வானூர்தி ஏறிய முதல் பயணத்தில்
வியப்பான புது நிலம் வந்தடைந்தோம்!
அன்னிய தேச புதிர் வாழ்க்கையில்
அடையாளம் தொலையாது பற்றிக் கொண்டோம்!
ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்தாலும்
அன்னைத் தமிழை என்றும் மறவோம்!
நவீனக் கலாச்சாரம் சூழ்ந்திருந்தாலும்
நற்றமிழ்ப் பண்பாடு மறையாதென்போம்!
அயர்ச்சியான கணினி வேலை செய்தாலும்
அமைதிக்குத் தமிழ்ப்பாடல்கள் துணை
கொள்வோம்!
அமெரிக்க உணவுகள் விதமாய் ருசித்தாலும்
ஆவி பறக்கும் இட்லிக்கு அடிமையென்போம்!
தொலைதூரம் கோவில் தேடிச் சென்று
குலதெய்வம் மனதில் தோன்றக் காண்போம்!
பணிக்கு கோட்டு சட்டை தானெனினும்
பண்டிகையென்றால் புடவை வேட்டியில் மகிழ்வோம்!
குழந்தைக்கு ஹாலோவீன் தின வேடமிட்டாலும்
கொலு வைத்து நவராத்திரியும் வழிபடுவோம்!
நன்றிநவிலும் நாளில் அயலகத்தார் விருந்துண்டு
வாழ்த்துக் கூறுமவர்களுக்கு தீபாவளி இனிப்பளிப்போம்!
கிருஸ்துமஸ் மரம் விளக்குச் சரங்களால்
குளிர்காலச் சோர்வு வீட்டினில் போக்குவோம்!
கோலத்தில் வைத்த கார்த்திகை தீபங்களால்
கண்கவர் ஒளியூட்டி மிளிரச் செய்வோம்!
மாகாணம் தோறும் சங்கம் வைத்து
தமிழ் உறவுகள் ஒன்றாய் இணைப்போம்!
அமெரிக்க மண்ணில் ஓர் அங்கமாகியும்
நம் பாரம்பரியம் செழிக்க வாழ்ந்திடுவோம்!