ஜிடிஏ – 6 (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) என்ற ப்ளே ஸ்டேஷன் விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. அதில் கிராபிக்ஸ் என்பது உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதில் தெருக்களில் செல்பவர்களை வம்பிழுப்பதும் அவர்களை அடிப்பதும் கொல்@வதும் துப்பாக்கியால் சுடுவதும் என வன்முறையை மிக இயல்பாக இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லும் பல விஷயங்கள் உள்ளன. ஆழ்மன வக்கிரங்களை கழிவிறக்கம் செய்து கொள்ளும் அளவு அந்த வீடியோ கேமில் கொ@லைகளைச் செய்ய முடியும்.
இப்படியான வீடியோ கேமை ஒரே நேரத்தில் எந்த இடைவெளியும் விடாமல் தொடர்ந்து விளையாடி அந்த விளையாட்டில் தரக்கூடிய சவால்களை முடித்து 52 மணிநேரங்கள் தூங்காமல் ஐ ஷோ ஸ்பீடு எனும் யூட்யூபர் முடித்துள்ளார் எனும் செய்தி. இந்தச் செய்தி பெரிய சாதனை என்று எடுத்துக்கொண்டு பல இளையோரும் இதை பின்பற்றுங்கள் என்று கூறத்தக்க செய்தியா? இன்னும் ஒரு யூட்யூபர் அடல்ட் டயாபரை மாட்டிக்கொண்டு சிறுநீர், மலம் கழிக்கக்கூட எங்கும் செல்லாமல் இந்த கேமை தொடர்ந்து மூன்று நாட்களில் முடித்துள்ளார் எனும் செய்தியும் வருகிறது. இவற்றின் மூலம் இளைய சமுதாயத்துக்கு எவையெல்லாம் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படும்.
சும்மாவே ஆன்லைன் சமூகத்தில் பெறும் வியூஸ் – சப்ஸ்கிரைபர்கள் மூலம்தான் எதிர்காலம் என்ற அளவில் காலம் நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் வன்முறையைத் தூண்டும் இது போன்ற விளையாட்டுகளின் மீது அதிக மோகம் கொண்டு போதை வயப்பட்டு தொடர்ந்து நேரத்தை இதில் செலவிட்டால் அவர்களின் கல்வி உள்ளிட்ட எதிர்காலம் குறித்துப் பெரிய கேள்விக்குறியே எழும். சமூகத்தில் இளையோரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் சினிமா மீடியா ஒரு விதத்தில் வன்முறையை, போதை நுகர்வில் பாலின சமத்துவத்தை நார்மலைஸ் செய்து வருகிறது. மற்றொரு புறம் வீடியோ கேம்களிலும் வன்முறை மற்றும் பாலியல் வன்புணர்வு தொடர்பான விஷயங்கள் இடம்பெற்று அதிலும் அவர்கள் நீண்ட நேரங்களைச் செலவழிக்கும்போது இயல்பாகவே அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும்.
கல்வி மூலமும் உழைப்பு மூலமும் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும். வியூஸ் – சப்ஸ்கிரைபர்கள் மற்றும் ஆன்லைன் பிரபலத்துவம் என்பது நன்மையை வழங்குவதை விட ஆபத்தானது. அது இருபக்கம் கூர்தீட்டப்பட்ட கத்தி என்பதை அதைப் பயன்படுத்துவோர் அறிந்து கொள்ள வேண்டும். இளையோருக்கு எதை எடுத்துக்காட்டாகக் காட்ட வேண்டும் என்ற தெளிவும் வயது வந்தோருக்கு இருக்க வேண்டும். நல்லதோர் சமுதாயம் படைக்கக் கல்வியும் அன்புமே ஆயுதங்கள் என்றுணர்வோம்.
(தொடரும்)