Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 6

0 comments
This entry is part 12 of 12 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

கடைசியில் மிஞ்சுவது

சொப்பனமெல்லாம் தகனமாகி
கணங்கள் கலவரத்தைக் கட்டிக்கொள்ளும்போது
பனிக்காலத்து குளிரிலும், வியர்த்துக் கொட்ட வைக்கும் கனவொன்று
உன் இமைகள் மூடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கும்

அழுது வடியும் குழந்தையைத் தோள் மாற்றி தூக்குவதுபோல்
ஒவ்வொரு ஜாமமும், உன் துக்கத்தை நூறு நூறாகச் சுமந்துகொண்டிருக்கும்
ஒருநாள் இராத்திரி
எப்போதும் போல நீ சிந்தவேண்டிய கடைசி கண்ணீர்த் துளி
உன் ஆணைக்காகக் காத்திருந்து பாத்து பாத்து
இமைகளின் மறைவில் வற்றிப்போகும்
உன் இருப்பை இழந்த அதிர்வைக் கேட்ட அறை
துக்கமாய் மௌனம் காக்கும்

சிறிதளவு வெளிச்சத்திற்காகப் பரிதவித்த கணங்கள்,
இருளைத் தவிர்த்துச் சுற்றித் திரிந்த நாட்கள்
வானை எட்டும் உற்சாகங்கள்
மண்ணில் புரளும் துயரங்கள்
எல்லாம்… எல்லாம்… தற்காலிகமே
தேகக் கூட்டிலுள்ள தீபம் அணையும் மட்டுமே
இந்த ரகசியம் தெரியும்முன்பே அனைத்தும் முடிந்துவிடும்

இனி கடைசியில் மிஞ்சுவது
நான்கு தோள்களின் உதவி
ஆறடி வாசஸ்தலம்
பெயருக்கு முன்னொரு நிரந்தரப் “பட்டம்”

Series Navigation<< திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 5

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment