”கவிதை சொல்ல வந்தீங்களா?”
”ஆமாங்க”
நான், அந்தப் பெண், இன்னும் ஒரே ஒருவர்… மொத்தமே மூவர் தான் இருந்தோம்…
செல்லைப் பார்த்தேன். 1:54
ரெண்டு மணிக்குக் கவியரங்கம்னு அமைப்பாளர் கிட்ட இருந்து மெசேஜ் வந்திருந்தது.
”யாரும் வர்லீங்களா?”
“தெரிலீங்க…… நான் பன்னெண்டரைக்கு வந்தாச்சுங்க.”
வெயில் மற்றும் நேரமாகிவிட்டதென்ற பதைப்பில் அணிந்திருந்த புடவை வியர்த்து ஒட்டிக்கொண்டிருந்தது.
“இப்படி உக்கார்றீங்களா?” பையை நகர்த்தினார்……
“இல்லீங்க. கொஞ்சம் அந்த ஏசிக்கு நேரா உக்காந்துட்டு வரேன். பாருங்க. டிரெஸ்லாம் ஒட்டிக்கிச்சு”
மணி ரெண்டைத் தாண்டிவிட்டது. மேடையில் காலி நாற்காலிகள். யாரோ ஒருவர் மட்டும் லேப்டாப்பில் ஏதோ தட்டி ஏதோ கருவிகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தார்…
திடீரென ஒரு நாலைந்து பேர்….. அப்பாடா! நான் தனியாள் இல்ல………
“டீ இருக்குங்க… சாப்பிடறீங்களா?” யாரோ ஒரு பெண் வந்து சொல்லிவிட்டுப் போனாள்….
எழ கொஞ்சம் தயக்கமாய் இருந்தது….. அந்தப் பெண் மும்முரமாய் பேப்பரை வைத்து எதையோ திருத்தி எழுதியபடி இருந்தாள்.
மூணாம் வரிசையில் இருந்தவர் திரும்ப, கஷ்டப்பட்டு ஒரு சிரமப் புன்னகையை சிந்தினேன். “கவிதை சொல்ல வந்தீங்களா?”
“இல்லீங்க…. தெரிஞ்சவரு. ஆடியன்ஸா வாங்கன்னு கூப்டாங்க.”
ஏசி குளிருக்கு இதமா அவருடைய கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.
தூங்கறதானா பின்னாடி போங்களேன்னு சொல்ல நினைப்பதற்குள்,
“யோவ், தூங்கறதுன்னா பின்னாடி போய்யா…. மாசாமாசம் உன்னோட ஒரே ரோதனை…..”
பொசிஷன் பாத்துக்கொண்டிருந்த கேமராபையன் வள்ளென விழவே, அவர் தாடையைச் சொறிந்துகொண்டு பின் வரிசைக்கு நகர்ந்தார்….
‘டீ வந்துருச்சு போல’ன்னு முணுமுணுத்துக்கொண்டே வெளியேற,
“டீ சாப்பிடலாம் வரீங்களா?”
“இல்லீங்க. காலைலர்ந்து இன்னும் சாப்பிடலீங்க. இப்ப போய் டீ குடிச்சா வயத்த பொரட்டும்….”
“ஏன் சாப்டல?”
“லேட்டாயிருச்சுங்க…. ஒண்ணரைக்கெல்லாம் வந்துருங்கன்னு சொல்லிருந்தார். ஒம்போது மணிக்குச் சர்ச்சுக்குப் போயிட்டு மாஸ் முடிஞ்சு கெளம்பறச்சவே 12 ஆயிருச்சு….. இங்கிட்டு வந்து சாப்புடலாம்னு நெனச்சேன். இங்கன சாப்புடக்கூடாதுனு சொல்ட்டாங்க. படில ஒக்காந்து சாப்புடலாம்னா பாத்ரூம் வந்தா கஸ்டம்னு….”
“இங்க ரெஸ்ட் ரூம் இருக்குமேங்க….”
“ஒருத்தருமே இல்ல… அதான் போக பயமாருந்துச்சு. இந்த பைய பாத்துக்குறீங்களா?”
“ம்ம்ம்ம்…..” சிறிது நேரம் கழித்து வந்தாள். முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருந்தது.
“சாப்புடுங்க… புரோகிராம் ஆரம்பிக்க லேட்டாவும் போலருக்கே…..” மணி ரெண்டரையை தொட்டிருந்தது.
“இப்ப வேணாம்…. வெளில தான் சாப்புடணும்.” வெளியில் காரிடார் தூசு படிந்திருந்தது. ஒருவர் நிற்கலாம். யாரேனும் வந்தால் இடிக்காமல் நகர முடியாது. முடிஞ்ச பின்னாடி பாத்துக்கலாம்….
“டீ சாப்டுங்க… வெறும் சக்கரத்தண்ணி. இப்பவே ஆறிருச்சு. கொஞ்சமாத்தான் சூடு.”
கடமை முடிந்தாற்போல அந்த நபர் பின் வரிசைக்கு நகர்ந்தார்.
“எந்தூரு?”
“சென்னைதாங்க….. அடையார்! நீங்க?”
“திண்ணனூர்….”
“எங்கருக்கு?”
“அரக்கோணம் போற வழில….”
“அங்கேர்ந்தா வரீங்க?”
“கவிதை படிக்கறதுன்னா ரொம்ப புடிக்குங்க. அதான் கவியரங்கம்னதும் கெளம்பி வந்துட்டேன்… போன மாசமும் வந்தேங்க… வழி தெரியாம சுத்தி லேட்டாயிருச்சு. அதனால கடேசில தான் சான்ஸ் கெடச்சுது. அதான் இந்தத் தரம் சீக்கிரமா வந்துரலாம்னு…..”
“ஆமா…….. நீங்களும் தனியாவா வந்தீங்க?”
“இல்லீங்க… எங்க பிரெண்ட்ஸ் வருவாங்க. அஞ்சாறு பேர்… வேற புரோகிராம்ல இருக்காங்க. முடிச்சுட்டு வருவாங்க….”
“கொய்யாக்கா சாப்புடறீங்களா?” ஒரு கட்டப்பையை நீட்டினாள். உள்ளே இளம்பச்சை நிறத்தில் கொய்யாக்காய்கள்…
“எடுத்துக்குங்க… எங்கூட்ல காய்ச்சதுதான். நெறய இருக்கு. நேரா வந்துருந்தா இன்னும் கொண்டாந்திருப்பேன். சர்ச்சுக்குப் போய்ட்டு வரவேண்டிருந்ததால கொஞ்சம் தான் கொண்டாந்தேன். எடுத்துக்குங்க….”
ரெண்டை எடுத்துக்கொண்டேன். “இன்னும் கொஞ்சம் எடுத்துக்குங்க…” அஞ்சாறு எடுத்தேன். “போதுங்க. பேக் ஒண்ணுமில்ல. ஹேண்ட்பேக் அவ்ளோ தான் தாங்கும்…”
ஒருவழியாய், மூன்று மணிக்கு நிகழ்வு தொடங்கியது. “எப்போ கூப்டுவாங்க?”
ம்ஹூம்… யார்யாரையோ அழைத்தார்கள். சிலாகித்தார்கள், சிரித்துக்கொண்டார்கள், கெளரவித்தார்கள். அவள் நெளிய ஆரம்பித்திருந்தாள்.
ஒரு வழியாய் என் சக நண்பர்கள் வந்தாச்சு…. நான் அவர்கள் பக்கம் நகர்ந்தேன். அவள் முணுமுணுத்தாள்:
“நாலு மணிக்கு கெளம்பினாத்தாங்க ஆறு மணிக்குள்ள போவமுடியும். லேட்டாயிருச்சுன்னா, வண்டி கூட்டமாயிரும். வீட்ல திட்டுவாரு…”
மூணே முக்கால்… பொறுமை இழந்திருந்தாள்…
நிகழ்ச்சி அமைப்பாளர் ஏதோ ஒரு போன் கால் வர, மேடையிலிருந்து இறங்க,
“சார்! எப்ப சார் கூப்பிடுவீக…. நாலு மணியாவ போவுது…”
“என்னத்து வந்திருக்கீக…”
“சார் கவிதை படிக்க வான்னு நீங்கதானே போன் செஞ்சீங்க…”
“ஓ… சரி சரி உக்காருங்க… இன்னும் கொஞ்சம் பேர் வரணும்….”
அவள் பரிதாபமாய் எங்களைப் பார்த்தாள். “உக்காரும்மா! கூப்புடறோம்! குறுக்க நிக்காதீங்க,” அவர் மறுபடி மேடைக்குப் போனார்…
“இந்தாங்க…. இந்த கொய்யாக்காய உங்க பிரெண்ட்ஸுக்கு கொடுங்க…..’
ஒரு இருபது காய்கள் அவரவர் பாக்கெட்டுக்கும் பைக்கும் இடம் மாறின….
மணி நாலரை! ஒரு வழியாய் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடிக்க, துணிந்து மேடைப்பக்கம் நகர்ந்தாள்.
“சார், நாலே நிமிஷம்… சின்ன கவிதை தான்! படிச்சுட்டு கெளம்புறேன்… லேட்டாவுது. ரொம்ப தூரம் போவணும்…”
நிகழ்ச்சி தொகுப்பாளர் யோசித்தவாறு, “சரி வாங்க!”
இடம் கொடுத்து நகர, ”அவையோருக்கு வணக்கம்!”
”இரும்மா! ஐயாக்கு வேற ஒரு நிகழ்ச்சி இருக்காம்… அவரு பேசிரட்டும். அதான் கூப்புடறோம்னு சொன்னோம்ல…. இப்டி பறந்தா எப்புடி? அம்புட்டு அவசரம்னா கெளம்பு!” மைக் பிடுங்கப்பட,
ஒரு கோட் சூட்டாளர் எழுந்து வர, தலைகுனிந்தபடி பொங்கிய கண்ணீரைத் துடைத்தபடி விடுவிடுவென வந்தாள்……
”கவிதைத்தராதரம் தெரியாத எடத்துக்கு வந்தது என் தப்புங்க!” நீங்களும் கெளம்பிருங்க… அந்தாளு கூப்புடமாட்டாருங்க… மேடைல பேசற தம்பி சொல்லுச்சு… மணி அஞ்சாவப்போவுது. நிகழ்ச்சி முடிச்சிருவார்னு.
தர்மசங்கடத்தில் நெளிந்தேன். ”வரீங்களா? என்னைய ஏதாச்சும் பஸ் ஸ்டாண்டுகிட்ட விடறீங்களா?”
”இல்லீங்க.. பிரெண்ட்ஸெல்லாம் உக்காந்திருக்காங்க….. பேச கூப்பிட்டா……….”
அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விடுவிடுவென்று கிளம்பினாள்……..
இரவு………… ஒன்பது மணிக்கு ஒரு கால்…. அன்நோன் நம்பர்…. தயங்கியபடி எடுத்தேன்
”அக்கா! நாந்தாங்க… கவியரங்கத்துல மீட் பண்ணோமே….!”
”ஓ! என் நம்பர்…. எப்டி கிடைச்சது?”
”கவியரங்க வாட்ஸ்அப் குரூப்புல இருந்துச்சு. டி.பி பாத்தேன்… அதான் கூப்டேன்…!”
ஓ………….
”நீங்களாச்சும் கவிதை படிச்சீங்களா?”
”ம்… ஆளுக்கு ஒரு ரெண்டு நிமிஷம் கொடுத்தாங்க….. அஞ்சரைக்கு முடிஞ்சிருச்சு…!”
அவள் பேசவில்லை… விசும்பல் கேட்டது….
”சரிங்க வச்சுடறேன்..” வைக்குமுன் , “ஏங்க சாப்டீங்களா?”
”இல்லீங்க………….. நீங்க?”
கையில் அந்த கொய்யாக்காய் வாசனை அடித்துக்கொண்டிருந்தது.. ஏனோ சாப்பிட முடியவில்லை.