வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
நெஞ்சில் இருள்தேக்கி நேர்மையை விற்றழிக்கும்
வஞ்சக மாந்தர் வடிவதனை -மிஞ்சியதாய்
பாயுமிடம் பற்பலவாய் தர்மத்தை பந்தாடும்
பேயுண்டோ பாரில் பகர்
இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும், கவிதைகளும்:
இப்னு ஹம்துன்
பேராசை; புண்படுத்தும் பேச்சுடன் பொச்சரிப்பு
தீராத வஞ்சகத் தீச்செயல் – ஆறாத
நோயென ஆற்றாமை நோக்கம் இவையன்றி
பேயுண்டோ பாரில் பகர்
சின்னக்கண்ணன்
நல்விதம் தானொழித்து நன்றாய்ச் சிறுமையுடன்
அல்லன பேசி அழிவார்போல் – கொல்லென
வாயுடன் கூடவே வஞ்சகம் பேசிடும்
பேயுண்டோ பாரில் பகர்
மாலா மாதவன்
பொன்னை விரும்பி பொசுக்கினாய் நல்லுறவை
அன்பென்ற சொல்லை அவமதித்தாய் – பொன்னான
தாயுள்ளம் இல்லாத தாரமே உன்னைப்போல்
பேயுண்டோ பாரில் பகர்
ஹேமா செந்தில்
பேதை நெஞ்சில் போதைச் சொற்களை
விதைத்து காமத் தீ மூட்டி _குளிர்
காயும் காமுகனிடம் சிக்க
வயப்படா வசமற்ற நிலையில் சீரழிக்கும்
கயவனைத் தாண்டி ஒரு
பேயுண்டோ பாரில் பகர்
வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.