன்னால் எழுதப்பட்ட வரியை மட்டுமே அடிப்படையாக வைத்து அடுத்த வரியை எழுத வேண்டும். ஒட்டுமொத்த கவிதையும் ஒரே கதையாகவோ அல்லது ஒரே கருப்பொருளிலோ இருக்கக் கூடாது. ஒவ்வொரு வரியிலும் கவிதையின் தளம் முற்றிலும் புதிய திசைக்கு மாற வேண்டும். இக்கவிதை சங்கிலித்தொடராய் நீண்டுகொண்டே செல்லும்.

நூறு வரிக் கவிதைகள் வடிவிலிருந்து முப்பத்தியாறு வரிக் கவிதையாக இது பரிணாமம் அடைந்தது. பிற்காலக் கவிஞர்கள் இதில் நகைச்சுவை, எளிய மக்களின் எதார்த்த மொழி மற்றும் நையாண்டிகளைப் புகுத்தி எழுதினர். இது ‘ஹைக்காய்‘ என அழைக்கப்பட்டது.

மேலும், ஒரு ரெங்கா கவிதை எப்படித் தொடங்குகிறது என்பதை இந்த ஹொக்குதான் தீர்மானிக்கும் என்பதால், இதில் பருவகாலத்தைக் குறிக்கும் ஒரு சொல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற இலக்கணமும் தோற்றுவிக்கப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை, இந்த ஹொக்கு என்பது கவிஞர்களின் ஒரு சமூக விளையாட்டாகவும், அறிவுக்கூர்மையைக் காட்டும் ஒரு பகட்டான உத்தியாகவுமே பார்க்கப்பட்டது. இந்த நிலையை அடியோடு மாற்றியவர் மாட்சுவோ பாஷோ.

அவர் இந்த ஹொக்கு வரிகளை ரெங்கா சங்கிலியிலிருந்து விடுவித்து, அதற்கு ஒரு சுதந்திரமான, தத்துவார்த்தமான உயிரைக் கொடுத்தார்.

பாஷோ தனது கவிதைகளில் ஜென் பௌத்தத் தத்துவத்தின் சாரத்தை ஆழமாகப் பாய்ச்சினார்.

பிரம்மாண்டமான கற்பனைகளுக்கோ, அலங்காரமான வார்த்தைகளுக்கோ அவர் இடம் கொடுக்கவில்லை. எளிமை, நிலையாமை மற்றும் முற்றுப்பெறாத அழகியல் கோட்பாட்டை அவர் கவிதையின் ஆதாரமாக்கினார்.

ஒரு பனித்துளியில் சூரியனைக் காண்பது போல, ஒரு மிகச்சிறிய கணத்தில் வாழ்வின் பேருண்மையைப் பொதிந்து வைக்கும் கலையாக ஹொக்கு வடிவம் பாஷோவால் உருமாற்றம் கண்டது.

பாஷோவிற்குப் பிறகு இந்த வடிவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் யோசா புசான் மற்றும் கோபயாஷி இசா ஆகிய இருவருக்கும் பெரும் பங்குண்டு.

புசான் ஒரு புகழ்பெற்ற ஓவியர் என்பதால், அவரது கவிதைகள் மிகத் துள்ளியமான காட்சிப் படிமங்களைக் கொண்டிருந்தன. உணர்ச்சிகளைக் காட்டிலும் ஒரு புகைப்படத்தைப் போல இயற்கையை அப்படியே அதன் தூய்மையுடன் பிரதிபலிப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

அவருக்குப் பின் வந்த கோபயாஷி இசா, ஹைக்கூவில் ஆழமான மனிதநேயத்தையும், பரிவுணர்வையும் கொண்டு வந்தார்.

பாஷோவின் கவிதைகளில் இருந்த ஆன்மீகத் தீவிரத்திற்குப் பதிலாக, இசாவின் கவிதைகளில் நத்தைகள், ஈக்கள், எறும்புகள் போன்ற எளிய உயிரினங்கள் மீதான எல்லையற்ற கருணை மேலோங்கியிருந்தது.

பாஷோ, புசான், இசா ஆகியோர் வாழ்ந்த காலம் வரை இந்தக் கவிதை வடிவம் ஹொக்கு என்றே அறியப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மசோகா ஷிகி என்ற கவிஞர்தான், இது ரெங்காவின் ஒரு பகுதி அல்ல, இது ஒரு முழுமையான தனித்துவமான கவிதை வடிவம் என்று ஆணித்தரமாக நிறுவினார். அவரே முதன்முதலில் இந்த வடிவத்திற்கு ‘ஹைக்கூ‘ என்று பெயரிட்டார்.

அரசவைகளிலும் அறிஞர்களின் கூட்டங்களிலும் மட்டும் சுழன்று கொண்டிருந்த ஒரு கவிதை வடிவம், பாஷோவின் மூலம் இயற்கையின் மடிக்கு வந்து, இறுதியில் ஷிகியின் மூலம் ஹைக்கூ எனப் பெயர் சூட்டப்பட்டு உலக இலக்கிய வீதிக்குள் நுழையத் தயாரானது.

(தொடரும்)

Series Navigation<< ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம்

Author

You may also like

Leave a Comment