இரா. முருகன் அண்ணனைத் தொடர்பு கொண்டபோது வலைக் குழுமங்களில் அவரது எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவரது புதுக்கவிதை ஒன்றில் வசப்பட்டு, பாராட்டி அவருக்கு எழுதியபோது, அவரது சிந்தனைகளின் புதிய கோணம் தெரிந்தது. தெரிந்ததுதானே தவிர புரியவில்லை. அது மாயாஜால யதார்த்தம் என்பது அப்பொழுது விளங்கவில்லை.
அதற்கு முன்பு வாசித்த மாயாஜால யதார்த்த எழுத்துகள் லா.ச.ரா-வினுடையவை. அங்கங்கு தீப்பொறிகள் போல வார்த்தைகள் வந்து விழும் லா.ச.ரா-வின் எழுத்துகளில் மாயாஜால எதார்த்தம் (உதாரணம் “பச்சை”) உள்ளூற ஓடும். கோணங்கி அவர்களின் படைப்பில் மிகச் சிக்கலான வார்த்தைப் பிரயோகத்தில் அதனை ரசிக்கலாம் (‘உப்புக்கத்திக்குள் மறையும் சிறுத்தை’). அத்தோடு ஜெயமோகன் அவர்களின் ‘மாடன் மோட்சம்’, யட்சிணிக் கதைகள் போன்றவை ஆழமாக மாயாஜால யதார்த்தத்தில் ஓடினாலும், கதையின் அளவு கொண்டு பார்த்தால், இரா. முருகன் முன் நிற்கிறார்.
மிகப் பெரிய திரை வீச்சு, அனைத்திலும் பலப்பல மாயாஜாலப் பாத்திரங்கள், ஒழுங்கு பிசகாமல் கதையெங்கும் நடமாடுவதை ரசிக்க வேண்டுமானால், வாசிக்கச் சற்றே மெனக்கெட வேண்டும். ‘அரசூர் வமிசம்’, அதன் தொடர்ச்சியான ‘விஸ்வரூபம்’, ‘அச்சுதம் கேசவம்’ மற்றும் ‘வாழ்ந்து போதீரே’ போன்ற புதினங்களின் ஆழமும், வீச்சும், கதையின் அளவும் பிரமிக்க வைப்பதோடு, அதனுள்ளூடும் தருக்கம், கதைத் தொடர்ச்சி ரசிக்க வைக்கிறது.
அண்ணனிடம் மாயாஜால யதார்த்தத்தைப் பற்றிப் பேசும்போது கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், முருகாமி என்று எடுத்தால், அதிகம் பேச்சை வளரவிடாமல் புறந்தள்ளிவிடுவார். “தம்பி, நம்ம ஊருக்குன்னு தொன்மங்கள், நம்பிக்கைகள், கதைகள், சடங்குகள் இருக்கு. அதைப் பிடிச்சு வெளிச்சம் போட்டுக் காட்டணும். பன்னாட்டுப் பிரபலங்களை எல்லாம் வாசி. வேணாங்கலை. ஆனா நம்ம ஊருக்குன்னு இருக்கிற கதையில ஊர் மண், மொழியோட மணம் இருக்கு. அதை உணர்ந்து பார்.” இத்தனைக்கும் பல தரப்பட்ட புத்தகங்களின் வாசிப்பு அவருக்குப் பலமாக உண்டு. தன்னை ஒரு ‘anglophile’ என்று சொல்லிக்கொள்ளவும் செய்வார். சில ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளை அனுப்பி வைத்து “வாசிச்சுப் பாரு” என்பார் சுருக்கமாக.
அவரது கதைகளில் இருக்கும் விஸ்தரிப்பு, மனிதர்களிடமான தொடர்புகளில், செய்திகளில் காணப்படாது. ரத்தினச் சுருக்கமாக “Read this and let me know” என்பார் ஒரு கவிதையை அனுப்பிவைத்து. ஆங்கிலப் படைப்புகள் மட்டுமல்ல, தமிழ் சங்ககால இலக்கியத்தில் அவருக்கு மிக நாட்டம் இருந்தது. வாசகசாலை அமைப்பு, தனது முதல் வருட சந்திப்பில், எனது ‘7.83 ஹெர்ட்ஸ்’ பற்றி அலச அழைத்தபோது, மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டு வந்தார். நிகழ்ச்சி தொடங்குமுன், பனுவல் புத்தகசாலையில் இருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் இரா. ராகவையங்காரின் சங்க காலக் கவிதைகள் பற்றிய ஒரு புத்தகமிருப்பதைப் பார்த்து உடனே வாங்கினார். “பி.ஏ.கே அண்ணா இந்த புத்தகம் பற்றிச் சொல்லியிருக்கார்” என்றவர், அதோடு நேருவின் ஒரு புத்தகமும் வாங்கினார். “என்னண்ணா காம்பினேஷன் இது?” என்று சீண்டினேன். சிரித்துக் கொண்டே “கதம்ப சாதம் எப்பவும் சுவையா இருக்கும். ஆனா அதுக்கும் பிச்சைக்காரன் பாத்திரத்துல இருக்கிற கலவைக்கும் வித்தியாசம் இருக்குல்ல?” என்றார். ஒரு நகைச்சுவை எப்போதும் அவரது வார்த்தைகளில் ஓடிக்கொண்டே இருக்கும். அது தெறித்து கதைகளிலும் வரும்.
உதாரணமாக ‘அரசூர் வமிச’த்தில் வரும் புஸ்தி மீசைக் கிழவனின் இறுதி ஊர்வலம், அவர் மலையாள நாட்டுக்குப் போன கதை, பழுக்காவெட்டி தகடுகளில் கர்ணகடூரமான இசை, பனியன் சகோதரர்கள் என்ற பாத்திரங்கள் கொண்டு வரும் நகைச்சுவை அந்தக் பாத்திரங்களுக்கு உகந்தவையாக இருக்கும். சிலருக்கு இதில் மாறுபட்ட கருத்து இருந்தது. அதையும் அவர் ஒத்துக் கொண்டார். “வாசிக்கிறவன் என்ன சொல்றானோ அதுதான் சரி. நாம எழுதறப்போ நாம நினைக்கறதுதான் சரி. ரெண்டுக்கும் நடுவுல ஒரு இடைவெளி இருக்கு பாத்தியா? அதுலதான் வேறுபட்ட ரசனை என்கிற கதம்பம் வந்து நிக்கறது. அதை மறுக்காம உள்வாங்கி, சிந்திச்சாத்தான் நல்ல ரசனை, நல்ல எழுத்து வளரும்” என்றார், ஸ்ரீனிவாசன், வல்லபா ஸ்ரீனிவாசன் தம்பதியர் வீட்டில் நடந்த நண்பர்களுடனான ஒரு சந்திப்பில் அவர் வந்தபோது.
‘அரசூர் வமிசம்’ புத்தகம் என்னிடம் இருமுறை நிற்காமல் போனது பற்றி அவரிடம் சொன்னேன். எனது நண்பர் ஒருவர் அது திகில் நிறைந்த பேய்க்கதை என்று தவறாக எண்ணி, எடுத்துக் கொண்டு போய், கடுப்பாகி அழைத்துச் சொன்னதைச் சொன்னபோது, வெகுவாக ரசித்துச் சிரித்தார். “போட்டும் தம்பி, அடுத்த தடவ வீட்டுக்கு வர்றப்போ ஒண்ணு தர்றேன்” என்றவர் மறக்காமல் ‘அரசூர் வமிசம்’ பிரதி ஒன்றைப் பரிசளித்தார். அத்தோடு ஒரு வேஷ்டியும் துண்டும். “எதுக்குண்ணா?” என்றபோது “அண்ணான்னு சொல்லிட்டே. நீ தம்பி. முத தடவையா வர்றே. மறுக்காம எடுத்துக்கோ” என்றார். தருக்கமும், எழுதுவதில் அசுரத்தனமான ஒழுங்கும், சிக்கலான மாயாஜால பாத்திரப் படைப்புகளைத் தீவிரமாக சிந்திப்பதிலும் அவருக்கு இருந்த அதே அளவு, மிக மென்மையான, உணர்ச்சிவசப்படக்கூடிய அன்பும், மனிதநேயமும் அவருக்கு இருந்தன.
எங்கள் இருவருக்கும் மலையாளம் தெரியும் என்பதால், தமிழ் தாண்டி மலையாள இலக்கியம், சினிமாப் பாடல்கள் என்று பேசிக் கொண்டிருந்தோம். மலையாளத்தைப் பற்றி சிலாகிக்கையில் “அதுக்கு தமிழ், சமஸ்கிருதம்னு பெற்றோர் பாத்தியா? அதான் வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை. தமிழ் வார்த்தை கிடைக்கலைன்னா, சமஸ்கிருதம் இருக்கும். வடமொழி வார்த்தை வரலைன்னா, தமிழுக்கு வந்துடுவான்கள்” என்பார். மலையாள கவிதைகளில் 60-80கள் வரை படிமங்கள் அதிகம் வந்ததைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன். “ஒரு எக்ஸாம்பிள் சொல்லு” என்றார். ‘சன்யாஸினி’ என்று வரும் திரைப்படப்பாடல் வரிகளை அவருக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “நாலைஞ்சு வரிகள் அப்படியே அசைச்சுடுத்து தம்பி. என்ன ஒரு இமேஜரி?! பிரமாதம்” என்றவர் சில வரிகளை ரசித்துச் சொல்லிக் காட்டினார். வயலார் ராமவர்மாவின் கவிதைகள் பலவும் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர் சில நாட்களில் அறிந்து கொண்டபின், எனக்கு அவர் அனுப்பிவைத்த வாட்ஸ்அப் செய்திகள் சற்று அதிகமாயின. “Listen to this” என்று மட்டும் வார்த்தைளுடன்.
பின் சில நாட்களில் குறுஞ்செய்திகள் வருவது குறையத் தொடங்கியது. எழுதுவதில் மும்முரமாக இருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். நானும் அதிகம் அவருக்கு மலையாள கவிதைகள் அனுப்பிவைப்பதைச் சற்றே குறைத்தேன். அவர் “மிளகு” எழுதிக் கொண்டிருந்த நேரம். திடீரென ஒரு நாள் அழைப்பு வந்தது. “காப்பி தமிழ்நாட்டுக்கு வந்த காலகட்டம் எதுவாயிருக்கும்னு ஒரு தடவை ஃபேஸ்புக்ல எழுதியிருந்தேன். அது சரியாயிருக்கும்னு ஆதாரங்கள் கிடைச்சிருக்கு. சந்தோஷமாயிருந்தது. அதான் கூப்பிட்டேன்” என்றார். ஒவ்வொரு சிறு செய்திக்கும் உண்மைத்தன்மைக்கு உசாத்துணைகள் வேண்டுமென்பதில் அதீத ஆர்வம் காட்டுவார். அது அறிவியல் சார்ந்ததாக இருப்பினும், மாயாஜால யதார்த்தம் சார்ந்ததாக இருப்பினும் – நிகழ்வு வரலாறு சார்ந்தது என்றால் அதற்கு நிஜமான சான்றுகள் இருக்கவேண்டும் என்பதில் அவர் சமரசம் என்றும் செய்ததில்லை.
அந்த உரையாடலின் இறுதியில் “சென்னை வர்றப்போ வாங்க” என்றார். அது மனதை நெருடியது. “என்னண்ணா, என்னைப் போய் வாங்க போங்கன்னு மரியாதையாகக் கூப்பிடறீங்க?” என்றேன். அவர் சுதாரித்துக் கொண்டு “ஓ, சுதாகர் இல்ல, நீ தம்பி. உன்னை நீன்னுதான் சொல்லணும்” என்று தனக்கே உரக்கச் சொல்லிக்கொண்டார்.
ஏதோ இருவருக்குமிடையே அநியாயமாகப் புகுந்து கொண்டது போன்ற ஒரு தடையை உணர்ந்தேன். அது அவரது மறதியின் தொடக்கம் என்பது எனக்குத் தெரியவில்லை. பின் அவரே சொன்னதும் ஒரு தாக்கம் வந்தாலும், அந்த முதல் நிகழ்வு ஆழமாக நெருடியதை என்னால் மறக்க முடியவில்லை.
மெல்ல மெல்ல ஓர் பனை மரம் சாய்ந்து கொண்டே வந்ததை இயலாமையுடன் வருத்தத்துடன் பார்க்க மட்டுமே முடிந்தது. ‘விஸ்வரூபம்’ என்ற அசுரத்தனமான வடிவில் எப்படியண்ணா எழுத முடிந்தது என்று கேட்டதற்கு அவர் சொன்னது “பையத் தின்றால் பனையும் திங்காம்”.
நான் புரிந்து கொண்டேனோ இல்லையோ மறதி என்ற Dementia அதனைப் புரிந்து கொண்டிருந்தது.