- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15: அட இராவணா
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16: அணக்க நகரம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை
புஷ்பக விமானத்தில் நின்றிருந்த இராவணனின் கண்கள், கீழே எரிந்துகொண்டிருக்கும் இலங்கையைப் பார்த்துக் கலங்கி நின்றன. இலங்கை, அவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அவனது பெருங்கனவு. தேவர்களின் பொறாமையைத் தூண்டிய மாபெரும் பேரரசு. அசைக்க முடியாதது என்று அவன் நம்பியிருந்த அந்தக் கோட்டை, இன்று ஒரு சாதாரணக் குரங்கினால் சின்னாபின்னமாக்கப்பட்டு எரிந்துகொண்டிருந்தது.
இதுவரை தான் அறிந்திராத ஒரு உணர்வை இராவணன் முதல்முறையாக உணரத் தொடங்கினான். எட்டு திக்கும் வென்றவன், தேவர்களும் அசுரர்களும் முடி தாழ்த்தி வணங்கியதில் அவன் கால்களில் ஏற்பட்டிருக்கும் நிரந்தர வடு ஒன்றைச் சுமந்திருக்கும் பேராண்மையின் இலக்கணமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் நெஞ்சில், அச்சம் என்ற ஒற்றை உணர்வு ஒரு மெல்லிய விஷ வேரைப் போல இறங்கியது.
அச்சம் எந்தக் காலத்திலும் அணுக விடாத, தன்னுள் எழவே கூடாத ஒரு மாபெரும் பலவீனம் என்பதை அறிந்திருந்தும், அவனால் அந்த அச்சத்தைத் தவிர்க்க முடியவில்லை. அவமானம் அவனது தொண்டையை அடைத்தது. தன் தோல்வியின் ஆரம்பப் புள்ளி எது என்பதை யோசிக்கத் தொடங்கியவன் கண்முன்னே விரியும் இலங்கை நகரத்தின் அழிவுக் காட்சிகள் அவன் சிந்தனைக்குத் தடை போட்டன.
அரக்கர்கள் கூட்டம் முன்பு இராவணன் ஒரு மிகச்சிறந்த தலைவன், இயற்கையை ஆராதிப்பவன். அவன் தன் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் நேராமல் பார்த்துக் கொண்டவன். இலங்கை முழுவதும் தங்க மாளிகைகளுடன் கூட அடர்ந்த பசுமரங்கள் எங்கும் நிறைந்திருப்பதை உறுதி செய்தவன். அவன் கண்முன்னே அவை அனைத்தும் சிதைந்து கிடப்பதை மீண்டும் மீண்டும் கண்கள் வறண்டு, உள்ளம் கசிந்து நோக்கினான்.
நெருப்பின் நாக்குகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் எளிய அசுர மக்கள், தீப்பற்றி எரியும் காடுகள், அலறித் துடிக்கும் குதிரைகள், பிளிறும் யானைகள் என இவற்றைக் கண்டதும் இலங்கையின் பேரரசன் விழித்துக்கொண்டான். புஷ்பக விமானத்தில் இருந்தபடியே கீழே தவித்துக்கொண்டிருந்த தளபதிகளுக்குப் பெருங்குரலெடுத்துக் கட்டளையிட்டான்.
“முதலில் நம் மக்களைக் காப்பாற்றுங்கள். எளிய மக்களின் குடிசைகளுக்கு அரண் செய்ய எஞ்சியிருக்கும் படைகளை அனுப்புங்கள்!” என்று கூவினான். தன் மக்களைக் காக்கத் தவறிய குற்ற உணர்வு அவனைத் தின்னத் தொடங்கியது.
அவனது பத்து குணங்களும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டுக் கொண்டு சாடத் தொடங்கின. அவனுக்குள் மாபெரும் உள்ளப் போராட்டம் தொடங்கியது.
“இராவணா, பார் உன் செயலின் விளைவை! அறம் தவறியதால் வந்த முதல் எச்சரிக்கை. இனியாவது உன் பிழையை உணர். சீதையை மரியாதையாகத் திருப்பி அனுப்பிவிடு. உன் மக்களையும், இந்த மாபெரும் அரக்கர் குலத்தையும் அழிவிலிருந்து காப்பாற்று. சீதையை விட்டுவிடு” என்று ஒரு மனம் மன்றாடியது.
இராவணனின் மனம் ஒரு கணம் அறத்தின் பக்கம் சாய்ந்தது. அவன் சீதையைத் திருப்பி அனுப்ப முடிவெடுக்கும் அந்த விநாடியில், அவனது இன்னொரு மனம் செருக்குடன் சீறியது.
“இராவணா, நினைத்துப் பார் உன் பெருமையை! தினமும் வாயு தேவன் தென்றலாக வந்து உன் இலங்கையின் தெருக்களைச் சுத்தம் செய்தவன்; அங்கே வருணன் நீர் தெளித்தவன். காமனின் வில் கொண்டு தெருக்களில் கோலமிட்டு மகிழ்ந்தவன் நீ. ஒரு குரங்கு வைத்த தீக்கு அஞ்சி நான் சீதையைத் திருப்பிக் கொடுத்தால், நாளை இந்த மூவுலகமும் என்னை எள்ளி நகையாடாதா?”
இராவணன் மூச்சு விடவும் சிரமப்பட்டான். அது புகை சூழ்ந்ததாலா இல்லை உள்ளத்தின் கூக்குரல்களின் தாக்கத்தாலா என்பதை அவனால் பிரித்தறிய முடியவில்லை.
“ஆம் இராவணா, இந்த நகரம் இப்போது எரிந்திருக்கலாம். ஆனால் நன்றாகப் பார், அழிந்தவை கட்டிடங்களும், போர்க் கருவிகளும், மாளிகைகளும்தான். மக்கள் துன்பத்தில் இருந்தாலும் எல்லோரும் இறந்துவிடவில்லை. இறந்தவர்களையும் கூட இந்திரனின் அமுதம் கொண்டு உயிர்ப்பிக்கலாம். ஆனால் நீ இப்போது பின்வாங்கினால்… என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பார்!” என்று சீறியது.
“சீதை உன் அரியணைக்கு ஓர் அணிகலனாகத் தகுந்தவள் தான் இராவணா, அஞ்ச வேண்டாம். மீண்டும் இந்த நகரைப் புனரமைக்கும் பணிகளை உன் அடிமை தேவத்தச்சன் மயனிடம் ஒப்படை. இது சிறிய பின்னடைவு. இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அடுத்த நகர்வை கவனி,” என்றது.
இராவணன் உடனடியாகச் செயல்பட்டான். அறம் என்பது தான் செய்யும் ஒன்றாக இருக்க வேண்டும்; தான் செய்வது எதுவாகிலும் அதுவே அறமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற உறுதியை அவன் உள்ளம் பூண்டது. மயனுக்கு இலங்கையை மறுசீரமைக்கும் உத்தரவை இட்டுவிட்டு, தத்தளிக்கும் மக்களைக் காப்பாற்ற மேலிருந்தே தன் மேற்பார்வையைத் தொடர்ந்தான்.
அதே நேரம் அழிக்கப்படாமல் மிச்சமிருந்த அசோகவன மரங்களில் ஒன்றின் உச்சியில் இருந்து சூர்ப்பனகை, இந்த ஒட்டுமொத்தப் பேரழிவிற்கும் காரணமான ஒருத்தி தனித்து நின்று அந்த நெருப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
சூர்ப்பனகை அந்த நெருப்பை அணைக்க ஒரு குடம் தண்ணீரைக் கூட ஊற்றவில்லை. மாறாக, மாளிகைகள் வெடித்துச் சிதறுவதையும், அரக்கர்கள் அலறியடித்து ஓடுவதையும் ஒரு குரூரமான திருப்தியோடு அவள் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தாள். சூர்ப்பனகையின் நெஞ்சில் எரிந்துகொண்டிருந்த நெருப்பு, அனுமன் வைத்த நெருப்பை விடப் பல மடங்கு கொடியது. தன் கணவனைக் கொன்று அவளது உலகில் யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திய இராவணன் திண்டாடுவதைக் கண்டு அவள் மனம் மகிழ்ந்தாலும், அவளுக்குள் ஒரு மிகப்பெரிய உள்ளப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
நெருப்பைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த அவளது கண்களிலிருந்து, அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்து சூடான கன்னங்களில் சுட்டது. ‘நான் என்ன செய்துவிட்டேன்? என் கணவனைக் கொன்றவனைப் பழிவாங்க நினைத்த நான், என் சொந்த மக்களின் அழிவுக்கு நானே காரணமாகிவிட்டேனே. நாம் பிறந்து வளர்ந்த, நம் மூதாதையர்கள் ஆண்ட இந்தத் தங்க நகரம், இன்று என் ஒற்றைச் சூழ்ச்சியால் சாம்பலாகி விட்டதே!’ என்ற மாபெரும் குற்ற உணர்வு அவளது கழுத்தை நெரிப்பது போல அழுத்தியது.
அவளுக்குத் தெரியும், இராமன் என்ற மனிதன் ஒரு காரணம் மட்டுமே. அனுமன் வைத்தது வெறும் நெருப்பு. ஆனால் இந்த ஒட்டுமொத்தப் போருக்கும், இலங்கையின் அழிவிற்கும் உண்மையான சாசனத்தை எழுதியது அவள்தான் என்று. அவள் இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளின் சுழலில் சிக்கித் தத்தளித்தாள்.
அவளது ஒரு கண் தன் கணவனுக்காகப் பழிதீர்த்த மகிழ்ச்சியில் சுடர்விட, அவளது மறுகண் தன் அண்ணனான இராவணனின் எந்தக் குற்றமும் புரியாத பல இலங்கை மக்களின் வீழ்ச்சியை நினைத்துக் குற்ற உணர்வில் கண்ணீர் வடித்தது.
வானுயர்ந்த அந்த அசோகவன மரத்தின் உச்சியில் நின்றபடி அவள் சுற்றிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் அனுமன் கடலுக்குள் சென்று தன் வாலை மூழ்கச் செய்தாலும் அந்த நெருப்பு கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது. இராவணன் சபையில் அனுமனுக்குச் சொன்னதை அவள் நினைவுகூர்ந்தாள். அது எச்சிலால் மட்டுமே அணையக் கூடிய நெருப்பு என்பதை அனுமன் மறந்துவிட்டான் என அவள் நினைத்திருக்கும் நேரத்தில், அனுமன் தன் வாலை எடுத்துச் சுருட்டித் தன் வாயிலிட்டான். வால் மீண்டும் வெளியே வந்த போது தீ அணைந்துவிட்டிருந்தது.
இன்னொரு காட்சியாகச் சீதையின் முகம் வழக்கமான சோகம் இழந்து மலர்ந்திருப்பதைக் கண்டாள். சீதையின் மீது அவளுக்குள் இதுவரை இருந்த பரிதாப உணர்வு மறைந்து சினம் துளிர்த்தது. இலங்கையை அழித்துக் கொண்டிருப்பது இராவணனின் காமத்தீ; அடுத்து தன்னுடைய சூழ்ச்சித் தீ; கடைசியாகத்தான் அனுமன் வைத்த நெருப்பு சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கையில் அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
மனித மனம் என்பது தன் ஆழத்தில் ஒருபோதும் சமநிலையை விரும்புவதில்லை. அது படிநிலைகளையே தேடுகிறது. துயரத்தில் வீழ்ந்து கிடக்கும் ஒருவருக்கு நாம் கைகொடுக்கும் அந்தப் புள்ளியில், நம் மனம் தன்னைக் காக்கும் கடவுள் போல உருவகித்துக் கொள்கிறது.
அதே துயரம் கொண்டவர், நாம் எதிர்பார்த்த துயரத்தை விட்டு நீங்கி மீண்டெழும் போது அந்தப் படிநிலை தலைகீழாக மாறுகிறது. நம் உதவி அவருக்குத் தேவைப்படாது என்ற உண்மை உறைக்கும்போது, நம் அகம் தன் இருப்பை இழந்துவிட்டதாக அஞ்சுகிறது. அது மானுட செருக்கின் ஆகப் பழமையான இருண்ட நிழல்; சூர்ப்பனகையின் ஆழ்மனதில் அந்த இருள் படிந்தது.
ஒரு பக்கம், இலங்கையைக் கொளுத்திவிட்டு அந்த வானரம் மீண்டும் கடல் வழியே சென்றுவிட்டது. போர் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அதற்கான பலிபீடம் அங்கே முழுமையாகத் தயாராகிவிட்டிருந்ததை உணர்ந்தாள். அந்த நிலையில் சீதையின் துயரம் இல்லாத அந்த முகம் அவளுக்குள் வன்மத்தை ஊட்டியது. புகையின் நடுவே ஒளிர்விடும் தீச்சுடர் போன்ற அந்த சீதையின் முகத்தில் முன்பு கண்ட, தான் எதிர்பார்த்த சோகம் இல்லை என்றதும், அவள் சீதையை நோக்கி மெல்லிய குரலில் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
“சீதை, என் இலங்கை மக்களை நீ நினைத்திருந்தால் காத்திருக்க முடியும். உன் அடிமை வானரத்தை உன்னால் தடுத்திருக்க முடியும். ஆனால் அழிக்கவிட்டு அதைக் கண்டு மகிழ்கிறாய். இனி உன் அழிவில்தான் இந்த இலங்கை மீண்டெழும். அந்த அழிவை உனக்கு நான் பரிசளிப்பேன்,” என்றாள்.
(தொடரும்)