- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 13: நிலமே அம்மியாக, உடல் குழவியாக
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14: காற்றின் போர்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15: அட இராவணா
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16: அணக்க நகரம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 17: பகை மூட்டிய புகை
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 18: கருணையின் ஊற்று
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 19: புனரபி ஜனனம், புனரபி மரணம்..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 20: சஞ்சலத் தீ
- அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 1: கண்டேன் சீதையை
- அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 2: மயில் இராவணன்
சூர்ப்பனகை அந்த இடத்தை முதன்முறையாகக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். பூமியின் அடிவயிற்றில், ஒளியின் சுவடுகளற்ற நிசப்தப் பிரதேசம் அது. மயில் இராவணனின் பாதாள உலகம்.
மாற்றாந்தாயின் மகனாக இருந்ததால், இராவணனால் ஆட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, பாதாள உலகத்தை ஆண்டு கொண்டிருந்தான் அவன்.
பாதாளத்தில் அமைந்திருந்த அரண்மனையைக் கண்டு வியந்தாள் சூர்ப்பனகை.
அங்கே ஒளி என்பது சூரியனிடமிருந்து வருவதல்ல. சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த நாகரத்தினங்களிலிருந்து நீல நிற ஒளி கசிந்து, அறையெங்கும் படர்ந்திருந்தது. அந்த நீலம் அறையின் அந்தரங்கத்தைக் குலைக்காமல், ஒரு மெல்லிய போதையைப் போல விரவியிருந்தது. இருளைவிட அடர்த்தியான ஓர் அமானுஷ்யத்தை அது சுமந்து கொண்டிருந்தது.
அவள் மனம் இந்த நகரத்தை இலங்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தது. புதுப்பிக்கப்பட்ட இலங்கையின் சாம்பல் இன்னும் முழுமையாகக் குளிர்ந்திருக்கவில்லை. அசுர, தேவ சிற்பிகளின் கைவண்ணத்தால் எழுப்பப்பட்டிருந்த மாளிகைகளின் சுவர்கள் தங்கத்தாலும் வஜ்ரத்தாலும் பளபளத்தன. ஆனாலும், அந்த நகரத்தின் காற்றில் எரிந்த சதையின் நெடியும் கருகிய மரங்களின் மணமும் இன்னும் முற்றிலும் நீங்கியிருக்கவில்லை.
ஆனால் இங்கே காற்றில் ஒரு விசித்திரமான மணம் நிலவியது. சந்தனம், காய்ந்த ரத்தம், ஏதோ ஒரு காட்டு மூலிகையின் தைலம் ஆகியவை கலந்த மணம் அது. அதை முதன்முறையாகச் சுவாசிப்பவரின் மூளையை மழுங்கடித்து, மயக்கநிலைக்கு இழுக்கும் வல்லமை அதற்கு இருந்தது. சூர்ப்பனகை தன் மனதைத் திடப்படுத்தி அந்தச் சவாலை எதிர்கொண்டாள்.
அவள் மனம் இன்னும் இலங்கையின் அழிவிலிருந்து மீளவில்லை. அந்த நிகழ்வு இராவணனின் வீரத்தின் மீதிருந்த அவளது நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருந்தது. இனியும் இராமனை அழிக்கக்கூடிய சரியான வீரன்தானா இராவணன் என்ற கேள்வி அவள் மனத்தில் எழுந்தது.
இராவணனைப் பழிவாங்க நினைத்திருந்தாலும், அவள் இலங்கை மக்களை மிகவும் நேசித்தாள். தன் செயலின் காரணமாக இலங்கை எரிந்ததைக் கண்டு அவள் மனம் குமுறியது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை அவளுடைய மனம் நீண்ட நேரம் சுமப்பதில்லை. அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியைத் தேடும். இம்முறையும் நெருப்பில் சிக்கி இறந்தவர்களை நினைத்துக் கண்ணீர்விட்ட சீதையின் மீது பழியை இறக்கிவைத்தது.
இவள் சிறையில் இருக்கும் ஒரு மானுடப் பெண். “இவளுடைய கருணை என் மக்களின் பிணங்களின் மீது வீசப்படும் பிச்சை!” என்று கொதித்தாள்.
ஆரம்பத்தில் சீதையிடம் அவள் கொண்டிருந்த கருணை இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. தன்னை அவமதித்த இராமலக்குவர்களுடன் சீதையும் அழிய வேண்டும். இராவணனின் அழிவையும் சேர்த்தே காண வேண்டும். அதுவே இப்போது அவளுடைய நோக்கமாக மாறியிருந்தது.
இராவணனை மட்டுமே நம்பினால் இராமனின் அழிவு நிகழாது. மயில் இராவணனைத் தூண்டினால் அவன் இராமனை அழிக்கக்கூடும். இராமன் கொல்லப்பட்டால், தன் அனுமதியின்றித் தன் எதிரியை அழித்ததற்காக இராவணன் மயில் இராவணனுடன் போரிடக்கூடும். தன்னைவிடத் தாழ்ந்தவன் என்று கருதிய தம்பி தன் அனுமதியின்றி வெற்றி பெற்றதை இராவணனால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவனுடைய செருக்கு அவனைச் சண்டையிடத் தூண்டும்.
இருவரும் மடிந்தால், தன் பழி தீரும்.
இந்தக் கணக்குடன்தான் சூர்ப்பனகை பாதாள உலகத்திற்கு வந்திருந்தாள்.
“அரண்மனையை உன் அகன்ற கண்களால் அளந்து முடித்துவிட்டாயா, பெண்ணே?”
என்ற குரல் அவளைச் சிந்தனையிலிருந்து மீட்டது.
அவள் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
சாதாரண அசுரர்களைப் போலக் கரடுமுரடான கருங்கற்பாறையைப் போன்ற உடலமைப்பு அவனுக்கு இல்லை. விசித்திரமான ஓர் உலோகம் உருக்கி வார்க்கப்பட்டதைப் போன்ற நீல நிறப் பளபளப்பு அவன் உடல் முழுவதும் படர்ந்திருந்தது. மயிலின் கழுத்தில் மின்னும் அடர் நீலமும் நள்ளிரவு வானத்தின் கருநீலமும் கலந்த நிறம் அது. அவனுடைய தோள்கள் அகன்றிருந்தன. ஆனால் அவை வெறும் முரட்டுத்தனமான வலிமையை வெளிப்படுத்தவில்லை; கூர்மையான இரும்புப் பாளங்களைப் போலச் செதுக்கப்பட்டிருந்தன.
“என்னையும் அளந்து முடித்துவிட்டாயா?” என்று சிரித்தான்.
ஆனால் அவன் கண்கள் கூர்மையாக அவளுடைய கண்களை ஊடுருவின.
தந்திரக் கலைகளிலும் இருள் மாயைகளிலும் அவனை வெல்ல மூவுலகிலும் எவருமில்லை. இராவணனின் போர்முறைகள் நேரடியானவை. ஆனால் மயில் இராவணனின் போர்முறைகள் வேறானவை. எதிரியின் அகத்தைத் தாக்கி, அவனை மாயைகளில் சிக்கவைத்து அழிப்பவை.
“நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கும் தங்கையைப் பார்ப்பதில் ஏதேனும் குறை உண்டா, அண்ணா?” என்று நயமாகக் கேட்டாள்.
அவனுடைய கண்களில் பாதாளத்தின் இருள் உறைந்திருந்தது. அவன் அமைதியாகச் சிரித்தான்.
“உன் வரவு தீதற்ற நல்வரவாகட்டும், தங்கையே!” என்றான்.
அவனுடைய அமைதி சூர்ப்பனகைக்கு எரிச்சலை மூட்டியது.
“இலங்கையில் நடந்ததைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள், இல்லையா?” என்று கேட்டாள். அவளுடைய குரலில் வெறுப்பும் சினமும் கலந்திருந்தன. சம்பிரதாயமான மரியாதையை விலக்கிவிட்டு நேரடியாகப் பேசத் தொடங்கினாள்.
“உன் தாய்மண் சாம்பலாகிக் கிடக்கிறது, அண்ணா! மூவுலகையும் ஆண்ட இலங்கையின் சக்கரவர்த்தி, ஒரு சாதாரண வானரத்திடம் அவமானப்பட்டு நிற்கிறான். நம் ஒட்டுமொத்தக் குலத்தின் வேரிலும் ஒரு வானரம் தீ வைத்துச் சென்றுவிட்டது.”
“சூர்ப்பனகை, இலங்கை மீண்டெழுந்ததையும் நான் அறிவேன். என் ஒற்றர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். இலங்கை எரிந்தது ஒரு வானரத்தால் இல்லை. உன்னால் மூட்டப்பட்ட இராவணனின் காமத்தால்தான் அந்த அழிவு நிகழ்ந்தது.”
அவனுடைய குரல் கம்பீரமாக ஒலித்தது.
சூர்ப்பனகை ஒரு கணம் அதிர்ந்தாள். பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு,
“நீ தடுத்திருக்கலாம். உன்னால் அது முடிந்திருக்கும்!” என்றாள் சீற்றத்துடன்.
அவன் சிரித்தான்.
“தங்கையே, மாற்றாந்தாயின் மகன் என்பதால் இராவணன் என்னை ஒதுக்கி வைத்ததை நீயும் அறிவாய். மேலும், இராவணன் அழைக்காமல் அவனுடைய போரில் நான் தலையிடுவது அவனுக்கு அவமானமாகிவிடும்.”
“இலங்கை அழிந்த பின்னுமா இந்தத் தயக்கம்?” என்றாள் சூர்ப்பனகை.
“பெண்ணே, நீ வந்த காரணம் எனக்குத் தெரியும். அந்த வானரத்தை அழிக்க வேண்டி மட்டும் நீ என்னிடம் வரவில்லை. உன் பழியைத் தீர்த்துக்கொள்ள வந்திருக்கிறாய். அதுவும் இரட்டைப் பழி!”
மயில் இராவணன் நகைத்தான்.
“இரட்டைப் பழியா? என்ன சொல்கிறாய், அண்ணா?” என்றாள் சூர்ப்பனகை. அவளுடைய கண்களில் தோன்றிய அதிர்ச்சியை அவளால் மறைக்க முடியவில்லை.
“ஒருபுறம் இராவணனின் அழிவு, மறுபுறம் இராமனின் அழிவு. இரண்டையுமே விரும்பித்தான் இங்கு வந்திருக்கிறாய், தங்கையே!” என்றான் மயில் இராவணன் நிதானமாக.
“எப்… எப்படி?” என்று திணறினாள்.
“இது நான் சிருஷ்டித்திருக்கும் மாய உலகம், பெண்ணே! இங்கே நான் அறியாமல் உன் சிந்தனைக்குக்கூட உருவம் கிடைக்காது. இந்த உலகத்தை அவ்வாறுதான் கட்டமைத்திருக்கிறேன்.”
“அண்ணா…” என்றபடி அவள் ஆசனத்தில் தளர்ந்து விழுந்தாள். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். அந்த அழுகையில் உண்மையும், பல மாதங்களாகத் தனக்குள் தேக்கி வைத்திருந்த துயரத்தின் வலியும் கலந்திருப்பதை மயில் இராவணனால் உணர முடிந்தது.
மயில் இராவணனின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது. சிறுவயதில் தன்னுடன் அன்பாகப் பழகிய தங்கையின் துயரம் அவனையும் சலனப்படுத்தியது. அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசத் தொடங்கினான்.
“சூர்ப்பனகை, உன் துயரம் பெரியது. உன் நிலை யாருக்கும் வரக்கூடாத ஒன்று. அவன் என்னை வெறுத்தாலும் இராவணன் என் சகோதரன். அவனுடைய அனுமதியின்றி என்னால் செயல்பட முடியாது. பாதாள உலகத்திற்கு வருவதற்கு முன்பே எங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.”
“அப்படியானால்…” என்றாள் அவள் விம்மியபடி.
“இராவணன் என் அனுமதியின்றிப் பாதாள உலகத்திற்குள் நுழையக்கூடாது. அதேபோல், அவனுடைய அனுமதியின்றி நான் அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது. அந்த ஒப்பந்தம் என்னைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இராவணனின் செருக்கைப் பற்றி நீ அறியாதவளா?”
அவள் மௌனமாக இருந்தாள்.
“அவன் என்னைத் தனக்குத் தகுதியற்றவன் என்று கருதியதால், தம்பி என்றும் பாராமல் துன்புறுத்தினான். சிறுவயதில் அவனைத் தாக்க வந்த புலியைக் கொன்றுவிட்டேன் என்பதற்காக என்னைச் சாட்டையால் அடித்ததை நீ மறந்துவிட்டாயா?”
அளவற்ற செருக்கும் அகந்தையும் கொண்ட இராவணன் தங்கை என்றும் பாராமல் அவளின் கணவனையும் கொன்றான் என்பதை அவள் அறிவாள். மயில் இராவணனை நாடி வந்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.
இவர்களுக்கிடையிலான ஒப்பந்தம் முறிந்தால்…
தன் எண்ணம் எங்கே இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்தவள், அதை அத்துடன் நிறுத்திக்கொண்டாள்.
“நான் அறிவேன். அவனுடைய ஆணவமும் செருக்கும் எல்லை கடந்தவை,” என்றாள் தன் மௌனத்தைக் கலைத்து.
“ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது, பெண்ணே.”
“என்ன சிக்கல்?”
“இதில் எனக்குக் கிடைக்கும் பலன் என்ன? உங்களுடைய சண்டையில் நான் ஏன் தலையிட வேண்டும்?”
“இரண்டு பலன்கள் உண்டு, அண்ணா.”
“இரண்டு பலன்களா?”
“ஆம். முதலாவது, இலங்கை ஏற்கெனவே சிதிலமடைந்து மீண்டெழுந்திருக்கிறது. அதன் அழிவு இராவணனின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்தச் சமயத்தில் இராமனுடனான போர் அவனுக்குப் பெரும் சவாலாக இருக்கும். நீ இப்போது உதவினால், இராமனை வென்ற பிறகு உங்கள் இருவருக்குமிடையிலான பகையை மறந்து மீண்டும் ஒன்றுசேர முடியும்.”
மயில் இராவணன் அவளைப் பார்த்தபடி இருந்தான்.
“இரண்டாவது?”
“இராமனை வென்ற பிறகு, நீ விரும்பினால், உன் தங்கையான நான் உன்னை இலங்கைக்கு அதிபதியாக்க உதவுவேன். என் திறமை உனக்குத் தெரியாததல்ல.”
மயில் இராவணன் நகைத்தான்.
அவனுடைய நகைப்பு அரண்மனை முழுவதும் எதிரொலித்தது. ஆயிரம் குரல்கள் ஒரே நேரத்தில் சிரிப்பதைப் போன்ற பிரமையை அது உண்டாக்கியது. சதகண்ட இராவணன் என்று அவனுக்குப் பெயர் வந்ததன் காரணம் இப்போது அவளுக்கு விளங்கியது.
அவன் மனம் கணக்கிடத் தொடங்கியது. இராவணனைப் பழிவாங்கவும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. சூர்ப்பனகை தன் வலையை விரித்திருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனாலும், அந்த வலையின் வழியாகத் தனக்குக் கிடைக்கக்கூடிய பலன்களையும் அவன் கணக்கிட்டான்.
“பலே, தங்கையே! பலே! வீரத்தை விலக்கிச் சூழ்ச்சியால் வெல்ல நினைக்கிறாய். என்னிடமே உன் வலையை விரிக்கிறாய்!”
அவன் மீண்டும் சிரித்தான்.
“சரி. உன் திட்டத்தை ஏற்கிறேன். ஆனால் இராவணனின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் செயல்பட முடியும். அவன் அனுமதித்தால் இராமனையும் அவனுடன் வந்தவர்களையும் என்னால் அழிக்க முடியும்.”
“இராவணன் அனுமதிப்பான், அண்ணா. கட்டாயம் அனுமதிப்பான். நான் அனுமதிக்க வைப்பேன்!” என்றாள் சூர்ப்பனகை.
அவளுடைய கண்களில் அறையின் கருநீலத்தைவிட அடர்ந்த இருள் படர்ந்திருந்தது. அதன் ஆழத்தில் சூழ்ச்சியின் விஷம் மறைந்திருந்தது.
(தொடரும்)